Saturday, December 10, 2011

ஒஸ்தி

புதிதாக ஆரம்பித்திருக்கும் வலைப்பூவில் முதன்முதலில் இந்தப் படத்தின் விமர்சனத்தை எழுத நேர்ந்தது நிச்சயம் எனது முன்கால வினையின் பயனாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாகவே சிம்பு வாய்ச்சவடால் விடும் படங்களை குறித்து ஒரு ஐடியா இருப்பதால் இந்தப் படத்தை பெரிதாக எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் ஹிந்தியில் ஹிட்டடித்த "டபாங்" படத்தின் ரீமேக், தரணியின் டைரக்ஷன் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன்தான் இந்தப் படத்திற்கு முதல் நாள் சென்றேன். தெரியாத்தனமா போனதுக்கு நல்லா குத்தறாங்கய்யா ஊமைக்குத்தா....

படத்தின் கதை என்ன ? இதை படம் பார்த்த யாராவது சொன்னால் அவர்களை என் சொந்த செலவில் லத்திகா படம் அழைத்து செல்கிறேன். ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொன்னால் சிம்பு, மன்னிக்கவும், எஸ்.டி.ஆர், ஒரு இன்ஸ்பெக்டராம். அதுவும் திருநெல்வேலி காட்டுப்பாளயம் இன்ஸ். நெல்லையப்பர் மன்னிப்பாராக. அவர்க்கு ஒரு அப்பா. ஒரு அம்மா. ஒரு அண்ணன். ஒரு வில்லன். ஒரு காதலி. இது போதாதா. கதையை கன்னாபின்னாவென்று கொண்டு போவதற்கு. அது பாட்டுக்கு போது, போது, போய்கிட்டே இருக்கு. க்ளைமேக்ஸ்ல வில்லன் ஜெயிப்பாரா இல்லை சிம்பு ஜெயிப்பாரா ன்ற ரொம்ப டஃப்பான கேள்விக்கு அடி அடி என்று அடித்து துவைத்து பதில் சொல்கிறார். நம்மையும் சேர்த்துதான்.

திரைக்கதை இயக்கம் தரணியாம். டைட்டில் கார்டு மட்டுமே அதை சொல்கிறது. ஆரம்பத்திலிருந்தே தேவையில்லாத, ரசிக்க முடியாத கொடூரமான ஹீரோயிஸம். அதை விஜய், அஜீத் செய்தால் கூட பரவாயில்லை. சிம்பு செய்து தொலைக்கிறார். தன்னை அடுத்த சூப்பர் ஸ்டாராக அவரே டிக்ளேர் செய்து கொண்டார் போலிருக்கிறது. மானாவரியான பில்டப்.

அந்த போலீஸ் கெட்டப் சிம்புவிற்கு சுத்தமாக செட் ஆகவில்லை. அதுவும் தோள்பட்டையை தூக்கிக் கொண்டு நடக்கும் போது "வெடி" படத்தின் விவேக்கை ஞாபகப்படுத்துகிறார். அதுவாவது பரவாயில்லை. மஃப்டியில் இருக்கும் போது போலீஸ் படங்களை பார்த்து விட்டு சட்டையை முறுக்கி விட்டு சுத்தம் காலேஜ் பையனைப் போலத்தான் இருக்கிறார். இது பத்தாதென்று திருநெல்வேலி பாஷையில் வேறு பேசி கழுத்தறுக்கிறார். படத்தில் நடித்திருக்கும் நெல்லை இயக்குநர் அழகம்பெருமாளுக்கு அதைக் கேட்டு முஷ்டி புடைத்திருக்கும் என்பது நிச்சயம்.

கதாநாயகி. மயக்கம் என்ன படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய ரிச்சா. நடிப்பை தவிர மற்ற எல்லாவற்றையும் காட்ட வேண்டிய நிர்பந்தம். என்ன செய்ய ?

படத்தின் ஒரே ஆறுதல் ஆங்காங்கே வரும் சந்தானத்தின் காமெடி மட்டுமே. பல இடங்களில் வயிறு குலுங்க சிரிக்கலாம். இது தவிர இன்னும் ஏகப்பட்ட கேரக்டர்கள் படத்தில் உண்டு. என்ன இருந்து என்ன பண்ண ? கதை கிதை எதுவும் இல்லையே.

படு ஹிட்டாகி விட்ட பாடல்களை கூட தேவையில்லாத இடத்தில் புகுத்து கடுப்பேத்துகிறார்கள். மற்றபடி கேமரா, எடிட்டிங், இசை போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் நன்றாகவே இருக்கிறது. இது போன்ற இன்னும் ஒரே படம் வந்தால் கூட தரணியின் சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. இப்போதே அடுத்த பட வாய்ப்பு சந்தேகம் தான்.

படத்தின் ஆரம்பம் முதல் எப்போது தியேட்டரை விட்டு வெளியே போகலாம் என்ற நினைப்பே மேலோங்கி நிற்கிறது. பல குறட்டைகளுக்கு நடுவில் கொடுத்த காசு போக விடாமல் தடுத்து வந்தாலும் இறுதியில் சிம்புவின் உடல்பலம் தாங்காமல் சட்டை தெறிக்கும் போது படம் பார்ப்பவர்களும் தெறிக்கிறார்கள். அதில் நானும் ஒருவன் என்பதை நெஞ்சை நிமிர்த்து சொல்லிக்கொள்கிறேன்.

லத்திகா படம் இன்னும் பார்க்கவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். இந்த வருடத்தின் மிகப்பெரிய குப்பை நிச்சயம் ஒஸ்தி தான். இதுக்கு பிரபு கார்த்திக் நடித்த குஸ்தி படம் எவ்வளவோ மேல்.

படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் முதல் காட்சிக்கு படப்பெட்டி வருவதில் தாமதமானது. மதியம் பெட்டி வரும்வரை காத்திருந்து படம் பார்த்த ரசிகர் ஒருவர் படம் முடிந்தவுடம் சொன்னது - "இதுக்கு பெட்டி வராமலேயே இருந்திருக்கலாம்". இதுதான் ஒஸ்தி.


ஜெய்