Friday, November 16, 2012

துப்பாக்கி - மாற்றியமைக்கப்படும் மாஸ் ஃபார்முலா



படம் சூப்பர் ஹிட் என்று இந்நேரம் தெரிந்திருக்கும். இவ்வருடத்தின் மிகப்பெரிய வசூல்வாரியாகவும் இருக்கக்கூடும். இத்தருணத்தில் இப்படத்தின் விமர்சனத்தை மட்டுமே எழுதத் தோன்றவில்லை. இதன் மூலம் கொஞ்சம் மசாலா சினிமாவையும் அலசலாம் என்று நினைக்கிறேன். 





90 களில் வந்த ரஜினி படங்களில் சில பொதுவான அம்சங்கள் இருக்கும். ரஜினிக்கே ஏற்ற மாஸ் அயிட்டங்கள் இருக்கும். ரசிகர்களைக் கதறச் செய்யும் சில சீன்கள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் திரைக்கதையோடு பிணைக்கப்பட்டிருக்கும். துண்டாக தெரியாமல் மிகக் கவனமாக கதையோடு முடிந்தவரையில் ஒட்டவைக்கப்பட்டு, ஒரு கோர்வையாக, ஆனால் ரஜினிக்கேற்ற சில தீனிகளும் தூவப்பட்டு வந்திருக்கும். அந்தப் படங்கள் அனைத்தும் அந்தந்த வருடங்களின் ப்ளாக்பஸ்டர்களாக மாறியது. உதாரணம், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை. ரஜினிக்கு அடுத்த தலைமுறையில் உருவான மாஸ் ஹீரோக்கள் விஜய்யும் அஜீத்தும். ஏதோ ஒரு காரணத்துக்காக முதல் காட்சிக்கு சும்மா கைதட்டிக்கொண்டே, விசிலடிக்க வேண்டும் என்று பாக்ஸ் ஆபிஸ் முன்னால் விடிகாலையில் க்யூ கட்டும் ரசிகனுக்கு இவர்கள் இருவரும் கிடைத்தார்கள். அந்த கைத்தட்டல்களையும், விசில்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஆனால் ரஜினி படங்கள் விசிலடிக்கப்பட்டதற்கான காரணங்களை இந்த இருவரின் படங்களும் ரசிகனுக்கு தந்ததா என்றால் நிச்சயம் இல்லை. ஆனாலும் ரசிகன் விசுவாசமாக கைத்தட்டிக் கொண்டு தான் இருந்தான். 








ஆனால் இவர்கள் தலைமுறையில் ஒரு ஆபத்தான ஃபார்முலா உருவாகியது. அது, விஜய்யும் அஜீத்தும் திரையில் வந்தாலே போதும், படம் ஓடி விடும் என்று இவர்களே ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இவர்களை ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்கவும் ஒரு நல்ல திரைக்கதை (கில்லி, போக்கிரி, தீனா, பில்லா) தேவைப்பட்டது என்பதை இவர்கள் போகப் போக மறந்து போனார்கள். தங்களை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு பலபல குப்பைகளை ரசிகனின் தலையில் கொட்டிக் கொண்டே வந்தனர். அவனும் எல்லாவற்றையும் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனாக தாங்கிக் கொண்டு கைதட்டிக் கொண்டே வந்தான். இவர்கள் வழியில், வித்தியாசமாய் நடித்து தனியிடம் பிடித்து வந்த விக்ரமும் சூர்யாவும் பின் கார்த்தியும் கூட மாஸ் நாயகர்கள் ஆகும் ஆசையில் சில சுவாரசியமான படங்களுக்கு பிறகு (தில், தூள், சிங்கம், அயன்) நாயகனை முன்னிறுத்தும் குப்பைகளை அள்ளித் தெளித்தனர் (கந்தசாமி, ராஜபாட்டை, ஆதவன், மாற்றான், சகுனி). பாவம் ரசிகன் எத்தனை நாள் தான் விசுவாசமாய் கைதட்டிக் கொண்டே இருப்பான். சோர்ந்தான். இருப்பினும் கைதட்டுவதை விடவில்லை. ஆனால் சற்று மந்தமாகத் தட்டினான். அவ்வளவுதான். இந்த சினிமாக்களின் அடிநாதமான வசூலை அதுவே ஆட்டிப்பார்த்தது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் மசாலாப் படங்கள் தலைகுப்புறப் படுத்துப் போனது. இதை வைத்தாவது இவர்கள் திருந்தியிருக்கலாம். ஆனால் இவர்கள் மாற்றியது, படத்தின் லொக்கேஷன்களையும், தொழில்நுட்பங்களையும் பட்ஜெட்டையும் தானே தவிர, கதையையோ திரைக்கதையையோ அல்ல. இது போன்று தொட்டுத் தொடர்ந்து வந்த இந்த பாரம்பரியத்தைத் தான் உடைத்திருக்கிறது துப்பாக்கி. 



ஆம், என்னளவில் விஜய்க்கும் அஜீத்திற்கும் இருக்கும் ரசிகர் பலம் அளப்பரியது. அதற்கேற்ற ஒரு படத்தைக் கூட இவர்கள் கொடுக்கவில்லை என்பேன். ஒவ்வோர் சுமாரான படங்களுக்கும் ரசிகன் தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டு இதுதான் எங்க தலைவர் மாஸ் என்று இதுவரை மார்தட்டி வந்தான். ஆனால் முதல் முறை, விஜய் தன் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் தீனி போட்டிருக்கிறார் என்று கூறலாம். நிறைய காட்சிகளில் விஜய்க்காக மட்டும் அல்லாமல் காட்சிகளுக்காக ரசிகர்கள் தியேட்டரில் கூப்பாடு போடுகிறார்கள். இதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்தது. இனியும் நாயகர்களை மட்டும் வைத்து படங்களை எடுத்துவிட முடியாது என்பது உணரப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கும், காட்சி அமைப்பிற்கும் நல்ல முக்கியத்துவம் கொடுத்து, அதில் நாசூக்காக ஹீரோயிச வேலைப்பாடுகள் செய்து, ரசிகர்களுக்கு பரிமாறப்பட்டிருக்கிறது. அவர்கள் வயிறார உண்கிறார்கள். அதற்கென இந்தப் படத்தில் குறைகளே இல்லையா எனலாம். நிறைய இருக்கின்றது. படு வழக்கமான க்ளைமேக்ஸ், முஸ்லிம்களை தீவிராதிகளாகவே காட்டும் சிறுபிள்ளைத்தனம், தேவையே அற்ற பாடல்கள் என பலப்பல. இனியும் ரசிகர்களுக்காகத் தான் பாடல் வைத்தேன் என்று இயக்குநர்கள் பூ சுற்ற முடியாது. தேவையற்ற பாடல்களின் போது, முதல் நாள் முதல் காட்சிகளிலேயே சிகரெட்டுகள் பற்ற வைக்கப்படுகின்றன. 



ஆனாலும் இப்படம் இக்குறைகளை மறக்கடிக்கக் காரணம் நிச்சயம் ஹீரோயிசம் தாண்டிய திரைக்கதை அம்சங்கள் தான். மாஸ் படங்களுக்கு யாரும் இங்கே எதிரிகள் கிடையாது. அலசிப் பார்த்தால் ஜேம்ஸ்பாண்ட் படங்களே மாஸ் படங்கள் தான். ஆனால் அது இங்கே தனி மனிதத் துதியாகவும், ஹீரோ வந்தா, நின்னா, நடந்தா போதும் என்றும் அர்த்தப்பட்டு வந்தது. அந்நிலைமையைத் தான் துப்பாக்கி சுட்டிருக்கிறது எனக் கருதுகிறேன். சரியான திரைக்கதையில் சரியான மாஸ் ஃபார்முலா என்று பலப்பல வருடங்களுக்கு பிறகு முழுக்க வேறு வகை ஸ்டைலில் 90 களின் ரஜினி வகைப் படமாக வந்துள்ளது. இனி மாஸ் படங்களும் கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டால் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறது. வெகு வெகு நாட்களுக்குப் பிறகு, ஏன் வருடங்களுக்குப் பிறகு ஒரு ப்யூர் மாஸ் கமெர்ஷியல் படம், நாயகனுக்காக மட்டும் அல்லாமல், வேறு பல திரை நுணுக்கங்களுக்காகவும் மெகா வெற்றியை ருசிக்கப் போகிறது. சுருக்கமாக சொல்லப் போனால், துப்பாக்கி வைத்த குறியை ஆல்மோஸ்ட் சுட்டே விட்டது. நான், துப்பாக்கி படம் தமிழ் சினிமா உலகின் ஃபார்முலாவையே புரட்டிப் போட்டு விட்டது என்று கூசாமல் சொல்லவில்லை. ஆனால் ஒரு நல்ல மாற்றத்திற்கான துவக்கப்புள்ளியை இப்படம் இட்டிருக்கிறது என்று தைரியமாகக் கூறுகிறேன். 



என்னடா ஒரு மசாலா படத்திற்கு போய் இவ்வளவு பெரிய விமர்சனமா என்ற ஒரு கேள்வி எழலாம். நன்றாக கவனித்தால் நான் இப்படத்தை பற்றி இங்கே எழுதியிருப்பது மிகக் குறைவு. ஒட்டுமொத்த மசாலா படங்களின் நிலையையும், அதன் இலக்கணங்கள் மாற்றியமைக்கப்படுவதையும் தான் எழுதியிருக்கிறேன் என்பது, ஆழ்ந்து படிப்பவர்களுக்குப் புரியும் என நம்புகிறேன்.

1 comment:

  1. மசாலா நெடி படிப்படியாகத்தான் மறையும். நல்ல இயற்கை மணம் ஆளுமை கொள்ள இத்தகைய விமர்சனங்கள உதவும்.

    ReplyDelete