Friday, November 16, 2012

துப்பாக்கி - மாற்றியமைக்கப்படும் மாஸ் ஃபார்முலாபடம் சூப்பர் ஹிட் என்று இந்நேரம் தெரிந்திருக்கும். இவ்வருடத்தின் மிகப்பெரிய வசூல்வாரியாகவும் இருக்கக்கூடும். இத்தருணத்தில் இப்படத்தின் விமர்சனத்தை மட்டுமே எழுதத் தோன்றவில்லை. இதன் மூலம் கொஞ்சம் மசாலா சினிமாவையும் அலசலாம் என்று நினைக்கிறேன். 

90 களில் வந்த ரஜினி படங்களில் சில பொதுவான அம்சங்கள் இருக்கும். ரஜினிக்கே ஏற்ற மாஸ் அயிட்டங்கள் இருக்கும். ரசிகர்களைக் கதறச் செய்யும் சில சீன்கள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் திரைக்கதையோடு பிணைக்கப்பட்டிருக்கும். துண்டாக தெரியாமல் மிகக் கவனமாக கதையோடு முடிந்தவரையில் ஒட்டவைக்கப்பட்டு, ஒரு கோர்வையாக, ஆனால் ரஜினிக்கேற்ற சில தீனிகளும் தூவப்பட்டு வந்திருக்கும். அந்தப் படங்கள் அனைத்தும் அந்தந்த வருடங்களின் ப்ளாக்பஸ்டர்களாக மாறியது. உதாரணம், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை. ரஜினிக்கு அடுத்த தலைமுறையில் உருவான மாஸ் ஹீரோக்கள் விஜய்யும் அஜீத்தும். ஏதோ ஒரு காரணத்துக்காக முதல் காட்சிக்கு சும்மா கைதட்டிக்கொண்டே, விசிலடிக்க வேண்டும் என்று பாக்ஸ் ஆபிஸ் முன்னால் விடிகாலையில் க்யூ கட்டும் ரசிகனுக்கு இவர்கள் இருவரும் கிடைத்தார்கள். அந்த கைத்தட்டல்களையும், விசில்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஆனால் ரஜினி படங்கள் விசிலடிக்கப்பட்டதற்கான காரணங்களை இந்த இருவரின் படங்களும் ரசிகனுக்கு தந்ததா என்றால் நிச்சயம் இல்லை. ஆனாலும் ரசிகன் விசுவாசமாக கைத்தட்டிக் கொண்டு தான் இருந்தான். 
ஆனால் இவர்கள் தலைமுறையில் ஒரு ஆபத்தான ஃபார்முலா உருவாகியது. அது, விஜய்யும் அஜீத்தும் திரையில் வந்தாலே போதும், படம் ஓடி விடும் என்று இவர்களே ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இவர்களை ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்கவும் ஒரு நல்ல திரைக்கதை (கில்லி, போக்கிரி, தீனா, பில்லா) தேவைப்பட்டது என்பதை இவர்கள் போகப் போக மறந்து போனார்கள். தங்களை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு பலபல குப்பைகளை ரசிகனின் தலையில் கொட்டிக் கொண்டே வந்தனர். அவனும் எல்லாவற்றையும் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனாக தாங்கிக் கொண்டு கைதட்டிக் கொண்டே வந்தான். இவர்கள் வழியில், வித்தியாசமாய் நடித்து தனியிடம் பிடித்து வந்த விக்ரமும் சூர்யாவும் பின் கார்த்தியும் கூட மாஸ் நாயகர்கள் ஆகும் ஆசையில் சில சுவாரசியமான படங்களுக்கு பிறகு (தில், தூள், சிங்கம், அயன்) நாயகனை முன்னிறுத்தும் குப்பைகளை அள்ளித் தெளித்தனர் (கந்தசாமி, ராஜபாட்டை, ஆதவன், மாற்றான், சகுனி). பாவம் ரசிகன் எத்தனை நாள் தான் விசுவாசமாய் கைதட்டிக் கொண்டே இருப்பான். சோர்ந்தான். இருப்பினும் கைதட்டுவதை விடவில்லை. ஆனால் சற்று மந்தமாகத் தட்டினான். அவ்வளவுதான். இந்த சினிமாக்களின் அடிநாதமான வசூலை அதுவே ஆட்டிப்பார்த்தது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் மசாலாப் படங்கள் தலைகுப்புறப் படுத்துப் போனது. இதை வைத்தாவது இவர்கள் திருந்தியிருக்கலாம். ஆனால் இவர்கள் மாற்றியது, படத்தின் லொக்கேஷன்களையும், தொழில்நுட்பங்களையும் பட்ஜெட்டையும் தானே தவிர, கதையையோ திரைக்கதையையோ அல்ல. இது போன்று தொட்டுத் தொடர்ந்து வந்த இந்த பாரம்பரியத்தைத் தான் உடைத்திருக்கிறது துப்பாக்கி. ஆம், என்னளவில் விஜய்க்கும் அஜீத்திற்கும் இருக்கும் ரசிகர் பலம் அளப்பரியது. அதற்கேற்ற ஒரு படத்தைக் கூட இவர்கள் கொடுக்கவில்லை என்பேன். ஒவ்வோர் சுமாரான படங்களுக்கும் ரசிகன் தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டு இதுதான் எங்க தலைவர் மாஸ் என்று இதுவரை மார்தட்டி வந்தான். ஆனால் முதல் முறை, விஜய் தன் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் தீனி போட்டிருக்கிறார் என்று கூறலாம். நிறைய காட்சிகளில் விஜய்க்காக மட்டும் அல்லாமல் காட்சிகளுக்காக ரசிகர்கள் தியேட்டரில் கூப்பாடு போடுகிறார்கள். இதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்தது. இனியும் நாயகர்களை மட்டும் வைத்து படங்களை எடுத்துவிட முடியாது என்பது உணரப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கும், காட்சி அமைப்பிற்கும் நல்ல முக்கியத்துவம் கொடுத்து, அதில் நாசூக்காக ஹீரோயிச வேலைப்பாடுகள் செய்து, ரசிகர்களுக்கு பரிமாறப்பட்டிருக்கிறது. அவர்கள் வயிறார உண்கிறார்கள். அதற்கென இந்தப் படத்தில் குறைகளே இல்லையா எனலாம். நிறைய இருக்கின்றது. படு வழக்கமான க்ளைமேக்ஸ், முஸ்லிம்களை தீவிராதிகளாகவே காட்டும் சிறுபிள்ளைத்தனம், தேவையே அற்ற பாடல்கள் என பலப்பல. இனியும் ரசிகர்களுக்காகத் தான் பாடல் வைத்தேன் என்று இயக்குநர்கள் பூ சுற்ற முடியாது. தேவையற்ற பாடல்களின் போது, முதல் நாள் முதல் காட்சிகளிலேயே சிகரெட்டுகள் பற்ற வைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்படம் இக்குறைகளை மறக்கடிக்கக் காரணம் நிச்சயம் ஹீரோயிசம் தாண்டிய திரைக்கதை அம்சங்கள் தான். மாஸ் படங்களுக்கு யாரும் இங்கே எதிரிகள் கிடையாது. அலசிப் பார்த்தால் ஜேம்ஸ்பாண்ட் படங்களே மாஸ் படங்கள் தான். ஆனால் அது இங்கே தனி மனிதத் துதியாகவும், ஹீரோ வந்தா, நின்னா, நடந்தா போதும் என்றும் அர்த்தப்பட்டு வந்தது. அந்நிலைமையைத் தான் துப்பாக்கி சுட்டிருக்கிறது எனக் கருதுகிறேன். சரியான திரைக்கதையில் சரியான மாஸ் ஃபார்முலா என்று பலப்பல வருடங்களுக்கு பிறகு முழுக்க வேறு வகை ஸ்டைலில் 90 களின் ரஜினி வகைப் படமாக வந்துள்ளது. இனி மாஸ் படங்களும் கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டால் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறது. வெகு வெகு நாட்களுக்குப் பிறகு, ஏன் வருடங்களுக்குப் பிறகு ஒரு ப்யூர் மாஸ் கமெர்ஷியல் படம், நாயகனுக்காக மட்டும் அல்லாமல், வேறு பல திரை நுணுக்கங்களுக்காகவும் மெகா வெற்றியை ருசிக்கப் போகிறது. சுருக்கமாக சொல்லப் போனால், துப்பாக்கி வைத்த குறியை ஆல்மோஸ்ட் சுட்டே விட்டது. நான், துப்பாக்கி படம் தமிழ் சினிமா உலகின் ஃபார்முலாவையே புரட்டிப் போட்டு விட்டது என்று கூசாமல் சொல்லவில்லை. ஆனால் ஒரு நல்ல மாற்றத்திற்கான துவக்கப்புள்ளியை இப்படம் இட்டிருக்கிறது என்று தைரியமாகக் கூறுகிறேன். என்னடா ஒரு மசாலா படத்திற்கு போய் இவ்வளவு பெரிய விமர்சனமா என்ற ஒரு கேள்வி எழலாம். நன்றாக கவனித்தால் நான் இப்படத்தை பற்றி இங்கே எழுதியிருப்பது மிகக் குறைவு. ஒட்டுமொத்த மசாலா படங்களின் நிலையையும், அதன் இலக்கணங்கள் மாற்றியமைக்கப்படுவதையும் தான் எழுதியிருக்கிறேன் என்பது, ஆழ்ந்து படிப்பவர்களுக்குப் புரியும் என நம்புகிறேன்.

Tuesday, November 6, 2012

ராயல் சல்யூட் !!!


மதுரையில் ஏற்பட்ட ஓர் அனுபவம். கொளுத்தும் வெயில். நானும் இரு நண்பர்களும், மதிய உணவு முடித்துவிட்டு, ஒரு கடையில் டீ, குளிர்பானம் (பொவண்டோ !) குடித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு வயதான பெரியவர், எண்பது வயதைத் தாண்டியிருப்பார், தள்ளாடியபடி அருகில் வந்தார். கைகளில் பர்ஸ்களும், செயற்கை மாலைகளும் வைத்திருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் சென்று வேண்டுமா என்று கேட்டு விற்றுக்கொண்டிருந்தார். இறுதியில் எங்கள் அருகேயும் வந்து ‘வேணுமா’ என்று கேட்டார். அந்த பொருட்கள் எங்களுக்கு தேவையில்லாததால், வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். உச்சி வெயிலில் அவர் தள்ளாடியபடி சென்றதைப் பார்த்து, பரிதாபப்பட்ட நண்பர், அவரை அழைத்து, ‘ஏதாவது சாப்படறீங்களா, டீ சொல்லட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில், ‘அதெல்லாம் வேண்டாம். இதுல ஏதாவது வாங்கிக்கோங்க. நானே வாங்கி சாப்பிட்டுக்கறேன்’ . 
ஒரு கணம், ஆடிப்போன நண்பர், செயற்கை மாலைகளை வாங்கி அதற்கான பணத்தைக் கொடுத்தார். அவரும், பணத்தை வாங்கிவிட்டு, தள்ளாடியபடி அடுத்தவரிடம் அந்த பணத்தை விற்பதற்கு தள்ளாடியபடி சென்றார்.

ஒரு நொடியில், பளாரென்று அடித்த பதில் அவருடையது. எங்களின் பரிதாபத்தை ஒரே வார்த்தையில் துடைத்துச் சென்றார். ‘நீங்க என்னடா என்ன பார்த்து பரிதாபப்படுறது. எனக்கு ஓசில லாம் ஒன்னும் வேணாம். ஏதாவது பொருள் வாங்கிக்க. நானே உழைச்சு சம்பாதிச்சு சாப்டுக்கறேன்’ என்றது அவரது பதில். என்ன ஒரு சுயமரியாதை, உழைக்கும் வெறி. அவரது வயதில் இந்த அளவிற்கு ஒரு தன்னம்பிக்கையும் உழைப்பும் எனக்கு வருமா என்று தெரியவில்லை. வரவேண்டும் என்று என்னையே நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன். நாம் இந்நேரம் எங்காவது அமர்ந்து கொண்டு இந்த பதிவை டைப் செய்து கொண்டு, படித்துக்கொண்டு இருக்கும் இந்நேரத்திலும், நிச்சயம் அந்த உழைப்பாளி மதுரைத் தெருக்களில் ஏதேனும் பொருள்களை விற்று உழைத்துக்கொண்டுதான் இருப்பார். இவரைப் பார்த்தாவது, உக்காந்தே ஓ.பி அடிக்கற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருந்தணும். இந்த உழைப்பாளிக்கு லைக் போடும் உங்கள் அனைவர் சார்பிலும் ஒரு ராயல் சல்யூட் அடித்துக் கொள்கிறேன் !!!

தமிழ் ஊடகங்களும் பெண்ணடிமைத்தனமும்


இதுவும் நீண்ட நாட்களாக எழுத நினைத்து தள்ளிப் போன ஒரு விஷயம் தான். தமிழ் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் எப்படி இருக்கிறது என்பது நாமனைவரும் அறிந்ததே. அக்காலம் தொட்டு இக்காலம் முதல் வடிவங்கள் மாறினாலும், வன்மம் மட்டும் மாறுவதில்லை. இங்கு நான் சொல்ல வருவது ஊடகங்களில் இருக்கும் பெண்ணடிமைத்தனம் தான். பழைய படங்களில் இருந்து இக்காலம் வரை, பெண்கள் வெறும் போகப் பொருளாகவும், கவர்ச்சிக்காகவும், நாயகன் உரசிக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதைப் பார்த்து பார்த்து இது தான் இலக்கணம் என்ற பொதுப்புத்தியும் கூட நம்முள் ஏற்றப்பட்டிருக்கிறது. நாயகன் சிகரெட் பிடிப்பதையோ, பெண்களை ஏமாற்றும் போதோ, ‘தலைவரு கெத்து டா’ என கைத்தட்டும் ரசிகன், அதே போன்று ஒரு பெண் ஆணை ஏமாற்றும் காட்சி வரும் போது ‘.த்த ..........’ என்றே சொல்லப் பழக்கப்பட்டிருக்கிறான். இதை பலமுறை நான் தியேட்டர்களிலேயே பார்த்திருக்கிறேன். இங்கு ஆண் முன்னிறுத்தப் படுவதற்கு காரணம் படம் பார்க்கும் பார்வையாளர்களில் முக்காவாசிப் பேர் ஆண்கள் தான் என்ற சப்பைக்கட்டு ஒன்றும் சொல்லப்படுகிறது. ஆக அவனை குஷிப்படுத்த எதிர் பாலினத்தை கொச்சைப்படுத்துவது எத்தகைய வன்அரசியல்? ஏன், அது போன்று இல்லாமல் பெண்களை மதித்து வந்த படங்களை அதே ஆண் ரசிகன் கொண்டாடியதில்லையா? ஆண் இயக்குநர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றில்லை. பெண் இயக்குநர்களும் பெண்களை அமைதியாக, அழகாக, பக்தியாக, ஹோம்லியாக, அடங்கிப் போகிறவளாகத் தான் காட்டுகிறார்கள். கேட்டால் அது தான் தமிழ் பண்பாடாம். என்ன ஒரு அயோக்கியத்தனம். பெண்ணை அடிமைப்படுத்தி பண்பாடு வளர்த்த ஆண்பொறுக்கிகளின் தவறு இது. இப்போதைய சினிமாவில் இதற்கான உதாரணங்களாக சிலவற்றை சொல்ல வேண்டும். பாடல். இது தேவையா இல்லையா என்பது வேறு விவாதம். ஆனால், நாயகனின் அறிமுகப் பாடலில் அவன் வீரம், குணம், பண்பு, அன்பு போன்றவை வரிகளாக சொல்லப்படுகின்றன. ஆனால் ஒரு நாயகியை அறிமுகப்படுத்தும் பாடலில் அவள் அழகும், அவள் அழகு எப்படி மற்றவர்களை ஏங்க வைக்கிறது என்பது மட்டுமே சொல்லப்படுகிறது. ஏன், பெண் என்றால் அழகாக மட்டும்தான் இருக்க வேண்டுமா? அவளுக்கும் வீரம், அன்பு போன்ற பண்புகள் இருக்காதா? ஆணாதிக்கத்தின் இன்னொரு வடிவம் தான் இது.

இன்னொரு மிக முக்கியமான விஷயம். இதைத்தான் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஊடகங்கள். ஊடகங்களிலும் இது போன்ற பெண்ணடிமைத்தனங்கள் கூடி கும்மியடிக்கின்றன. பெண் என்றால் அழகு மட்டும் தான் என்றே ஊடகங்களும் பறைசாற்றுகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் ‘முகமூடி’ திரைப்பட விமர்சனம். தமிழின் முன்னணி பத்திரிக்கைகளில் வந்த விமர்சனங்களில் கூட, ‘ஹீரோயின் ரொம்ப ரொம்ப சுமாராக இருக்கிறார். இவரை எப்படி நாயகியாக போட்டார்கள்’ என்றே விமர்சிக்கப்பட்டிருந்தது. ஏன், அழகாக இருக்கும் ஒரு பெண் தான் நாயகியாக இருக்க வேண்டுமா? முதலில் அழகென்றால் புற அழகு மட்டுமா? அது பற்றிய புரிதலே இன்னும் நிறைய வேண்டும். ஒரு கதையும் கதாப்பாத்திரமும் தானே அதற்கேற்ற நடிகரையும், அவரது தோற்றம், முகம், உடல்மொழி போன்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது? 


இவர்கள் பத்தாதென்று, தற்போதைய சென்சேஷனான, ப்ளாக்கர்கள். இவர்களும் உடனுக்குடன் தங்கள் வலைப்பூவில் தங்கள் விமர்சனத்தை பதிப்பது வழக்கம். அதிலும் சில முன்னணி பதிவர்களும், சில முன்னணி எழுத்தாளர்களும், ‘நாயகி ரொம்ப சப்ப, முகத்த பாக்க முடியல, மூக்க பாக்க முடியல, இவர ஏன் ஹீரோயினா போட்டாங்க’ என்று காமெடி பண்ணுவதாய் நினைத்துக்கொண்டு எழுதியிருந்தார்கள். இதுதான் மிகக் கவலைக்குரிய ஒன்று. ஒரு படைப்பை ஆழ்ந்து விமர்சிக்க வேண்டிய விமர்சகர்கள் கூட, இது போன்ற ஆணாதிக்க சிந்தனையுடனே சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இதிலும் சிலர் முற்போக்கு முகமூடிகளுடன். ஏன் இப்போதுள்ள நாயகர்கள் எல்லாம் அவ்வளவு லட்சணமா என்ன? அவர்களைப் பார்த்து இதே கேள்வியை கேட்க வேண்டியதுதானே? ஆக, ஒரு ஆணை எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் இச்சமூகம் பெண்ணை அழகாக இருந்தால்தான் ஏற்றுக்கொள்கிறது. வெவ்வேறு வழிகளில் பரவும், தன்னை அப்டேட் செய்துகொள்ளும் ஆணாதிக்கமே ஒழிய இது வேறொன்றுமில்லை. இன்னும் பெண், சினிமாவில் கவர்ச்சிப் பொருளாகத்தான் இருக்கிறாள் என்பதற்கான சான்று இது. ஆணாதிக்கத்தின் இன்னொரு பெரிய உதாரணம் ஒன்றும் இருக்கிறது. அது இப்போதைய சென்சேஷனும் கூட. அதைப் பற்றி விரைவில் எழுதுகிறேன்.அழகு குறித்த இந்த ஆணாதிக்கக் கருத்தை விதைக்கும் இயக்குநர்களும், விமர்சகர்களும், எழுத்தாளர்களும், கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு விமர்சனம் எழுதுவது சாலச்சிறந்தது.

ஸ்கைஃபாலும் விமர்சனங்களும் !!!


தமிழில் தொடர்ந்து பில்லா 2, சகுனி, மாற்றான், தாண்டவம் என பார்த்து பார்த்து வெறுத்துப்போயிருக்கும் நிலையில், இங்கிலிஷ்ல யும் நாங்க இந்த மாதிரி படம் எடுப்போமே என்று போட்டியாக களமிறங்கியிருக்கும் படம். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வர ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகிறது. அதை இந்த அளவிற்கு யாரும் மொக்கை பண்ண முடியாது. அம்புட்டு மொக்கை. 

தமிழில் தான் கதை, திரைக்கதை, வசனம் என எல்லா துறைகளையும் இயக்குநர் பா
ர்ப்பார். ஆங்கிலத்தில் கதை என்று ஒரு 5 பேர் போடுவார்கள். திரைக்கதை என்று 3 பேர் போடுவார்கள். இந்த படத்திலும் அப்படி போடுவார்கள். அப்படி அவர்கள் என்ன கதை, திரைக்கதையில் கிழித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. முதல் காட்சியே, பாண்ட் படங்களுக்கு உரித்தான் ஒரு வேகமான சேஸிங்கோடு ஆரம்பிக்கின்றது. முதல் காட்சியில் பாண்ட் சுடப்பட்டும் விடுகிறார். ஆகா, புதுசா இருக்கே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அதெல்லாம் சும்மா, உல்லல்லாயியியி என்று அதன் பின் உக்கார வைத்து கடுப்பேத்தறாங்க மை லார்ட். கரெக்டான நேரங்களில் பாண்ட் என்ட்ரி கொடுத்து பல பேரை காப்பாற்றுகிறார். என்னென்னவோ செய்கிறார். எதுக்குன்னு தான் புரியல. அதுலயும் க்ளைமேக்ஸ் மகா அற்புதம். பல பல பல தமிழ் மசாலா படங்கள் இதைவிட நல்ல க்ளைமேக்ஸை கொண்டிருந்து கலாய்க்கப்பட்டிருக்கின்றன. 
நான் இங்கே எழுத வந்தது இப்படத்தின் விமர்சனம் அல்ல. படம் முடியும் முன், பார்க்கிங்கில் கூட்டம் இருக்கும் என சீக்கிரம் எழுந்து செல்லும் ரசிகர் உணர்த்திவிடுகிறார் படம் எப்படியென்பதை. இது போன்று, தமிழ் படங்களை விட மகா மட்டமான கதை, திரைக்கதை கொண்டு, தொழில்நுட்பத்தில் மட்டும் தூக்கலாக இருக்கும் இந்த ஆங்கிலக் குப்பைகளை விமர்சகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரகசியம் என்ன? நாங்கலாம் இங்கிலிஷ் படத்தை இங்கிலிஷ்லயே பாத்து விமர்சனம் பண்ணுவோம் தெரியுமா என்று காட்டிக்கொள்ளவா? பல ஆங்கில நாளிதழ்களிலும், சில ப்ளாக்குகளிலும், மேலும் சில பதிவுகளிலும் மிகச்சிறந்த பாண்ட் படங்களில் ஒன்று என்று இப்படம் பாராட்டப்படுகின்றது. இதை ஜேம்ஸ்பாண்டே ஒப்புக்கொள்ள மாட்டார் என நினைக்கிறேன். எது எப்படியோ, ரசனை ஒருவருக்கொருவர் வேறுபடும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இதே போன்று ஒரு மொக்கை படம் தமிழில் வந்தால், வந்தபோது, இவர்கள் அந்த படத்தை கிழித்துத் தொங்கப்போட்டவர்கள் என்பதை நினைவூட்டுகிறேன். தமிழ் படங்களில் வரும் நல்ல நகைச்சுவைகளுக்கு உதடு வலிக்காமல் சிரித்து, ஆங்கில படங்களில் வரும் மொக்கை ஜோக்கிற்கு தியேட்டரில் கத்தி சிரித்து, ‘ஏ திஸ் இஸ் மை கன்ட்ரி, ஜ அன்டர்ஸ்டாண்ட் இங்கிலிஷ்’ என பீத்திக்கொள்ளும் முறைக்கு சமமானது இது.

இனி நாம் நமது விஜயகாந்தையும் தற்போதைய விஜய், அஜீத், சூர்யாக்கள் தரும் மசாலாக்களை நினைத்து தமிழ் சினிமா எப்போது உலக தரத்தை தொடும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. இன்று உலகமே புகழும், விமர்சித்து தூக்கி வைத்துக் கொண்டாடும், வசூலில் பட்டையைக் கிளப்பும் இந்த ஸ்கைஃபாலை விட பன்மடங்கு சிறந்த ஆக்சன் கம் மசாலா படங்களை நாம் பல வருடங்களாக கொடுத்துக்கொண்டு தான் வருகிறோம். இதுதான் உலகத்தரம் என்றால் நாம் அதைவிட ஒரு படி மேல்தான் இருக்கிறோம்.

இந்தப் படம் உங்களுக்கு இண்டரஸ்டிங்கா இருக்கனும்னா ஒரே வழிதான் இருக்கும். கேம்ஸ் இருக்கற மொபைல் எதனா இருந்தா கொண்டு போங்க. செம இண்டரஸ்டிங்கா இருக்கும் !!!