Tuesday, November 6, 2012

தமிழ் ஊடகங்களும் பெண்ணடிமைத்தனமும்


இதுவும் நீண்ட நாட்களாக எழுத நினைத்து தள்ளிப் போன ஒரு விஷயம் தான். தமிழ் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் எப்படி இருக்கிறது என்பது நாமனைவரும் அறிந்ததே. அக்காலம் தொட்டு இக்காலம் முதல் வடிவங்கள் மாறினாலும், வன்மம் மட்டும் மாறுவதில்லை. இங்கு நான் சொல்ல வருவது ஊடகங்களில் இருக்கும் பெண்ணடிமைத்தனம் தான். பழைய படங்களில் இருந்து இக்காலம் வரை, பெண்கள் வெறும் போகப் பொருளாகவும், கவர்ச்சிக்காகவும், நாயகன் உரசிக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதைப் பார்த்து பார்த்து இது தான் இலக்கணம் என்ற பொதுப்புத்தியும் கூட நம்முள் ஏற்றப்பட்டிருக்கிறது. நாயகன் சிகரெட் பிடிப்பதையோ, பெண்களை ஏமாற்றும் போதோ, ‘தலைவரு கெத்து டா’ என கைத்தட்டும் ரசிகன், அதே போன்று ஒரு பெண் ஆணை ஏமாற்றும் காட்சி வரும் போது ‘.த்த ..........’ என்றே சொல்லப் பழக்கப்பட்டிருக்கிறான். இதை பலமுறை நான் தியேட்டர்களிலேயே பார்த்திருக்கிறேன். இங்கு ஆண் முன்னிறுத்தப் படுவதற்கு காரணம் படம் பார்க்கும் பார்வையாளர்களில் முக்காவாசிப் பேர் ஆண்கள் தான் என்ற சப்பைக்கட்டு ஒன்றும் சொல்லப்படுகிறது. ஆக அவனை குஷிப்படுத்த எதிர் பாலினத்தை கொச்சைப்படுத்துவது எத்தகைய வன்அரசியல்? ஏன், அது போன்று இல்லாமல் பெண்களை மதித்து வந்த படங்களை அதே ஆண் ரசிகன் கொண்டாடியதில்லையா? ஆண் இயக்குநர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றில்லை. பெண் இயக்குநர்களும் பெண்களை அமைதியாக, அழகாக, பக்தியாக, ஹோம்லியாக, அடங்கிப் போகிறவளாகத் தான் காட்டுகிறார்கள். கேட்டால் அது தான் தமிழ் பண்பாடாம். என்ன ஒரு அயோக்கியத்தனம். பெண்ணை அடிமைப்படுத்தி பண்பாடு வளர்த்த ஆண்பொறுக்கிகளின் தவறு இது. இப்போதைய சினிமாவில் இதற்கான உதாரணங்களாக சிலவற்றை சொல்ல வேண்டும். பாடல். இது தேவையா இல்லையா என்பது வேறு விவாதம். ஆனால், நாயகனின் அறிமுகப் பாடலில் அவன் வீரம், குணம், பண்பு, அன்பு போன்றவை வரிகளாக சொல்லப்படுகின்றன. ஆனால் ஒரு நாயகியை அறிமுகப்படுத்தும் பாடலில் அவள் அழகும், அவள் அழகு எப்படி மற்றவர்களை ஏங்க வைக்கிறது என்பது மட்டுமே சொல்லப்படுகிறது. ஏன், பெண் என்றால் அழகாக மட்டும்தான் இருக்க வேண்டுமா? அவளுக்கும் வீரம், அன்பு போன்ற பண்புகள் இருக்காதா? ஆணாதிக்கத்தின் இன்னொரு வடிவம் தான் இது.

இன்னொரு மிக முக்கியமான விஷயம். இதைத்தான் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஊடகங்கள். ஊடகங்களிலும் இது போன்ற பெண்ணடிமைத்தனங்கள் கூடி கும்மியடிக்கின்றன. பெண் என்றால் அழகு மட்டும் தான் என்றே ஊடகங்களும் பறைசாற்றுகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் ‘முகமூடி’ திரைப்பட விமர்சனம். தமிழின் முன்னணி பத்திரிக்கைகளில் வந்த விமர்சனங்களில் கூட, ‘ஹீரோயின் ரொம்ப ரொம்ப சுமாராக இருக்கிறார். இவரை எப்படி நாயகியாக போட்டார்கள்’ என்றே விமர்சிக்கப்பட்டிருந்தது. ஏன், அழகாக இருக்கும் ஒரு பெண் தான் நாயகியாக இருக்க வேண்டுமா? முதலில் அழகென்றால் புற அழகு மட்டுமா? அது பற்றிய புரிதலே இன்னும் நிறைய வேண்டும். ஒரு கதையும் கதாப்பாத்திரமும் தானே அதற்கேற்ற நடிகரையும், அவரது தோற்றம், முகம், உடல்மொழி போன்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது? 


இவர்கள் பத்தாதென்று, தற்போதைய சென்சேஷனான, ப்ளாக்கர்கள். இவர்களும் உடனுக்குடன் தங்கள் வலைப்பூவில் தங்கள் விமர்சனத்தை பதிப்பது வழக்கம். அதிலும் சில முன்னணி பதிவர்களும், சில முன்னணி எழுத்தாளர்களும், ‘நாயகி ரொம்ப சப்ப, முகத்த பாக்க முடியல, மூக்க பாக்க முடியல, இவர ஏன் ஹீரோயினா போட்டாங்க’ என்று காமெடி பண்ணுவதாய் நினைத்துக்கொண்டு எழுதியிருந்தார்கள். இதுதான் மிகக் கவலைக்குரிய ஒன்று. ஒரு படைப்பை ஆழ்ந்து விமர்சிக்க வேண்டிய விமர்சகர்கள் கூட, இது போன்ற ஆணாதிக்க சிந்தனையுடனே சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இதிலும் சிலர் முற்போக்கு முகமூடிகளுடன். ஏன் இப்போதுள்ள நாயகர்கள் எல்லாம் அவ்வளவு லட்சணமா என்ன? அவர்களைப் பார்த்து இதே கேள்வியை கேட்க வேண்டியதுதானே? ஆக, ஒரு ஆணை எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் இச்சமூகம் பெண்ணை அழகாக இருந்தால்தான் ஏற்றுக்கொள்கிறது. வெவ்வேறு வழிகளில் பரவும், தன்னை அப்டேட் செய்துகொள்ளும் ஆணாதிக்கமே ஒழிய இது வேறொன்றுமில்லை. இன்னும் பெண், சினிமாவில் கவர்ச்சிப் பொருளாகத்தான் இருக்கிறாள் என்பதற்கான சான்று இது. ஆணாதிக்கத்தின் இன்னொரு பெரிய உதாரணம் ஒன்றும் இருக்கிறது. அது இப்போதைய சென்சேஷனும் கூட. அதைப் பற்றி விரைவில் எழுதுகிறேன்.அழகு குறித்த இந்த ஆணாதிக்கக் கருத்தை விதைக்கும் இயக்குநர்களும், விமர்சகர்களும், எழுத்தாளர்களும், கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு விமர்சனம் எழுதுவது சாலச்சிறந்தது.

1 comment: