Sunday, April 1, 2012

சண்டே ஸ்பெஷல்

ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக விடிகிறது.

தினம் நைட்ஷிஃப்ட் பார்க்கும் நண்பன், ‘அப்பாடா கிட்டத்தட்ட ரெண்டு நாள் ரெஸ்ட்தான்டா’ என்று படுக்கையை விரிக்கிறான். அதிகாலை முதல் பின்னிரவு வரை ஓயாமல் உழைக்கும் மக்கள் அருகில் ஒரு குவார்ட்டருடன் இன்னும் எழுந்திரிக்க மனம் வராமல் ப்ளாட்பாரங்களில் படுத்திருக்கிறார்கள். கடற்கரைகளில் ஒரு ஓரங்களில் கார்கள் பார்க் செய்யப்பட்டிருக்க மறு ஓரத்தில் தொப்பைகளை குறைக்க ஒரு கும்பல் ஓடியாடியபடி இருக்கிறது. அவ்வளவு காலையிலும் பழங்கள், பழரசங்கள் என வியாபாரம் சூடு பிடித்தபடி இருக்கிறது. ஒரு பெரும் ஜனநெரிசலுக்கு ரங்கநாதன் தெருக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. மீனவர்களின் படகுகள் கடல்பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒரு வார மந்தமான வருமானத்தை ஒரே நாளில் எடுத்துவிட தயாராகிக் கொண்டு இருக்கிறார் முடிவெட்டும் அண்ணன். அப்பாக்களை முழுமையாக கவனிப்பதற்கே அம்மாக்களின் ஞாயிறுகள் செல்கின்றன. கிரிக்கெட் மைதானங்களிலும் திரையரங்குகளிலும் அண்ணன்களின் ஞாயிறுகள் கழிகின்றன.

குழந்தைகளின் ஞாயிறுகள் இன்னும் சிறப்பானவை. ஒரு வாரம் அடைந்து கிடந்த ஒரு அறையை விட்டு வெளியே வந்த ஒரு பறவையின் சிலிர்ப்போடே அவர்களின் ஞாயிறுகள் கழிகின்றன. பள்ளிகளின் ரீங்காரம் , மணிகள், மதிய லஞ்ச் டைம் வாசம் , சின்ன சின்ன விளையாட்டுகளை ஞாயிறுகள் அவர்களுக்கு மறுத்தாலும், பாண்டி, வீடியோ கேம், கோலி, படங்கள், அம்மாவின் திட்டு, அக்காக்களின் சண்டைகள், ஊர் சுற்றுவதாய் நினைத்துக் கொண்டு, இரண்டு மூன்று தெருக்கள் அலைவது என வேறு சில சின்ன சின்ன பரவசங்களை ஞாயிறுகள் அவர்களுக்கு தந்தபடியே இருக்கின்றது.

சில ஞாயிறுகள் வித்தியாசமாய் விடிவதுண்டு. மரணத்தின் மடியில் விடிந்த ஞாயிறுகளும் இருக்கின்றன. நண்பனின் மரணம் ஒன்று நிகழ்ந்த ஞாயிறின் வெப்பம் இன்றும் தகித்துக்கொண்டே இருக்கின்றது. சில ஞாயிறுகள் ப்ளாட்பாரங்களில் விடிந்திருக்கின்றது. சனிக்கிழமை இரவு நைட் ஷோ முடிந்து நண்பனின் வீட்டு ஓனர் கெடுபிடியால், ‘இருக்குறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு தமிழ்நாடு’, என்று டயலாக் விட்டுக்கொண்டு திருவான்மியூர் ப்ளாட்பாரங்களில் படுத்த ஞாபகம் அலாதியானது. அங்கு வழக்கமாக படுப்பவர்களின் பார்வைகள் ஆயிரம் அர்த்தங்களுடன் எங்களை மேய்ந்தது. நம் இடத்தை பறித்து விட்டார்கள் என்ற கோபமா, இல்லை, ‘இன்னிக்கு மட்டுந்தான் இருப்பானுங்களா இல்ல டெய்லி வந்து டேரா போட்ருவாங்களா’ என்ற சந்தேகமா என்று தெரியவில்லை. ஆனால் அது அருமையாயிருந்தது.

சனிக்கிழமை ராத்திரி முதல் ஞாயிறு வரை டாஸ்மாக்குகளுக்கு ஓவர்டைம். நேற்று சரக்கடிக்க அழைத்த நண்பன், ‘சீக்கிரம் வாடா, சைட் டிஷ் காலியாயிடும்’ என்றபோது தான் வாரஇறுதிகளின் மகத்துவத்தை உணர முடிந்தது. ஒரு வாரம் போனில் பேசியபடியே இருந்தாலும், பார்த்து கட்டியணைத்து, வெட்டிப்பேச்சு பேசி, நட்பு வளர்ப்பதும் ஞாயிறுதான்.

வாரநாட்களில் மூச்சு விட இடமளிக்காத ரயில்பெட்டிகளும் பேருந்துகளும் நின்று நிதானமாக காற்று வாங்கிக் கொண்டிருக்கும். டி.விக்களின் டி.ஆர்.பிக்கள் அதிகரிக்கும் நாள் ஞாயிறு. அதே போல் தியேட்டர்களும். ஞாயிறு ரசிகர்கள்தான் இன்னும் பற்பல தியேட்டர்களை மூடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். நமக்கு ஞாயிறு என்றால் ஒருவித கொண்டாட்டம், குதூகலம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.


கோயில்களில், சொந்தங்களின் இல்லங்களில், கட்சி, இலக்கிய கூட்டங்களில், பேஸ்புக்கில், கான்ஃபரன்ஸ் அறைகளில், டியூஷன் சென்டர்களில், பின் வீட்டு முற்றங்களில், எடிட்டிங் அறைகளில், கையில் பேனாவுடன் நியூஸ் ஸ்பாட்களில், வண்டிக்கு பைனான்ஸ செய்யும் சேட்டின் வீட்டு வாசலில், டிராஃபிக் சிக்னல்களில் (இன்று டிராஃபிக் போலீசுக்கு கொண்டாட்டமான நாள்), ஃபோம் மெத்தைகளில், தாய் மடிகளில், கடற்கரை மணலில், காதலியின் கரங்களில், தந்தையின் கைப்பிடியில், 11 மணி உண்ணும் காலை உணவுகளில்,  தூரத்து மாமாவின் பார்வைகளில், நண்பர்களின் தோள்களில், காலண்டர் ராசிகளில் ...............

இப்படி ஒவ்வோர் ஞாயிறும் ஒரு சேதியை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. ஒரு வாரகால உழைப்பிற்கான இளைப்பாறுதலாகவும் அடுத்த வாரத்திற்கு தயாராவதற்கான முன்னேற்பாடகவும் நம் ஞாயிறுகள் இருக்கின்றன.

சிலரின் ஞாயிறுகள் கோல்ஃப் க்ளப்பிலும், பீச் ரிசார்ட்டிலும் விடிகின்றன. போதைதான் குறிக்கோள் என்றாலும், அது கிடைப்பது மானிட்டரிலா இல்லை ஸ்காட்ச்சிலா என்பதுதான் இச்சமூகத்தில் ஒரு மனிதனில் ஸோ கால்ட் ஸேடேடஸை தீர்மானிக்கிறது.

சில மனிதர்களுக்கு ஞாயிறுகள் எந்த வித்தியாசமும் இன்றி கடந்துபோகின்றன. ஞாயிறுகளிலும் சில கைகள் செருப்பு தைத்தபடியேதான் இருக்கின்றன. மலம் அள்ளியபடியே தான் இருக்கின்றன. பிச்சை எடுத்தபடியேதான் இருக்கின்றன.ஜெயில் கம்பிகளை எண்ணியபடியே இருக்கின்றன. கூட்டமும் வரவேற்பும் குறைந்தாலும் பறை அடித்தபடி, கூத்தாடியபடியே இருக்கின்றன.  சில கால்கள் பணம் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றன. சில உடல்கள் தம்மை விற்றபடியே இருக்கின்றன. வாழ்க்கை விடுமுறை விடாது அவர்களை அடித்துக்கொண்டே இருக்கின்றது. அவர்களுக்கான ஞாயிறு எப்போது வரும் என்று தெரியவில்லை.

இந்த ஞாயிறு முட்டாள்கள் தினமாக விடிந்திருக்கின்றது. சில நேரங்களில், முட்டாளாக இருப்பது எவ்வளவு சுகம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இருந்தாலும் ஞாயிறு நமக்கு தரும் அனுபவம் பரவசம் நிறைந்தது. அற்புதமானது. ரசிக்கத்தக்கது. வார நாட்களில் நாம் விடுப்பு எடுத்தால் கூட அவை ஞாயிறுகளின் அருகில் கூட வரமுடியாது. இதுவரை எத்தனை ஞாயிறுகளை கடந்திருப்போம், என்னென்ன செய்திருப்போம் என்று யோசித்து பார்க்கிறேன். எண்ணங்கள் வந்து கொட்டியபடியே இருந்தாலும், சென்ற ஞாயிறில் என்ன செய்தேன் என்பதுகூட தெளிவாக நினைவில் இல்லை.

ம்ஹ்ம்...இனிப்புக் கடைக்குள் நுழைந்து இதில் எந்த ஸ்வீட் இனிக்கும் என்றால் என்ன சொல்வது ???