Friday, March 23, 2012

போராடும் பொம்மைகள்

எழுதுவது என்பது நிஜமாகவே ஒரு கடினமான வேலை தான். படிப்பவர்களில் பெரும்பாலோர்க்கு எழுத வேண்டும் என்ற ஆவல் இயல்பாக எழக்கூடும். ஆனால் ஒருமுறை இருமுறை எழுத ஆரம்பித்த பிறகுதான் தெரியும், எழுதுவதென்பது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. ஏதோ ஓர் ஆர்வக் கோளாறில் எழுத ஆரம்பித்து பின்பு அதனை தொடர முடியாமல் கைவிட்டு, வெறும் வாசிப்பாளர்களாகவே மாறி விட்ட பலர் உண்டு. அது போல் ஒருவனாக நானும் மாறிவிடுவேனோ என்ற அச்சத்திலேயே தான் இத்தனை நாட்களாக இருந்தேன்.

வலைப்பூ ஆரம்பித்து உடனே முதல் பதிவேற்றிய பிறகு, அடுத்த என்ன எழுதுவது என்று தோன்றவில்லை. அவ்வளவு ஏன், முதலில் எழுத வேண்டும் என்றே தோன்றவில்லை. இதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் பதிவாக சினிமா விமர்சனம் எழுதிய பின், அடுத்த பதிவும் விமர்சனமாக இருக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். அதனாலேயே, சமூக நிகழ்வுகளைப் பற்றி எழுத முற்படும் போது ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. கூடங்குளம், ஈழம், சங்கரன்கோவில், சேனல் 4 போன்ற ஏராளமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த போதும், நம் அரசியல் பார்வை சரியானதா, இந்தக் கருத்தை நாம் சரியாக புரிந்து வைத்திருக்கிறோமா, நம் பார்வை சரியானதா, தப்பாக எழுதிவிடப்போகிறோமா என்று குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கின்றதா, அல்லது அனைத்து ஆரம்ப எழுத்தாளர்களுக்கும் இது இருக்குமா என்று அனுபவஸ்தர்கள் சொன்னால் நல்லது. குறும்பட இயக்கம், நடுவே விபத்து, தயக்கம் என எழுதாததற்கு பல காரணங்கள் நானே சொல்லிக்கொண்டாலும் அவை சப்பைக்கட்டுக்களே என்பதை என் மனம் அறிந்தே இருந்தது. எழுத நினைத்திருந்தால் எழுதியிருக்கலாம்.

‘எல்லாம் நன்மைக்கே’ என்பார்களே. அதை தீர்க்கமாக நம்புபவன் நான். அதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் இந்த நீள் விரதத்தை முடிப்பதற்கேற்ற ஒரு நிகழ்வு மார்ச் 21 அன்று நடந்தது. ‘உலக பொம்மலாட்ட நாள் ’.

தமிழகத்தின் அதிக லாபகரமான தொழிலான அரசியலை தவிர்த்து, மக்களிடையே வேரூன்றி போயிருக்கும் மற்றொன்று சினிமா. அதன் அதிவேக வளர்ச்சி பல நஷ்டங்களையும் தந்தே வந்திருக்கின்றது. நம் பாரம்பரிய கலைகள் மீதான விலகல் தான் அது. ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ என்ற கூற்று இங்கே பொருந்தாது என்றே கருதுகிறேன். சினிமாவின் வளர்ச்சி, ஈர்க்கப்பட்ட மக்கள், விலக்கப்பட்ட கலைகள் என அது பெரும் விவாதம். அதற்கென தனியே ஒரு கட்டுரை எழுத வேண்டும். இப்போது உலக பொம்மலாட்ட நாள்.

சிறு வயதில் அவ்வப்போது சிறு சிறு நேரங்களில் பொம்மலாட்டம் பார்த்ததாக ஞாபகம். நினைவில் நிற்கும்படி கவனமூன்றி ஏதும் பார்த்ததில்லை. ஆனால் அந்த கலை குறித்து நிறைய படித்தே இருக்கிறேன். ஓர் ஆவணப்படம் எடுக்கும் போது அது குறித்து படிக்க நேர்ந்தது. உலக அளவிலும், தமிழகத்திலும் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாகவும் இப்போது மிகக்குறைவாகவும் நடத்தப்படும் ஒரு கலை இது. சமீப காலங்களில் பொம்மலாட்டத்தில் ஈடுபடும் நண்பர்களோடு தொடர்பில் இருந்தமையால் அது குறித்த வேறு சில விஷயங்களை அறிய முடிந்திருந்தாலும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான் உலக பொம்மலாட்ட நாளை சிறப்பிக்கும் விதத்தில் கிண்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நடைபெற்ற சிறப்பு பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். பொம்மலாட்டம் உள்ளிட்ட பழங்கலைகள் என்றாலே மிக நீண்டது, தற்காலத்தை விட்டு விலகி நிற்கும், ரசனை அளவில் பழைய காலத்தையொட்டி இருக்கும்,  இந்த காலத்திற்கும் ஏற்றவை அல்ல என்ற ஓர் பொதுப்புத்தி நமக்கிருக்கும் அல்லவா ? இதில் ஓரளவு பொதுப்புத்தியுடன் தான் நான் சென்றேன். ஆனால் மேற்சொன்ன அத்தனை கருத்துக்களையும் அடித்து நொறுக்கியது அன்றைய பொம்மலாட்டம். அன்று நடைபெற்றது கையுறை பொம்மலாட்டம் வகை. பொம்மைகளுக்கும் கையை விட்டுக் கொண்டு நிகழ்த்தப்படும் கலை இது. பல நூறு வருடங்கள் தொன்மையான கலை இது. அன்று பொம்மலாட்ட நாள் என்பதால் முழு நிகழ்வாக இல்லாமல்,  புராணம், சமூகம், உள்ளிட்ட அனைத்து கருக்களின் அடிப்படையில் ஒவ்வொரு காட்சியாக செய்தனர். மேலும் அன்று உலக வன நாள். அடுத்த நாள் உலக நீர் நாள். இதுவும் பொம்மலாட்டத்தின் கருப்பொருளாய் அமைந்தது.

ஒரு கலையின் இரண்டு முக்கிய கூறுகள், அழகியல் மற்றும் கரு என்பது என் கருத்து. ஒன்று ஒரு கலை அதன் முழு அழகியலோடு இருத்தல் வேண்டும் அல்லது நல்ல கருப்பொருளோடு இருத்தல் வேண்டும். இவை இரண்டுமே சேர்ந்திருந்தால் அது தான் அந்த படைப்பின் உச்சம். இது இரண்டுமே சேர்ந்து அமைக்கப்பட்ட அனைத்து கலை வடிவங்கள் அழியா படைப்புகளாகவே சரித்திரத்தில் நிலைத்திருக்கின்றன. இது சினிமாவுக்கும் பொருந்தும். அன்று நான் பார்த்த பொம்மலாட்டம் இந்த இரண்டுமே நிரம்பிய ஒரு கலையாக இருந்தது.

முதலில் ஒரு புராண கால காதல் காட்சியோடு ஆரம்பித்த ஆட்டம், பின்பு தமிழ்ப் பெருமை, வனப் பாதுகாப்பு, நீர் சுகாதாரம், மருத்துவம், மூட நம்பிக்கை, சாதி என ஒவ்வொரு தளத்திலும் நின்று விளையாடி விட்டு வந்தது. முதலில் ஆரம்பித்த காதல் பாடலிலேயே அந்த கலையின் அழகியல் வெளிப்பட்டது. இரண்டு பொம்மைகளும் கைகோர்த்துக் கொண்டு ஆடுவது, ஒன்றாய் சுற்றுவது, காலில் விழுவது, போன்ற பல கடினமான அசைவுகளையும் எளிதில் காணமுடிந்தது. அதில் வரும் பாடல்களும் குழுவினரின் சொந்த கற்பனையில் உருவான பாடல் என்பது கூடுதல் சிறப்பு.

அடுத்து தமிழ்ப்பெருமையை பறைசாற்றும் காட்சி, ஒரு குரங்கின் வாயிலாக வனத்தில் பாதுகாப்பு குறித்து சொல்லும் காட்சி, ஒரு கணவன் மனைவியின் வாயிலாக நீர் சுகாதாரம் குறித்து சொல்லும் காட்சி, ஒரு போலிச்சாமியாரைக் கொண்டு மூட நம்பிக்கையை சாடி, மருத்துவம் கூறும் காட்சி, சிறுவர்களின் இயற்கைக் கனவு காட்சி, பேரிடர்களின் மூலம் மக்கள் ஒற்றுமையைக் கூறும் காட்சி என அனைத்தும் ஒவ்வோர் வகையில் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இந்த பொம்மைகள் சமூகத்திற்கு சேதி சொல்லிக் கொண்டே சென்றன. பேரிடர் பேய் என்ற ஒன்றை கொண்டுவரும் போது, என்னடா பேய் என்ற மூடநம்பிக்கையை உள்ளே கொண்டுவருகிறார்கள் என்று பயந்தால், இறுதியில் அது கனவுதான், பேயெல்லாம் இல்லை என்று மற்றோர் பொம்மையின் மூலமே விளக்கியது சிறப்பு. மேடை, பொம்மைகள், உடைகள், இசை, ஆட்டுவிப்பு, குரல் என் ஒவ்வொன்றுமே அதனதன் தனித்துவத்தோடு விளங்கியது.

மொத்த நிகழ்ச்சி முடிந்ததும், ஒரு நல்ல சுவாரசியமான, எல்லாருக்கும் ஏற்ற  அற்புதமான ஒரு கலையை இத்தனை காலம் பார்க்காமல் இழந்திருக்கிறோமே என்ற எண்ணம் எழுந்தது. இதுவே குழுவினரின் வெற்றி எனக் கருதுகிறேன்.

ஒவ்வோர் திரைப்படைப்பிற்குப் பிறகும் திரைக்கு பின்னால் உழைப்பவர்களின் சொல்லப்படாத கதை இருக்கும். இந்தக் கலையும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த பொம்மலாட்டத்தை நிகழ்த்தியது கலை பொம்மலாட்டக் குழு. இதனை தலைமையேற்று நடத்துபவர் திரு. கலைவாணன் அவர்கள். இவரின் தந்தை கலைமாமணி கவிஞர் முத்துக்கூத்தன். பல கவிதைகள், நாடகங்கள், பாடல்கள் படைத்த திரு. முத்துக்கூத்தன் அவர்கள் 35 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்தக் கலையை கலைவாணன் இன்று வரை தொடர்ந்து வருகிறார்.

ஒரு கலை அதன் உச்சத்தில் இருக்கும் போது பலர் அந்த கலையை செய்யக்கூடும். அதில் லாபநோக்கும் இருக்கக்கூடும்.  ஆனால் அதே கலை அதன் குறைவான நிலையில் இருக்கும் போது தான் உண்மையாக அந்த கலையின்பால் காதல் கொண்டவர்கள் யாரென்று தெரியும். அப்படிப்பட்டவராக எனக்கு தெரிந்தனர் கலை பொம்மலாட்டக் குழுவினர். பொம்மலாட்டம் என்றும் கலை வணிகரீதியாக அதன் வீழ்ச்சியில் இருக்கும் போது, காசை விட கலைதான் முக்கியம் என்று விடாப்பிடியாய் இன்றும் தனது பெயருக்கேற்றவாரு அந்த கலையை பாதுகாத்து நிகழ்த்தி வருகிறார் கலைவாணன். அவர் மட்டுமல்ல, மொத்த குடும்பமும் இந்த கலையில் ஈடுபட்டு வருகிறது என்பது அனைவரையும் புருவமுயர்த்த வைக்கும் ஒரு செய்தி. ஆம் இதற்கு பொம்மைகள் செய்வது, உடைகள் செய்வது, கலை அமைப்பது, இசைக்கோர்வை, ஆட்டுவிப்பது என எல்லாவற்றையும் மனைவி, மகன்கள், தங்கை, மைத்துனர் என அவரின் மொத்த குடும்பமும் ஈடுபட்டு செய்கிறது. சொந்த லாபத்துக்காக குடும்பம் குடும்பமாக வாரிசு வாரிசாக அரசியலில் குதித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒரு கலைக்காக மொத்த குடும்பமும் லாபநஷ்டம் பார்க்காமல் உழைப்பது பெருமைப்படக் கூடிய விஷயம்தான்.

வழக்கம் போல் அரசிடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. அது தேவையும் இல்லை என்கிறார் கலைவாணன். ‘எனக்கு இந்த கலை வாழ்ந்தால் போதும். அரசின் அங்கீகாரமோ, பணமோ தேவையில்லை ’ என்கிறார். இது போன்ற உண்மைக் கலைகளையும் கலைஞர்களையும் ஊக்குவிப்பதில் தான் ஒரு அரசின் பண்பாட்டு பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. பொதுவாக அனைத்து மரபுக் கலைகள் மேலும் இருக்கும் குற்றச்சாட்டு, அந்த கலைகள் தங்கள் கருப்பொருளை மாற்றிக்கொள்வதில்லை. புராணக் கதைகளையே இன்றும் நடத்துகின்றன என்பதுதான். அந்தக் குறை இந்த பொம்மலாட்டத்தில் இல்லை. அனைத்து வகையான சமகால கருத்துக்களும் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.

சுனாமி வந்த சமயம். தொடர்ச்சியாக அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொம்மலாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதைப் பார்த்து ஒரு சிறுமி ‘சுனாமி வந்தப்புறம் இங்க நிறைய பேர் வந்தாங்க. சாப்பாடு கொடுத்தாங்க, பிஸ்கட் கொடுத்தாங்க, டிரஸ் கொடுத்தாங்க, இன்றும் என்னென்னவோ கொடுத்தாங்க...ஆனா உங்க பொம்மலாட்டம் தான் வாழ்றதுக்கான நம்பிக்கைய கொடுத்துச்சு...’ என்றிருக்கிறாள். இதுதான் அந்த கலையின் வெற்றி. இதைத் தாண்டி ஒரு கலைஞனுக்கு பரிசேதும் இருக்க முடியாது.

ஒரு பொம்மலாட்ட கலைஞரா இந்த சமூகத்துக்க என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, ‘தயவுசெய்து பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள். அதில் தான் நம் மொத்த கலாச்சாரமும் அடங்கியிருக்கிறது. மேலும் நம் பள்ளிகளில் பாடம் நடத்தும் முறையாகவே பொம்மலாட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு பொம்மலாட்டம் தெரிந்திருந்தால், அதன் மூலம் பாடம் நடத்தப்பட்டால் தானாய் மாணவர்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அது பரவும்’ என்கிறார்.

பள்ளிகளை தாண்டி நாமும் இந்த கலைகளை வளர்க்க ஆர்வம் காட்டவேண்டும். பல பொது நிகழ்வுகளில், பொம்மலாட்டத்தை சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தலாம். விளையாட்டு விழாக்கள், சமூக விழாக்கள், கல்லூரி விழாக்கள் உள்ளிட்ட விழாக்களிலும் முக்கியமாக அரசு நிகழ்ச்சிகளிலும் பொம்மலாட்டத்தை சிறப்பு நிகழ்ச்சியாக வைத்து ஆரம்பித்தால் கலையும் காப்பாற்றப் படும். கலைஞர்களும் காப்பாற்றப்படுவர். இதற்கு ஆகும் செலவு, ஒரு சினிமா பிரபலத்தை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து, அவருக்கு உணவு, கார், பணம் என்று செய்யும் செலவுகளை விட பல பல பல மடங்கு குறைவுதான்.


‘ஒன்றரை மணி நேரம் பொம்மைகளை ஆட்டுவிக்கும் போது கைகள் வலிக்கத்தான் செய்யும். ஆனால் என் கை வலியை விட இச்சமூகத்தின் வலி அதிகமாய் இருக்கின்றது. பணம் வருகிறதோ இல்லையோ, என் பொம்மைகள் தொடர்ந்து இந்த சமூகத்திற்கு கருத்து சொல்லிக்கொண்டே இருக்கும். சமூகக் கொடுமைகளை எதிர்த்து போராடிக்கொண்டே இருக்கும்’ என்று கூறி முடித்தார் கலைவாணன். பொம்மைப் போராளிகளுக்கு மத்தியில், பொம்மைகளை வைத்து போராடும் ஒரு உண்மை போராளியாகவே அவர் தெரிந்தார்.

இந்த பதிவில் அன்று நடந்த பொம்மலாட்டத்தை பற்றியும் அதன் சிறப்பம்சங்களைப் பற்றியும் அதிகமாக இல்லையே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம் உண்மைதான். அது பற்றி அதிகமாக எழுதப்படவில்லை. ஏனென்றால், பொம்மலாட்டம் படிக்கப்பட வேண்டிய கலை அல்ல. பார்க்கப் பட வேண்டிய கலை....தவறாமல் பாருங்கள்.

தொடர்புக்கு : திரு.கலைவாணன் - 9444147373

பி.கு : இன்று முதல் வாரம் குறைந்தது ஒரு பதிவாவது எழுதவேண்டும் என திட்டமிருக்கிறேன். பார்க்கலாம்...

4 comments:

  1. தமிழகத்தின் அதிக லாபகரமான தொழிலான அரசியலை தவிர்த்து, மக்களிடையே வேரூன்றி போயிருக்கும் மற்றொன்று சினிமா.

    அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழர்...

    ReplyDelete
  3. thank u thozhar...arumaiyaana pathivu

    ReplyDelete
  4. பொம்மைப் போராளிகளுக்கு மத்தியில், பொம்மைகளை வைத்து போராடும் ஒரு உண்மை போராளியாகவே அவர் தெரிந்தார்-அருமை

    ReplyDelete