Wednesday, November 5, 2014

தலைமுறைகள்

சற்றுமுன் சன் டிவியில் சினிமா செய்திகள் நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட கலைஞர்கள் பேசும் ஒரு நியூஸ் பைட் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இயக்குனர் ராம், பாடலாசிரியர் முத்துக்குமார், சாதனா உட்பட தேசிய விருது பெற்ற அனைத்து கலைஞர்களும் அதுகுறித்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். தேசிய ஒருமைப்பாட்டுக்கான படமாக தேசிய விருது பெற்ற ‘தலைமுறைகள்’ திரைப்படத்திற்கான விருதை, இயக்குனர் பாலுமகேந்திரா இல்லாத காரணத்தினால், அவரது பேரன் அவருக்கு பதில் பெற்றிருக்கிறார். அதுகுறித்து அச்சிறுவன் பேசுகையில், ‘Its really exciting...Im very happy...I love my Grandfather...I miss him so much...etc...’ என்று அவன் பேசியதில் ஒரே ஒரு வார்த்தை கூட தமிழில் இல்லாமல், முழுக்க முழுக்க ஆங்கிலமயம்தான். இதே போன்று ஆங்கிலத்தில் திளைக்கும் ஒரு பேரனுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து, அவனுக்கு தமிழில் அவசியத்தையும் அருமையையும் உணர்த்தும் தாத்தாவின் கதைகளை பேசிய படம்தான் ‘தலைமுறைகள்’. தாத்தாவாக பாலுமகேந்திராவே விரும்பி நடித்த படமும் அது. அதே தாத்தாவின் பேரன், அதே படத்திற்கான தேசிய விருது குறித்து பேசுகையில், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசியதை பார்ப்பது, எத்தனை வருத்தம் கலந்த நகைமுரண் ??? இந்த சிறுவன்தான் படத்தில் வந்த பேரனோ என்றும், அவனுக்கு தமிழின் அவசியத்தை உணர்த்த முயன்று, முடியாமல் போன இயக்குனர் தாத்தாவின், மனதில் ஆறாமல் இருந்த ஆசைகளின் விதையே, தலைமுறைகள் படமாகியிருக்குமோ என்று கூட உறுதியாக எண்ணத் தோன்றியது.
எப்படியோ, இன்று அச்சிறுவன், தமிழின் தேவையை பற்றிப் பேசிய தலைமுறைகளுக்கான தேசிய விருதோடு, அது குறித்து ஆங்கிலத்திலேயே பேசும்போது, தலைமுறைகள் படத்தின் இறுதிக்கட்டத்தில், இறப்பின் விளிம்பில், பாலுமகேந்திரா, ‘தமிழை மறந்துடாதீங்கப்பா...’ என்று கலக்கமான குரலுடன் கூறும் வார்த்தைகள் தான் காதில் ஒலித்தன.

ஜிகர்தண்டா !!!

சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் அது ஓடாது என்கிற அபத்தமான மூட நம்பிக்கை தமிழ் சினிமாவில் உள்ளது. அந்த மூட நம்பிக்கையை சிரிக்க சிரிக்க சுவாரசியமாக அடித்து நொறுக்கியிருக்கின்றது ஜிகர்தாண்டா.
ஒரு படத்தில் நாயகன், வில்லன், இசை இதுவெல்லாம் கொடுக்கும் ஒரு மாஸான ஃபீலைத் தாண்டி, படம் பார்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பேரின் மனதிலும் இயக்குனரே நாயகனாய் நிழலாடுவது மிக அரிதான ஒரு நிகழ்வு. அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது ஜிகர்தண்டா. கார்த்திக் சுப்புராஜின் திரைமொழி அவரது குறும்படங்களில் இருந்தே மிகவும் பிடிக்கும். அவருக்காகவும் அவரது சாதுர்யமான திரைக்கதையை எதிர்பார்த்து மட்டுமே படத்திற்கு சென்றேன். சிரிக்க சிரிக்க சுவாரசியமான சாதுர்யமான திரைக்கதையோடு பட்டாசாய் வெடித்திருக்கிறது படம். அதைத்தாண்டி சிம்ஹா என்னும் ஒரு கலைஞனையும் கண்டெடுத்திருக்கிறது ஜிகர்தண்டா.
இந்த படத்தை மாற்று சினிமா, மசாலா சினிமா என்றெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை என்றாலும், ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியாக வேண்டும். தற்கால தமிழ் சினிமா சூழலில், வந்துகொண்டிருக்கும் அத்தனை நாயக வழிபாட்டு மசாலா படங்களுக்கும் மத்தியில், உடனே ஒரு மாற்று சினிமா வந்துவிட முடியாது. முதலில் அதற்கு மாற்று சினிமாவை ரசிக்கும் சினிமா ரசனை வளர வேண்டும். அதற்கு முதல்படி, ஹீரோயிச படங்களில் நாயக பிம்பத்தை விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்களை மெதுவாக அதிலிருந்து திசைதிருப்பி, கதையையும் திரைக்கதையையும் ரசிக்க செய்ய வேண்டும். நாயகன் வந்தால், சும்மா ஏதாவது செய்தால் திரையரங்கில் கிடைக்கும் கத்தல் கூப்பாடுகளை, திரைக்கதையின் சுவாரசியங்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். அதுதான் மெல்ல மெல்ல ரசிகர்களின் ரசனையை மாற்றி, ஒருகட்டத்தில் திரைக்கதைதான் நாயகன் என்ற மனநிலைக்கு கொண்டு வரும். அப்போதுதான் திரைக்கதையை மட்டுமே நம்பும் நல்ல சினிமாக்கள் வர முடியும். அதை செய்திருக்கிறது ஜிகர்தண்டா. அந்த வகையில் இதுவொரு முக்கியமான படம்தான். பெரிய ரசிக வழிபாடு உள்ள நாயகர்கள் இல்லை. இன்ட்ரோ பில்டப், லோ ஆங்கிள் ஷாட் என்று எதுவும் இல்லை. ஆனாலும் திரைக்கதையின் ஒவ்வொரு சுவாரசியங்களுக்கும் திரையரங்கு கைத்தட்டல்களில் அதிர்கிறது. ஒரு நல்ல கதையை எடுத்துக்கொண்டு அதை சுவாரசியமான திரைக்கதையால் கட்டியமைத்தால், அதிலேயே திரைக்கதையோடு இயைந்த யதார்த்தமான பல ஹீரோயிசக் காட்சிகள் வரும். நிஜத்தில் அதுதான் ரசிகனை பலமடங்கு கத்த வைக்கும். புல்லரிக்க வைக்கும். க்ளேடியேட்டர் போன்ற படங்கள் இதற்கு உதாரணம். கதையோடு கலந்த ஹீரோயிசம். அந்த ஹீரோயிசத்தை பயன்படுத்தினாலே போதும். வெற்று ஹீரோயிச பில்டப்புகளை காட்டிலும் அது பன்மடங்கு அதிகமான கரகோஷங்களை பெற்றுத் தரும். இந்த படத்தில் சேதுவை பாத்ரூமில் ஒருவன் கொல்ல வரும்போது நடக்கும் காட்சியும், இறுதியில் கார்த்திக் ஒரு சினிமா ஹீரோவிடம் பேசும்போது நடக்கும் காட்சியையும் கூட அதற்கான சிறிய உதாரணங்களாக சொல்லலாம்.


படத்தின் மைய இழை, வதந்திகளில் சொல்லப்பட்ட ‘தி டர்ட்டி கார்னிவல்’ படத்தை ஒத்தே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சினிமா படமெடுக்க கேங்ஸ்டர்களை பற்றி தெரிந்துகொள்ள வரும் ஒருவன் அவர்கள் வாழ்வை அப்படியே எடுத்துவிட, அதனால் அவர்களுக்கு சிக்கல்கள் வர, அவர்கள் இவன்மேல் கோபப்பட, இறுதியில் அவர்களுக்கும் இவனுக்கும் என்ன ஆனது என்பதே டர்ட்டி கார்னிவல் படம். அதே முடிச்சை வேறு திசையில் இருந்து அணுகி, பல மாற்றங்கள் செய்து, அங்கே சீரியசாக முடியும் ஒவ்வொரு விஷயத்தையும் காமெடியாகவே கொண்டு சென்றிருக்கிறது ஜிகர்தண்டா. கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை பார்த்திருக்கிறாரா, பார்த்து அதில் தட்டிய பொறியா ஜிகர்தண்டா என்று தெரியவில்லை. டர்ட்டி கார்னிவல் படத்தின் இன்ஸ்பிரேஷன் போலத்தான் எனக்குப் பட்டது. காப்பியடிப்பதுதான் தவறு, இன்ஸ்பிரேஷன்கள் தவறே இல்லை. அதை திரையில் போட்டிருந்தால் இன்னும் நலம். இன்ஸ்பிரேஷன்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் அப்பட்டமான காப்பிகளுக்கு மத்தியில், இது ஒரு TRUE EXAMPLE OF AN INSPIRATION ஆக இருந்திருக்கும். ஆனால், ஒரு படத்திலிருந்து இன்ஸ்பையர் ஆகி ஒரு படம் எடுக்கையில், எடுக்கும் படம் முந்தையதை விட சுவாரசியமாக இருப்பதுதான் அந்த ஒரிஜினலுக்கு செய்யும் ஆகச்சிறந்த மரியாதையாக இருக்கும். அதை செவ்வனே செய்திருக்கிறது ஜிகர்தண்டா. நிச்சயம், டர்ட்டி கார்னிவலை விட சுவாரசியமாகவும், தரமாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அதன் மூலம், டர்ட்டி கார்னிவலின் திரைக்கதை முடிச்சுதான் என்பதுதான் கொஞ்சம் உறுத்தலாக படுகின்றது. இது, இத்தனை சுவாரசியமான, தரமான, முக்கியமான படம் முழுக்க முழுக்க நம் இயக்குனரின் BRAINCHILD ஆக இருந்திருக்கலாமே என்ற சிறிய ஆதங்கத்தினால் வருவதேயன்றி வேறில்லை.
மாற்றுக்கருத்துக்களும் இருக்கிறது இப்படத்தில். காதல் எபிசோட், ஆரம்பகட்ட திரைக்கதை, இடைவேளையில் சில காட்சிகள், இறுதிக்கட்டத்தில் சில காட்சிகள் என பல இடங்களில் நிறைய செயற்கைத்தனம் நிறைந்திருந்தது. அதைத்தாண்டி, நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்ப நேர்த்தி, திரைமொழி, காட்சியமைப்பு என்று அத்தனையிலும் தேர்ந்த கலைத்திறனுடன் வந்திருக்கும் படம் இது. படத்தின் மேல் உங்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பினும், தயவுசெய்து தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டு அதைப் பற்றி விவாதியுங்கள். இதுபோல் அவ்வப்போது வரும் நல்ல படங்களையும் திருட்டி டிவிடியை போட்டு புதைத்துவிடாதீர்கள். வணிக சினிமா வரையறைக்கும் எல்லைகளுக்குள் இருந்துகொண்டு அதில் புதுமைகளும், ஆல்டர்னேட் சினிமாக்களும் செய்வதோ செய்ய முற்படுவதோ கிட்டத்தட்ட ஒரு மேஜிக்தான். அந்த தந்திரம் கார்த்திக் சுப்புராஜுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கைவந்துகொண்டே இருக்கிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக பரிணாமித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜின் வளர்ச்சியும் வெற்றியும், ஏனோ தெரியவில்லை, அளப்பரிய சந்தோஷத்தையும், மிகப்பெரிய நம்பிக்கையையும் அளிக்கின்றது. வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்புராஜ். இது ஒரு இயக்குனரின் படம் !!!

உடல்நிலை சரியில்லாததால் சில நாட்களாய் அலுவலகத்திற்கு செல்லவில்லை. போனையும் எடுக்கவில்லை. நேற்று காலை இயக்குனரிடம் இருந்து ஃபோன். என்ன சொல்லப் போகிறாரோ என்ற தயக்கத்துடன் போனை எடுத்து ‘சார்...’ என்றேன். ‘சார்..குட்மார்னிங் சார்...இன்னைக்காவது ஆபிஸ் வருவீங்களா சார்...ரொம்ப இல்ல சார்..ஒரு ஒருமணி நேரம் வந்துட்டு போறீங்களா சார். நான் வேணும்னா வீட்ல பெர்மிஷன் கேக்கட்டுமா சார்’ என்று சிரித்தபடியே கேட்டார். அதற்கு மேல் வீட்டில் இருக்க தோன்றவில்லை.
முழு சுதந்திரமும் சுயமரியாதையும் ஒருசேர கிடைக்கும் இடமே சொர்க்கம் (!). ஆகஸ்ட் 5. இன்றோடு எங்கள் இயக்குனருடன் நான் இணைந்து சரியாய் ஒரு வருடம் ஆகிறது. 365 நாளும் தோழனாய், அண்ணனாய், குருவாய் மாறி மாறி அரவணைத்த உங்கள் அன்பிற்கும் பொறுமைக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள் சார்   

கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்

சமீபத்தில் பார்த்த படங்களில் மிக அலாதியாக ஈர்த்தது இந்த படம். ஜிகர்தண்டா போன்ற படங்கள் மிகவும் பிடித்திருந்தாலும் கூட, அவையும் ஒருவகையான ஹீரோயிக் தனங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. ஒரு வித்தியாசம், அவற்றை பெரிய ஹீரோக்களின் கீழே அடகு வைக்காமல், கதையின் நாயகர்களை வைத்து புத்திசாலித்தனமான திரைக்கதையால் நகர்த்திச் சென்றது. ஆனால் இந்த படத்தில், கதாநாயகர்கள் ஏன், கதாநாயகத் தன்மை கூட இல்லை. கதாப்பாத்திரங்கள் செய்யும் வன்முறைகளின் போது தெறிக்கும் இசை இல்லை. ட்விஸ்ட் என்ற பெயரில் செயற்கைத்தனமான திருப்பங்கள் இல்லை. பிரம்மாண்டம் என்ற பெயரில் பணத்தை வீணாக்கவில்லை. தேவையற்ற மசாலாக்கள் இல்லை. தலைப்பிலேயே சொல்லிவிடுவதைப் போல பெரிதாக கதை கூட இல்லை. ஆனாலும் அந்த வஸ்துவிற்கு நேர்மையாய், முழுக்க முழுக்க மிக சுவாரசியமான திரைக்கதையால், புத்திசாலித்தனமான வசனங்களால், புதுமையான சிந்தனையால், அட்டகாசமான காட்சிக்கோர்வைகளால், ஒரு கொண்டாட்டமான திரை அனுபவத்தை தருகிறது இந்த படம்.
ஒரு இயக்குனராக பார்த்திபனை எனக்கு மிகவும் பிடிக்கும். சில படங்களில் அவர் சொல்ல யத்தனித்தது சரியாக சொல்லப்படவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் அதை தவிர்த்து சொல்ல வந்ததை தற்போதைய ரசனைக்கு ஏற்ப, அந்த ரசனையையும், அந்த சினிமாவையும் கிண்டல் செய்தே நேர்த்தியாக தந்திருக்கிறார். இன்ட்யூஷனை வைத்து திரைக்கதை அமைத்த விதம், கதை சொல்லும் விதம் என டைட்டில் கார்டுகள் முதல் என்ட் கார்டு வரை படம் முழுக்க சிதறியிருக்கிறது பார்த்திபனின் ரசனைமிக்க டச். ‘ஹவுஸ்ஃபுல்’ போன்ற தரமான திரைப்படத்தை எடுத்து விட்டு வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட பார்த்திபன் போன்ற இயக்குனர்களுக்கு, தமிழ் ரசிகர்கள் செய்யும் கைம்மாறு, இந்த படத்தை ஹவுஸ்ஃபுல் ஆக்குவது தான். கதை இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்கும் குப்பைகளை விட, கதை இல்லை என்று சொல்லிவிட்டு வந்திருக்கும் இந்த படம் ஆயிரம் மடங்கு தகுதியானது.
தமிழில் நல்ல சினிமாக்கள் வருவதற்கான பாதையில் இன்னொரு புதிய பாதை இது. சினிமாவைப் பற்றி படம் எடுத்தால் ஓடாது என்ற அந்த அசட்டு மூடநம்பிக்கையை சமீபத்தில் தகர்த்த இரண்டாவது படமாக இது இருக்கும் என நம்புகிறேன். இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பெரிய ஹீரோக்கள் நடித்து வரும் படம் குப்பை என்று தெரிந்தாலும் கூட, அதை தான் பார்த்து உறுதிப்படுத்துக் கொள்ள துடிக்கும் அந்த மனநிலை தான் அதுபோன்ற படங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம். இது போன்ற படங்கள் நன்றாக இருக்கிறது என்று கூவிக்கூவி பேசினாலும், அப்புறம் பாத்துக்கலாம் என்று தவறவிடுவதுதான் இதுபோன்ற முயற்சிகளுக்கு நாம் செய்யும் துரோகம். நல்லதோ கெட்டதோ, நாம் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று மாஸ் மசாலா படங்களுக்கு கொடுக்கும் அந்த சலுகையை இந்த படத்திற்கு கொடுங்கள். நிச்சயம் இந்த படம் உங்களை ஏமாற்றாது.

அம்மா




மிகச்சரியாய் இரண்டு வாரத்திற்கு முன்பு. இதே செவ்வாய்க்கிழமை. இதே நேரம். அப்பாவும் அண்ணனும் துணைவியும் அலுவலகத்தில். எனக்கு சீக்கிரம் வேலை முடிந்து வந்துவிட்டேன். வீட்டில் நான் மட்டும் இருக்கிறேன். இதே முகநூலில் எங்கள் இயக்குனரிடம் நான் இணைந்து ஒரு வருடம் ஆனதைப் பற்றிய புகைப்பட பதிவை ஏற்றிக்கொண்டிருந்தேன். ஹாலில் படுத்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா.
‘சந்துரு...இங்க வாடா...’
‘சொல்லும்மா...’
‘இங்க வாடா...’
எழுந்து சென்றேன்.
‘திடீர்னு நெஞ்சு படபடனு அடிச்சுக்குதுடா. தொட்டுப் பாரேன். தோள்பட்டை, கை லாம் வலிக்குது’
என்று சொல்லி அழத் துவங்கினாள்.
‘அய்ய...இதுக்கு ஏன்மா அழுகுற...ஒன்னுமில்ல...வா ஹாஸ்பிட்டல் போய்ட்டு ‘வந்துரலாம்’’
என் மொத்த வாழ்வையும் புரட்டிப்போடப்போகும் நிமிடம் துவங்குகிறது என்பதை அப்போது சத்தியமாக நான் அறிந்திருக்கவில்லை. உடனே அருகிலிருக்கும் 24 மணி நேர மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றேன். அங்கே மருத்துவர் இல்லை. அடுத்ததாய் இரண்டு மருத்துவமனைகளைத் தாண்டி கிண்டி செயிண்ட் தாமஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். வண்டியில் செல்லும் போது, தோளை இறுகப் பற்றியபடி வந்தாள்.
‘இன்னும் ரொம்ப தூரமாடா..’
மருத்துவமனைக்குள் நுழையும் போது எப்போதும் போலல்லாமல் என் கைகளை அவ்வளவு இறுக்கமாக பிடித்தபடி உள்ளே நுழைந்தாள். மருத்துவர் என்ன செய்கிறது என்று கேட்டபோதும், பதில் சொல்லிவிட்டு அழத் துவங்கினாள். என்னை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு பரிசோதனைகள் செய்ய கதவை சாத்தினார்கள். அதன்பின் எல்லா கதவுகளும் அடைத்துப் போயின.
‘இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியா’ என்ற கேள்விகள் நிஜத்தில் வலிதருகின்றன. இன்னுமா? கடந்து போகும் நாட்களில் கரைந்து போகிறவளா அம்மா? என் வாழ்வின் இறுதி நொடி வரையில், அம்மாவின் இறுதி நொடிகளை என்னால் மறக்க இயலாது. அப்பாவும் அண்ணனும் அன்புவும் கடைசியாக அம்மாவை பார்க்க முடியவில்லையே என்று இன்றுவரை வருந்துகிறார்கள். சந்தோஷப்படுகிறேன். நல்லவேளை அவர்கள் இல்லை. இந்த பெருந்துயரம் என்னோடு போகட்டும். அந்த நொடிகளில் இருந்திருந்தால் அவர்களால் என்றுமே வெளியே வந்திருக்க முடியாது. காலையில் பார்த்த அம்மா, இரவில் இறந்துபோனதாக மட்டுமே இருக்கட்டும். சில நிமிடங்களுக்கு முன் தெம்புடன் பேசிக்கொண்டிருந்த அம்மா, சில நொடிகளுக்கு முன் சிரித்துக் கொண்டிருந்த அம்மா, கைப்பிடித்து நடந்து வந்த அம்மா, அடுத்த நிமிடம் உயிரற்று இருப்பதை பார்க்கும் நிலை நல்லவேளை அவர்களுக்கு வரவில்லை. ஆறுதல் கூறுபவர்கள் அம்மா இறந்தபின் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று கூறும்போதெல்லாம் மனம் அதை உள்ளுக்குள்ளேயே எடுக்க மறுக்கின்றது. நான் இன்னும், அவளோடு இருந்த இறுதி நிமிடங்களில் இருந்தே வெளியே வரவில்லை. அன்று வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நான் பேசியதும், அவளுக்கு பிடித்த வேர்க்கடலை வாங்கிக் கொடுத்ததும், அதை சாப்பிட்டபடி அவள் டிவி பார்த்ததும், இறுதியாய் அவள் பேசிய வார்த்தைகளும், அவள் கைபிடித்த ஸ்பரிசமும், அவள் அழுகையும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும். என்னை அந்த நொடியிலேயே நிறுத்தி வைத்திருக்கிறது. அதைத் தாண்டி வரவே முடியவில்லை. இன்னும் அந்த நிமிடங்களுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் அந்த மரணத்தில் நிஜம் என் மண்டைக்குள் ஏறவில்லை. அதெப்படி ஒரு நொடியில் வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போகும்? உணர்வுக்கும் சிந்தனைக்கும் இடையே பெரும் போராட்டமே நடக்கிறது. அம்மா இறந்துவிட்டாள் என்று அறிவு மனத்திடமும், முட்டாளே...அம்மா எப்படி இறப்பாள் என்று மனம் அறிவிடமும் தினம் சண்டை பிடிக்கிறது. சமயங்களில் வாழ்வின் மேல் உள்ள பற்றும் நம்பிக்கையுமே ஆட்டம் காண்கிறது.
நிஜத்தில் அம்மா ஒரு குழந்தை தான். ‘நேத்து அந்த முனை கடைல இந்த மாவு வாங்குனேன்டா. என்னமா பொங்குச்சு தெரியுமா’ என்று கண்சிமிட்டும், சிறு சிறு விஷயங்களிலேயே ஆச்சர்யம் கொள்ளும் என் தெய்வப்பெண். யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களிடம் மணிக்கணக்கில் அமர்ந்து பேசி, அவர்கள் மகிழ்ச்சியை ஆசையை பகிர்ந்துகொள்ளும் குழந்தை. ’என்ன ஆசைகள் இருந்துவிட்டது அம்மாவிற்கு? வேர்க்கடலை வாங்கிக் கொடுடா...மிட்டாய் வேணும்...சன் டிவி தெரியனும்...சமையல் புக் வேணும்...ஒரேயொரு தங்கநகை போடனும்...ஒரேயொரு பட்டுப்புடவை வாங்கனும்...இதெல்லாம் ஆசைகளா? அடிப்படைகள் தானே? அம்மா எங்களுக்கு செய்ததில் ஒரு மடங்காவது அவளுக்கு செய்திருக்கிறோமா என்ற குற்றவுணர்வுதான் இன்றுவரை வாட்டி வதைக்கிறது. அம்மாவுக்கென்று எதுவுமே பெரிதாக செய்ததில்லை. இருந்ததுமில்லை. அம்மா தான் தேய்ந்து தேய்ந்து செய்து வந்திருக்கிறாள். நான் குறும்படம் எடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை, சென்ற வருடம் அப்பாவின் மருத்துவ செலவுகளுக்கு செலவழித்துவிட்டு, படம் எடுக்க பணம் இல்லாமல் தவித்து நின்றேன். அந்த பணம் அந்த குறும்படம் எடுக்க என்னை நம்பி, ஒருவர் தந்த பணம். அந்த குற்றவுணர்வு வேறு. வீட்டில் யாருடனும் நான் சரியாக பேசவில்லை. அடுத்த நாள், என் கையில் படமெடுக்க வேண்டிய மொத்த பணத்தையும் தந்தாள் அம்மா. தன்னிடமிருந்த ஒரேயொரு தங்க செயினையும் அடகுவைத்து அந்த பணத்தை வாங்கியிருக்கிறாள். என்ன பேச? இன்னும் அந்த நகையை நான் மீட்கவில்லை. நிச்சயம் அதை மீட்டுவிடுவேன். ஆனால் யார் கழுத்தில் போட? இறந்த நாள் காலையில் கூட, ‘கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்து வச்சு உனக்கு ஒரு ஃபுல் ஆட்டோமேட்டிக் வாஷிங்மிஷின் வாங்கிரலாம்மா’ என்றபோது, ‘அந்த நகையை இப்போதைக்கு மீட்க முடியாதாடா’ என்றாள். சீக்கிரம் மீட்கனும் என்று நினைத்துக்கொண்டே, நான் கோபப்படுவது போல் முறைத்ததும், ‘சரி விடு...அப்புறம் பாத்துக்கலாம்...’ என்று சென்றுவிட்டாள். அவள் கோபப்பட வேண்டிய விஷயத்திற்கு நான் கோபப்பட்டும் கூட, அமைதியாக சிரித்தபடி சென்றுவிட்டாள். அதுதான் அம்மா. அதெப்படி அம்மாக்களால் மட்டுமே சற்றும் சுயநலம் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத பேரன்பை எப்போதும் தரமுடிகிறது. உலகில் தலைசிறந்த சித்தாந்தம் இந்த அன்புதான்.
என் காதலைப் பற்றி தெரிந்து கொள்ள என்னை விட ஆர்வமாக இருந்த குழந்தை அம்மா. அன்புவை முதன்முதலில் வீட்டிற்கு அழைத்து வந்து ‘இதான்மா உன் மருமக’ என்றபோது ‘அதான் தெரியுமே’ என்று சிரித்தபடி அவளை அரவணைத்த குழந்தை. அதிலிருந்து என் காதலில் ஏற்பட்ட சிக்கல்களில் எனக்குத் தெரியாமல் அழுது, இறுதியில் என் திருமணத்தில் எல்லாரையும் விட மனம் பூரித்து மகிழ்ந்த குழந்தை. ஒருநாள் கூட என் துணைவியை மருமகளாய் பார்த்ததே இல்லை. தன் செல்ல மகளாகவே பார்த்து பார்த்து கொஞ்சினாள். இதுவரையில் என்னிடம் அவளைப் பற்றி ஒரு குறை கூட சொன்னதில்லை. ஏதேனும் சண்டை எங்களுக்குள் வந்தால், ஏன்டா அவட்ட சண்டை போடுற என்று என்னைத்தான் கேட்டிருக்கிறாள். இது போன்ற ஒரு அம்மாவை பரிசாக கொடுத்ததே, என்னை நம்பி வந்த அன்புவிற்கு நான் தந்த பெரும் கைம்மாறு என்று கருதுகிறேன். நல்ல பெண்ணிடம் தான் என்னை ஒப்படைத்திருக்கிறாள் என்ற திருப்தி, நல்ல அன்பான இடத்தில் தான் வேலைக்கு போகிறேன் என்ற நிறைவு, மௌன மொழியின் தொடர் அங்கீகாரங்கள் மூலம் நிச்சயம் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை, இவைதான் இப்போதும் என்னை குழந்தையாய் நினைத்து ஊட்டி வளர்த்த அம்மாவிற்கு, என் வாழ்க்கை சார்ந்து நான் தந்த பரிசுகள். என் திருமணத்திற்கு பின்புதான் ஒரு குடும்பமாக இன்னும் கூடி மகிழ்ந்து வாழ ஆரம்பித்தோம். ஒரு அழகான குடும்ப வாழ்க்கைக்குள் சிரித்தபடியே நுழைந்து கொண்டிருந்தோம். காதல், சினிமா, குடும்பம் என எல்லாவற்றிலும் மிகுந்த மனநிறைவுடன், எந்த குறையும் இல்லாமல் அத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். எந்த கவலைகளும் புகார்களும் இல்லாமல். ஒவ்வொருவரும் எங்கெங்கோ இருந்தாலும், எல்லாரையும், மொத்த சொந்தங்களையும் ஒருங்கிணைக்கிற ஒற்றைப் புள்ளி அம்மா தான். இன்று எங்கள் மொத்த குடும்பத்தின் ஆதார ஸ்ருதி, உயிர்நாடி, மைய இழை மொத்தமாக அறுந்துவிட்டது.
இப்போது நானே வீட்டு வேலைகள் செய்கிறேன். தோசை சுடுகையில் கை சுட்டுக் கொள்ளும் போதும், பாத்திரம் கழுவுகையில் நெடுநேரம் நீர் பட்டு விரல்கள் வெளிறிப் போகும்போதும், வலியை விட அம்மாவின் நினைவுகளே மூளைக்கு முதலில் செல்கின்றன. ஆத்திகனாய் இருந்தால் கூட, அம்மா சாமியிடம் சென்றிருக்கிறார், சொர்க்கத்தில் இருக்கிறார், என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார், அவர் ஆன்மா வாழ்கிறது என்று சமாதானப்பட்டுக் கொள்ளலாம். நாத்திகனாய் வளர்ந்து விட்டேன். அதற்கும் தடையேதும் கூறவில்லை அவள். சுயத்தோடு என்னை வளர்த்து விட்டாள். பெயரில் மட்டும் பணத்தை வைத்துக்கொண்டு, இதுவரையிலும் முழுக்க முழுக்க கஷ்டத்திலேயே வாழ்ந்த அம்மாவிற்கு எல்லாம் செய்யக்கூடிய நிலைக்கு நாங்கள் வந்துகொண்டிருக்கும் போது, எனக்கு எதுவும் வேண்டாம், நான் இந்த கஷ்டத்திலேயே போறேன் என்று போனது போல் இருக்கிறது அவள் மறைவு. ஏ.சி வாங்க வேண்டும் என்று ரொம்ப ஆசை அம்மாவிற்கு. இறுதியில், அவள் இறந்தபின் தான் அவளை ஏ.சி பெட்டியில் வைக்க முடிந்தது.
வீட்டிற்கு நண்பர்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்று அம்மாவிற்கு அத்தனை ஆசை. வந்திருந்த எல்லோரும் சொல்லி சொல்லி அழுதது, ‘போன வாரம் தான போன் பண்ணாங்க. வீட்டுக்கு வாங்கன்னு கூப்டுகிட்டே இருந்தாங்க....இரண்டு நாள் முன்னாடிதாங்க போன் பண்ணாங்க..எப்ப வீட்டுக்கு வர்றீங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாங்க’. என் நண்பர்களோ, அண்ணன் நண்பர்களோ, கட்சித் தோழர்களோ, பத்திரிக்கை நண்பர்களோ யார் வந்தாலும் எத்தனை பேர் வந்தாலும் சரி, தன் சொந்த பிள்ளைகள் போல் பார்த்து பார்த்து செய்பவள் அம்மா. ஒருவரை இல்லையென்று சொல்ல சொல்லுங்கள்? அத்தனை பிள்ளைகள் என் அம்மாவிற்கு. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், அம்மாவிற்கு பழக்கமில்லாத நண்பர்கள் வீட்டிற்கு முதல் முறை வரும்போதே, அவர்களையும் என்னைப் போல் ஏற்றுக்கொண்டதெப்படி? எங்கள் வீட்டிற்கு ஒரு நிமிடம் நீங்கள் வந்துசெல்லாம் என்று வந்தால் கூட, சாப்பிடாமல், குறைந்தபட்சம் ஒரு காப்பியாவது குடிக்காமல் வெளியில் போக முடியாது. இது வீட்டிற்கு வந்த அனைவருக்கு தெரியும். பலநேரங்களில் நண்பர்கள் அதிகமாக வந்துவிட, தனக்கு வைத்திருந்ததை அவர்களுக்கு சிரித்தபடி பரிமாறிவிட்டு, பழைய சோற்றை தின்று பசியாறியிருக்கிறாள் அம்மா. அம்மா. ஒருமுறை...ஒரேயொரு முறை நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தால் போதும். அம்மாவை உங்களுக்கு அவ்வளவு பிடித்துப் போகும். அம்மாவை உங்களால் மறக்க முடியாது. மீண்டும் வீட்டிற்கு எப்போது வருவோம் என்று தோன்றும். அவள் மரணத்தை உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுவரையில் எங்கள் வீட்டிற்கு நீங்கள் வந்திருக்கவில்லையென்றால், அந்த தேவதைப் பெண்ணை நீங்கள் தவறவிட்டீர்கள் என்று சொல்வேன். முன்பிருந்த வீட்டில், நண்பர்கள் அதிகம் வரக்கூடாது என்று சொன்னதால்தான், இந்த வீட்டிற்கு மாறி வந்தோம். அம்மா இறப்பிற்கு அத்தனை அத்தனை நண்பர்கள் குமிந்து கொண்டே இருந்தார்கள். வந்தவர்களை பார்த்து சிரிக்காமல், அவர்களை உபசரிக்காமல் அம்மா இருந்தது, அன்று மட்டும்தான். இறக்க தகுதியற்றவள் அம்மா.
வருவோர் போவோர் எல்லாம், அந்த ஹாஸ்பிட்டல்ல சேத்துருந்தா காப்பாத்திருக்கலாம். இங்க கூட்டு போயிருக்கனும். வீட்டுக்கு மேல டாக்டர் இருந்துருக்காரு. அவர்ட்ட சொல்லியிருந்தா ஒரு மாத்திரை கொடுத்துருப்பாரு. காப்பாத்தியிருக்கலாம் என்று மாறி மாறி சொல்கையில் மனம் செத்து செத்து பிழைக்கின்றது. முதலிலேயே அந்த ஹாஸ்பிட்டல் கூட்டு போயிருந்தா காப்பாத்திருக்கலாமோ, கொஞ்சம் வேகமா வண்டி ஓட்டிருந்தா காப்பித்திருக்கலாமோ, முதல் ஹாஸ்பத்திரில டாக்டர் இருந்தா காப்பாத்தியிருக்கலாமோ, ரிசப்சன் ல ஒரு நிமிசம் காத்திருக்காம இருந்தா காப்பாத்திருக்கலாமோ , மேல் வீட்ல டாக்டர் இருந்திருக்காரு, அவர்ட்ட சொல்லியிருந்தா காப்பாத்திருக்கலாமோ, கொஞ்ச நாள் முன்னாடி மெடிக்கல் செக் அப் பண்ணிருந்தா காப்பாத்திருக்கலாமோ என்று, அந்த நிமிடத்திற்கான வெவ்வேறு பரிமாணங்களை மட்டும்தான் இதுவரை சிந்தித்துகொண்டிருக்கிறேன். விதி என்ற ஒன்றை நான் நம்ப மாட்டேன். ஆனால் ஏன் முதல் மருத்துவமனையில் டாக்டர் இல்லை? ஏன் தாமதமானது? ஏன் எனக்கு மேல்வீட்டில் போய் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. தெரியவில்லை. ஆனால், சத்தியமாக, நான் அம்மாவை காப்பாற்றத்தான் நினைத்தேன். அவள் இறந்து போவாள் என்று இப்போது கூட நான் நம்பவில்லை. அப்போது எப்படி எனக்கு தெரியும்? இருந்தாலும் வாட்டி வதைக்கும் இந்த குற்றவுணர்ச்சியல் இருந்து இதுவரை வெளியில் வரமுடியவில்லை.
மரணம் இயற்கை என்பது எனக்கு புரியும். யதார்த்தம் தெரிந்திருக்கிறேன். இருந்தாலும் அடித்து சொல்கிறேன். அம்மா இப்போது இறந்திருக்கக் கூடாது. இறந்திருக்கவே கூடாது. என் குழந்தையை பார்த்து, வளர்த்து, அண்ணன் திருமணத்தை முடித்து, என் திரைப்படங்களை பார்த்து, அவள் ஆசைப்பட்ட வீடு முதல் எல்லாவற்றையும் நாங்கள் அவளுக்காய் செய்து முடித்து, அவள் சந்தோஷப்பட்L வாழ்ந்திருக்க வேண்டும். நிச்சயம் இது இயற்கையாய் நிகழ்ந்த மரணம் என்று என்னால் சமாதானம் ஆக முடியவில்லை. எங்கோ நிச்சயம் தவறு நிகழ்ந்திருக்கிறது. அம்மாவிற்கு முன்பே இதுபோல் சமிக்ஞைகள் வந்து எங்களிடம் சொல்லாமல் விட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் நான் தாமதமாக கொண்டு சென்றிருக்க வேண்டும். இல்லையென்றால் வேறு ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும். என்றுமே இதை என்னால் ஏற்க முடியாது. எந்த சமாதானங்களும் காதுக்கு ஏறவில்லை. ஆறுதல்களுக்கப்பாற்பட்ட துக்கம் ஆட்கொண்டிருக்கிறது. அடுத்து நாம் முன்னேற வேண்டும். மற்றவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என அத்தனை பொறுப்பும் தெரிகிறது. அதையும் செய்துகொண்டேதான் இருக்கிறேன். ஆனாலும் என்னால் மீள முடியவில்லை. அத்தோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இன்றிலிருந்து அலுவலகம் செல்லத் துவங்கிவிட்டேன். வெளியில் சிரித்து, மகிழ்ந்து, இயல்பாக வாழ முயன்று கொண்டிருக்கிறேன். இரவுகளில் கண்ணீரோடு புரண்டுகொண்டிருக்கிறேன். இதுவரை வாழ்வில் அனுபவித்தில்லாத பெருவலியியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சினிமா சோகப்பாடல்களை போல, ஐந்து நிமிட மாண்டேஜ் காட்சிகளில் மரணத்தை கடந்து போக முடிவதில்லை. இது வாழ்க்கை. கடக்க கடினமாகத்தான் இருக்கிறது. நீயாச்சும் இருந்தியே இல்லனா எவ்வளவு கஷ்டமாயிருக்கும், அம்மா வலியில்லாம போனாங்கன்னு சந்தோசப்படு என்று அம்மாவின் மரணத்தில் இருக்கும் சிறுசிறு ஆறுதல்களை சொல்லி மற்றவர்கள் சமாதானப்படுத்த முயலும்போதும், ஏன் போனாங்க? என்றுதான் திருப்பி கேட்க தோன்றுகிறது.
ஒரு நாளும் அம்மா இல்லாத வீட்டில் நாங்கள் இருந்ததில்லை. எனக்கெல்லாம் வீடு என்றாலே அது அம்மா தான். இப்போது அம்மா இல்லாத வீடு. மரண சூன்யம். அகண்ட வெறுமை. என்ன செய்தாலும், அந்த வெறுமையை எப்போதும் நிரப்ப முடியாது. அம்மா இல்லாத இந்த வீடு வெறும் கட்டடமாகத்தான் இருக்கிறது. NOW ITS JUST A HOUSE. NOT A HOME. எனக்கு அம்மாவின் ஸ்பரிசம் வேண்டும். அவள் மடியில் தூங்க வேண்டும். அவள் கைபிடித்து விளையாட வேண்டும். அவளுக்கு கால் பிடித்து விட வேண்டும். கொஞ்ச வேண்டும். சண்டையிட வேண்டும். கோபப்பட வேண்டும். சிரித்து கதை பேச வேண்டும். அம்மா சமையலை சாப்பிட வேண்டும், அம்மா எனக்கு ஊட்டி விட வேண்டும். அம்மாவுக்கு முத்தம் தர வேண்டும். இப்படி எத்தனையோ வேண்டும் வேண்டும். எல்லாவற்றையும் விட, அம்மா இருக்கும் வரை, பாசத்தை கூட முழுமையாக காட்ட வெட்கப்பட்டு வெட்கப்பட்டு தயங்கி தயங்கி வெளிக்காட்டிய என்னை அவள் புரிந்திருக்க வேண்டும். வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து உலக பொருளாதாரம், இந்தியாவை சீரழிக்கும் பொருளாதார கொள்கைகள் குறித்த காட்டாமான கட்டுரையை எழுதிக் கொண்டிருப்பார் அப்பா. அடுத்த அறையில் அம்மா, நாளை மளிகை பாக்கியை தர எப்படி பணம் புரட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார். யோசித்துப் பார்த்தால், அப்பா உலக பொருளாதாரத்தை பற்றி எழுத முழுக்காரணமும், வீட்டுப் பொருளாதாரத்தை சீரழியாமல் அம்மா பார்த்துக்கொண்டதுதான். எனக்கு வீட்டில் மிகவும் பிடித்ததே இந்த முரணும் அதைத் தாண்டி அப்பா மேல் அம்மா கொண்ட அளவற்ற நேசமும் தான். இனி அதை எங்கு காண?
முதல்நாள் இரவு என்னோடு சிரித்து பேசி, வீட்டில் நடமாடி, கைப்பிடித்து நடந்து அம்மாவை, அடுத்த நாள் மதியம் ஒரு சட்டியில் சாம்பலாக்கி அடைத்து என் கைகளில் தந்தபோது, உறைந்து போய் உடைந்து உதிர்ந்தது மனது. அப்பா...அந்த நிமிட வலியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் எப்போதும் இருக்காது. அந்த நிமிடத்தை எப்படி கடந்தேன் என்று இன்றுவரை தெரியவில்லை. நல்லவேளை உறைந்து போனதால் மட்டும் கடந்து தப்பித்தேன். ச்சே. எப்பேற்பட்ட மனுஷி அம்மா. அம்மாக்கள் எப்போது எது கேட்டாலும் உடனே வாங்கித் தந்துவிடுங்கள். உங்களால் இயலாவிட்டால் கூட முயன்று வாங்கித் தந்துவிடுங்கள். பெரும்பாலும் நம்மால் இயலாதவற்றை அம்மாக்கள் கேட்பதேயில்லை. அப்போதே வாங்கித் தந்துவிடுங்கள். பின்னாட்களில், வாங்கித் தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போதும், உங்களிடம் வசதிகள் வரும்போதும், வாங்கித் தந்து நாம் அழகு பார்க்க அம்மா இல்லையெனில் அந்த வலி உயிரை பிய்த்துக் கொல்கிறது. தாங்கமுடியவில்லை. அதை தயவுசெய்து அனுபவித்து விடாதீர்கள்.
அம்மா இறந்தாலும், எங்கள் குடும்பத்திற்கு இருக்கும் அத்தனை பெரிய நட்புலகத்தையும் ஒன்றுசேர்த்து எங்களுக்கே மீண்டும் உணர்த்திச் சென்றிருக்கிறாள். எங்கெங்கிருந்தோ கிளம்பி வந்த நண்பர்களில் இருந்து, நண்பர்களாய் மாறிப் போன உறவினர்களில் இருந்து, எனக்கு ஆறுதல் செய்ய போன் செய்து, அதுமுடியாமல் கதறி அழுத நண்பர்களில் இருந்து, கட்சித் தோழர்களில் இருந்து, தீக்கதிர் தோழர்களில் இருந்து, முகநூலில் அம்மாவிற்காக அஞ்சலி செய்து எங்களுக்கு ஆறுதல் சொன்ன நண்பர்களில் இருந்து, நிலையறிந்து செலவுகளுக்கு உடனடியாக பணம் தந்துகொண்டிருந்த நண்பர்களில் இருந்து, எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க என்று தொடர்ந்து சொல்லி தைரியம் சொல்லிய நண்பர்களில் இருந்து, இரவிலிருந்து இப்போது வரை, எங்களை மாறி மாறி பார்த்துக் கொள்ளும் நண்பர்கள் வரை, அம்மாவுக்காக வெம்பி அழுத நண்பர்கள் தோள்களில் தான் இப்போது வரை சாய்ந்து கொண்டிருக்கிறோம். அம்மா இறந்த அடுத்த வாரம் கொடைக்கானலில் எங்கள் பட ஷுட்டிங். எப்படி எங்கள் இயக்குனரிடம் வரமுடியாது என்பதை சொல்வது என்று தயங்குகையில், அவரே அழைத்து, ‘இத என்னால புரிஞ்சுக்க முடியாதா? நீ வீட்ட பாரு. நாங்க போய்ட்டு வந்துடறோம். சென்னை ஷுட்டிங்க்கு தயாரா வா’ என்றார். இப்படி எல்லா திசைகளில் இருந்தும் நண்பர்கள் அரவணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நன்றியை விட பெரிய வார்த்தை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள், என் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும். உண்மையில், நண்பர்கள் எங்கள் குடும்பத்தை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே உண்மை.
அம்மா இறந்தபின் அவளிடமிருந்து கழட்டப்பட்ட நகைகளை பார்த்து என் துணைவி அழுதுகொண்டே கேட்டாள். ‘இந்த கம்மல் தங்கமா…இல்ல கவரிங்கா?’ ‘செயின தான் அடகு வச்சுருக்காங்க ல. அப்ப இது கண்டிப்பா தங்கமாத்தான் இருக்கும்’ என்று சொன்னேன். அடுத்த சில மணி நேரங்களில், அம்மாவின் செலவு கணக்கு நோட்டை பார்த்து புரட்டிக்கொண்டிருந்தோம். அதில், ஒரு பக்கத்தில் அடி ஓரத்தில், ’27 ஜுலை அன்று கம்மல் அடகு வைக்கப்பட்டது. வட்டி 90 ரூபாய்’ என்று எழுதப்பட்டிருந்தது. அண்ணனின் பெட்ரோல் செலவுகளுக்காக அடகு வைத்திருக்கிறாள். நெஞ்சடைத்தது. இந்த அதிர்ச்சி, இயலாமை, குற்றவுணர்வு, கண்ணீர், கோபம், சாகும் வரை என்னை துரத்தும். சொந்த வீடு, நகை, பட்டுப்புடவை என எல்லா ஆசைகளும் இருந்தாலும், எங்கள் சந்தோஷத்தை மட்டுமே பேராசையாய் கொண்டு வாழ்ந்தவள் அம்மா. ஓராயிரம் இருக்கிறது சொல்வதற்கு. அவள் ஒரு முழுமையான ‘அம்மா’ வாக வாழ்ந்தாள். இதை மீறி என்ன சொல்ல முடியும் ? அப்பா அழுது பார்த்தது புதிது. அம்மா இல்லாத அப்பா மிக புதிது. அம்மா இல்லாத நாங்கள் விசித்திரம். அம்மா இல்லாத வாழ்க்கை ?காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்கள். காலப்போக்கில் அம்மா இல்லாமல் தான் நாங்கள் ஒவ்வொரு விஷயமும் செய்யப்போகிறோமா, சிரிக்கப் போகிறோமா, வாழப்போகிறோமா, சினிமாவிற்கு போகப்போகிறோமா, குழந்தை பெறப் போகிறோமா, அண்ணன் திருமணத்தை நடத்தப் போகிறோமா என்பதை நினைத்தாலே மனம் கனக்கிறது. அம்மாவை விட்டுவிட்டு, நாங்கள் எல்லாரும் ஒன்றாக இருப்பதை போல் இருக்கிறது. இசை, பயணம், நண்பர்கள் என முடிந்தவரை நானும் மனத்தை திசைதிருப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் மீண்டும் வட்டமடித்து அம்மா மடியிலேயே வந்தமர்ந்து விடுகிறது. வீட்டில் தனியே அமர்ந்து கொண்டிருக்கிறேன். காபி குடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ‘மா..காப்பி’ என்றழைக்க உதடு போகிறது. பதிலும் காப்பியும் வராதில்லையா? அம்மா இல்லை என்ற நினைப்பே நெஞ்சடைக்கிறது. மனம் நம்ப மறுக்கிறது. கண்ணில் நீர் வழிகிறது. மனம் முழுக்க அவளை தேடுகிறது. இனி நான் அம்மா இல்லாத பிள்ளையா? இனி அம்மா இல்லவே இல்லையா? ஏன்? எப்படி இது சாத்தியம்? எல்லோரையும் அன்பால் அரவணைக்க மட்டும்தானே செய்தாள் அம்மா?
அம்மாவின் புகைப்படத்தை பெரிய ஃப்ரேமில் இட்டு ஹாலில் வைத்திருக்கிறோம். எங்கிருந்து பார்த்தாலும் அம்மா என்னை பார்ப்பது போலவே உள்ளது. மோனலிசா ஓவியம் மட்டுமல்ல. நமக்கு உயிரான எவருடைய புகைப்படத்தையும், அந்த அறையின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும், அவர்களின் கண்கள் நம்மையே தான் பார்த்தபடி இருக்கும் என்று எனக்கு அதன்பின் புரிகிறது. அம்மாவின் அந்த கண்களை தானம் செய்திருக்கிறோம். அடுத்து வரும் வருடங்களில் அந்த இரண்டு கண்களும் யார் யாரிடம், உலகின் எந்தெந்த மூலைகளுக்கு செல்லப் போகிறதோ தெரியவில்லை. அம்மா ஆசைப்பட்டபடி, நிச்சயம் நான் படம் எடுப்பேன். வெல்வேன். வாழ்வேன். வரப்போகும் நாட்களில், என்றோ ஒரு நாள், என் சினிமாவில் நான் வெற்றி பெற்று, எனக்கான மேடைகளில் நான் நிற்கும்போது, என் அத்தனை வெற்றிகளையும் அங்கீகாரங்களையும் வாழ்த்துக்களையும் விருதுகளையும், மொத்தமாக அம்மாவிற்கு நான் சமர்ப்பிக்கும் போது, எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அந்த இரண்டு கண்களும் என்னை பார்த்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். அப்படி பார்த்தால், அப்போது அந்த கண்கள் கலங்கும்தானே ???

மெட்ராஸ் & ஜீவா

ஒடுக்கியோர் குலப்பெருமையை மட்டுமே ஃபேண்டசைஸ் செய்து திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி அதில் சூழ்ந்துள்ள அரசியலை பேசி, சமூக அரசியலை வலியுறுத்திறது ‘மெட்ராஸ்’.
நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை சேர்ந்த ஒரு அமைப்பை, அதில் வேர் பரப்பியிருக்கும் சாதிவெறியை, அப்பட்டமாக தோலுரித்து கேள்வியெழுப்பும் தைரியமான படம் ‘ஜீவா’. அரசாங்க அமைப்பு ஒன்றை நோக்கி இத்தனை நேரடியாக வேறெந்த படமும் கேள்வியெழுப்பியதில்லை.
இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தது எத்தனை அழகான யதார்த்தம். இரண்டு படங்களுமே வணிக ரீதியாக வெற்றி பெற்றிருப்பது ஆரோக்கியமான ஒன்று. கேட்க வேண்டிய இடத்தில் இந்த படங்கள் எழுப்பும் கேள்விகள் ஒலிக்குமாயின் நிச்சயம் அது ஒரு பெரும் மாற்றத்திற்கான முதல் படியாக இருக்கும். இரு படங்களிலும் உங்களுக்கு பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் குறைகளும் இருக்கலாம். அத்தனையையும் படங்களை பார்த்துவிட்டு கேள்வியாக எழுப்புங்கள். விவாதத்தை தூண்டுங்கள். ஒரு பெரும் உரையாடல் நடக்கட்டும். என்னளவில், மெட்ராஸ் ஜீவா இரண்டு படங்களை பற்றி, அவை பேசும் அரசியலைப் பற்றி எழுப்பப்படும் எந்த ஒரு கேள்வியும், தொடரப்படும் எந்தவொரு விவாதமும், பேசப்படும் எந்தவொரு உரையாடலும், நிச்சயம் நாளைகளின் சினிமா சமூக அரசியலை வீரியமாக தைரியமாக பேசிடவே வழிவகுக்கும்.
அமைதியாக தேங்கியிருக்கும் ஓடையில் பேரமைதியுடனும் பெருவெறியுடனும் காத்திருக்கிறது முதலை. ஓடையில் ஏற்படும் சிறு சலனமும் முதலையை அப்புறப்படுத்தாவிட்டாலும், அசைத்துப் பார்க்கும். அந்த ஓடையில் எரியப்பட்ட இரு சிறு கற்கள் மெட்ராஸ் & ஜீவா.

ஒரு வருட வசந்தம் !!!

சென்ற ஆண்டின் இந்த நிமிடங்கள் தந்த பரவசமும் படபடப்புமே இன்னும் அடங்கவில்லை. இதே நாளில்தான் எங்கள் திருமணம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நண்பர்கள் சூழ மிக எளிமையாக பிரம்மாண்ட மகிழ்ச்சியோடு சாதி மறுத்து, சடங்கற்று வாழ்வில் இணைந்தோம். ஒரு வருடம் ஓடிவிட்டது. மறக்க முடியா நினைவுகளை சுமந்து சென்ற ஒரு வருடம். எண்ணற்ற சம்பவங்கள் நிறைந்த ஒரு வருடம். இன்னும் அவள் காதலுக்கு தகுதியானவனாக மாற முயன்றுகொண்டே இருக்கிறேன். வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. ஒரே குறையைத் தவிர வேறொன்றுமில்லை. அம்மா இருந்திருக்க வேண்டும். எல்லோரையும் விட இந்த நாளை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அம்மா தான். சென்ற ஆண்டே இந்த நாளில் கண்ணீரை துடைத்து துடைத்து சிரித்துக் கொண்டிருந்தது அம்மா தான். இந்த நாளில் அவள் இருந்திருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும். இன்னும் மனம் அந்த வெறுமையில் இருந்து மீளவில்லை. எப்போதும் எனை மீட்டு மடிதந்து, அரவணைத்து, கண்ணீர் துடைத்து, சிரிக்க வைத்து தூங்க வைப்பது என் அன்புதான். அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், சிரிப்பதற்கான ஒரு காரணத்தை தேடித் தேடி சிரிப்பதுதானே வாழ்க்கை. எப்போதும் போல் அப்பா, அண்ணன் உண்டு. என்றென்றும் நண்பர்கள் தோள் உண்டு. அம்மாவிற்கு பிறகு என்னை மொத்தமாய் தத்தெடுத்துக் கொண்ட நீங்கள் உண்டு.

வேறென்ன சொல்ல. காதலைப் பற்றியும் அவளைப் பற்றியும் இந்த ஒரு வருடத்தைப் பற்றியும். மனம் நிறைந்து இருக்கிறது. அந்த முதல் நாளின் காதலும் க்ரேஸுமே இன்னும் எனக்குத் தீரவில்லை. மொத்த காதலையும் அள்ளி அள்ளி நனைக்க விரும்புகிறேன். இன்னும் வேண்டும் எனக்கு நாட்களும் நிமிடங்களும். அவள் குடும்பமும் எங்களை அரவணைக்கப் போகும் நாளுக்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறோம். காதல், காமம், கோபம், சாந்தம், சிரிப்பு, கண்ணீர், நிறை, குறை, இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கனவு, ஆசை, ஏக்கம் எதுவந்த போதும் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா...!!!
தோற்றங்கள் மாறிப்போகும் தோல்நிறம் மாறிப்போகும்
மாற்றங்கள் வந்துமீண்டும் மறுபடி மாறிப்போகும்
ஆற்றிலே வெள்ளம்வந்தால் அடையாளம் மாறிப்போகும்
போற்றிய காதல் மட்டும் புயலினும் மாறாதம்மா !!!