Saturday, December 1, 2012

அம்மாவின் கைபேசி - மாசுபடுத்தப்படும் மாற்று சினிமா !!!

மாற்று சினிமா ! கிட்டத்தட்ட எல்லா சினிமா கூட்டங்களிலும் இந்த பதத்தை கேட்டிருப்பீர்கள். சினிமா எதிலிருந்து மாற வேண்டும் ? எதை மாற்றிக் கொள்ள  வேண்டும்? என பல கேள்விகள் நம்முள் எழுந்து, மாற்று சினிமா என்றால் என்ன என்பதை பலரால் சொல்ல இயலாவிட்டாலும் புரிந்து கொள்ள முடியும். ஜிகினாத்தனங்கள் எதுவும் இல்லாமல், மக்கள் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்படும், வணிக சமரசங்கள் இன்றி, நேர்மையாக எடுக்கப்படும் படங்கள் இந்த வகையையே சாரும். நம்மூரில் பல நாட்களாக எழுந்து வரும் விவாதம், மாற்று சினிமாக்கெல்லாம் யாருப்பா போவாங்க? கமர்ஷியல் படம்தான் ஓடும் என்பது, இங்குள்ள பொதுப்புத்தி. இதை பல நல்ல சினிமாக்கள் உடைத்தெறிந்திருக்கின்றன. இருந்தாலும் இந்த கூற்று அடிக்கடி தலைதூக்கிக் கொண்டே இருக்கும். இப்போது இந்த கூற்றை மிகப்பயங்கரமாக வலுப்படுத்த , மாற்று சினிமாக்களை மாசுபடுத்த வந்திருக்கும் ஒரு படம், அம்மாவின் கைபேசி.முதலில் இந்த படம் மாற்று சினிமாவா என்பதையே கேள்விக்குள்ளாக்க வேண்டும். படம் பார்த்தபின் இல்லவே இல்லை என்று நமக்கு புரிந்தாலும், வெளிவருவதற்கு முன் அப்படம் என்னவாக ப்ரொஜக்ட் செய்யப்படுகிறதோ, அப்படித்தான் அந்தப் படம் மக்கள் மனதில் பதியும். அவ்வகையில் மாற்று சினிமாக்களுக்கு ஒரு மறக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார் தங்கர் பச்சான். இந்த அம்மாவின் கைபேசி படத்தை, தமிழ் சமூகத்தின் மிக முக்கியமான படம், நல்ல மாற்று சினிமா, வாழ்க்கையை பேசும் படம், யதார்த்தப் படம் என்று செல்லுமிடமெல்லாம் முழங்கி வந்தார். இதனால் என்னென்ன மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்பது அவருக்குத் தெரியுமா? இறுதியில் சொல்கிறேன். இப்போது படம்.

இந்த வருடத்தில் நான் பார்த்த மிக அசுவாரசியமான படங்களில் மிக தலையாயது இந்த அம்மாவின் கைபேசி. படத்தின் முதல் காட்சியில் இருந்து எந்த காட்சியிலும் படத்தோடு ஒன்றவே முடியவில்லை. எந்த ஒரு கதைக்கும், அது யதார்த்தப் படமோ, மசாலாப் படங்களோ, திரைக்கதைதான் மிக முக்கியம். ரசிகனை கடைசி வரை கட்டிப்போடும் வித்தை அதுதான். அது இந்த படத்தில் எவ்வளவு சூம் செய்து பார்த்தாலும் கிடைக்கவில்லை. ஒரு ப்ளாஷ்பேக் முறையில் படம் சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், எதை நோக்கி படம் செல்கிறது என்பது சுத்தமாக தெளிவுபடுத்தப்படவில்லை. அம்மாவின் கைபேசி படத்தில் அம்மாவும் மனதில் நிற்கவில்லை, கைபேசியும் மனதில் நிற்கவில்லை. அப்படியென்றால் திரைக்கதையும் காட்சியமைப்புகளும் எப்படி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்நேரம் படத்தின் கதை எல்லா விமர்சனங்களிலும் வந்திருக்கும். அதை மீண்டும் சொல்லி உங்களை வதைப்படுத்த விரும்பவில்லை. சிலவே சிலவற்றை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சாந்தனு வீட்டை விட்டு துரத்தப்படும் காரணம் இவ்வளவு லேசாக, வீக்காக இருந்தால் பார்ப்பவனுக்கு எப்படி அந்த வலி ஏற்படும். அவருக்கும் அம்மாவுக்கும் இருக்கும் உறவு கூட தெளிவாக இல்லை. திடீர் திடீரென திரைக்கதை எங்கெங்கோ போகிறது, யார் யாரோ என்னென்னவோ பேசுகிறார்கள், செய்கிறார்கள். என்னவென்பது தான் புரிய மாட்டேன் என்கிறது. சாந்தனு, திடீரென குவாரி சூப்பர்வைசர் ஆகிறார், திருடுகளை கண்டுபிடிக்கிறார், அம்மாவுக்கு போன் வாங்கி கொடுக்கிறார் (அப்பா, டைட்டிலுக்குள்ள வந்துட்டாங்கப்பா), அங்கே அம்மாவின் வீட்டை பிள்ளைகளே இடிக்கிறார்கள், இவரை கடத்துகிறார்கள், மொத்தத்தில் ஏதோ ஒரு நம்பிக்கையில் தியேட்டருக்குள் வந்த அனைவரையும், அவ்வளவு நெஞ்சழுத்தமா உனக்கு என்றபடி, குத்து குத்து என்று குத்துகிறார்கள். எதை நோக்கி திரைக்கதை பயணிக்க வேண்டும் என்பதிலேயே தெளிவு இல்லையென்றால், ஒரு படம் இப்படித்தான் அசுவாரசியமாக போய் முடியும்.

அடுத்து, மேக்கிங். தற்போதைய குறும்படங்களில் இருக்கும் நேர்த்தி கூட, இப்படத்தின் ஒரு காட்சியில் கூட இல்லை. முடிவில்லாமல் முழுமையில்லாத காட்சிகள், நேர்த்தியில்லாத இயக்கம், சுமாருக்கும் கீழான தொழில்நுட்பம் (இதில் இளையராஜாவை வம்புக்கிழுத்து, இந்தப் படத்தின் இசை என்னை சர்வதேசத்திற்கு கொண்டு போகும் என்று வேறு பேசியதாய் கேள்வி), தொய்வான திரைக்கதை என மிக மிக அம்மெச்சூரான ஒரு படம்தான் அம்மாவின் கைபேசி. இதில் கருத்து சொல்கிறேன் என்று, கதை திரைக்கதைக்கு சம்பந்தமேயில்லாமல், தங்கர்பச்சானை கேமரா காட்டும் முன்பு ஒரு பான் PAN வருகிறது. அதில் இருவர் நடந்து கொண்டு குடியைப் பற்றி சில கருத்துக்களை அள்ளித் தெளித்து செல்கிறார்கள். இப்படிக் கருத்துக்களை புகுத்துவதற்கும், மசாலா படங்களில் குத்துப் பாடல்களை புகுத்துவதற்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. இப்போது சில முக்கிய விஷயங்கள். இந்த படத்தை எந்த விதத்தில் நல்ல சினிமா, மாற்று சினிமா என்று தங்கர்பச்சான் முன்வைத்தார்? மசாலா படங்களில் நீங்கள் பார்க்கும் அத்தனையும் இந்த படத்திலும் உண்டு. ஆபாச நடனம் உண்டு, குத்துப் பாட்டு போன்ற ஒலிக்கும் ஒரு பாட்டு உண்டு, கதைக்கு தேவையில்லாத ஏகப்பட்ட காட்சிகள் உண்டு, லிப் கிஸ் காட்சிகள் உண்டு, என அத்தனை குப்பைகளும் இந்த படத்தில் உண்டு. பார்க்கும் ரசிகன் இந்த படத்தை எந்த தட்டில் வைத்துப் பார்ப்பான் ? இத்தனைக்கும் மசாலா படங்கள் அளிக்கும் திருப்தியை இந்த படம் பத்தில் ஒரு பங்கைக் கூட அளிக்கவில்லை. அப்போது, ரசிகன் எந்த படங்களை நோக்கி செல்வான் ?

இந்த படம் எவ்வாறு மாற்று சினிமாக்களை மாசுவடுத்துகிறது என்று இப்போது சொல்கிறேன். இது போன்ற படங்கள் மாற்று சினிமாக்கள் என்று முன்னிறுத்தப்படுவதால், மாற்று சினிமாக்களைக் குறித்த ஒரு கசப்பு ரசிகனிடம் ஏற்பட்டு விடும். நாளை வேறு ஏதும் நல்ல சினிமாக்கள் மாற்று சினிமாக்களாக முன்னிறுத்தப்பட்டு வெளிவரும்போது கூட, ரசிகன் அதைப் பார்க்க நினைக்கும் போது, இது போன்ற படங்கள் தந்த அனுபவம்தான் அவன் படம் பார்க்கப் போகும் முடிவை பாதிக்கும். மாற்று சினிமாக்களுக்கு மிக முக்கியமே ரசிகனை தியேட்டருக்குக் கொண்டு வருவதுதான். அந்த அடிப்படைத் தேவையையே இந்தப் படங்கள் வெகுவாக பாதிக்கும்.

இரண்டு, இந்த படத்தின் வெளியீடு. துப்பாக்கி படத்துடன் வெளியாகியுள்ளது. அழகி தந்த நம்பிக்கையில் இந்த படத்தை பெரிய படங்களுடன் வெளியிடுவதாகவும், ரசிகர்கள் தன் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள் என்றும் தங்கர்பச்சான் சொல்லியிருந்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்ற ரசிகர்கள் தயாராகத்தான் இருந்தார்கள், ஆனால் அழகி போன்ற படத்தை தந்திருந்தால். மாறாக, இதுபோன்ற ஒரு குப்பையை தந்துவிட்டு, ரசிகர்களின் நம்பிக்கையை தங்கர்பச்சான் தான் சிதைத்துள்ளார். அடுத்த முக்கியமான விஷயம், துப்பாக்கி படம் பெருவெற்றி பெற்றுள்ளது. அது கூட வந்த அம்மாவின் கைபேசி தோல்வியடைந்துள்ளது. இரண்டு படத்தையும் பார்த்தவர்களுக்குத் தெரியும், எது சுவாரசியமான படம் என்று. ஆனால் அம்மாவின் கைபேசி படத்தை நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள். அது போன்ற ஒரு மக்கள் கூட்டத்திடம் எது போன்ற ஒரு கருத்து விதைக்கப்படும் என்றால், ‘பாத்தியா துப்பாக்கி ஹிட்டாயிடுச்சு. அம்மாவின் கைபேசி ப்ளாப். நான்தான் அப்பவே சொன்னேன்ல, இந்த மாதிரி மாற்று சினிமாலாம் ஓடாதுன்னு. மசாலா படம்தான்டா ஓடும்’ என்றுதான் பேசுவார்கள். பேசுகிறார்கள். அப்போது எந்தப்படத்திடம் அவர்கள் மீண்டும் மீண்டும் செல்வார்கள்? நிச்சயம் அவர்களை திருப்திப்படுத்திய மசாலா படத்திடம்தான். அவர்களை அலுப்படைய செய்த இந்த மாற்று சினிமா (?) விடம் அல்ல. தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் மசாலா படங்களிடம் தான் மறுபடி ஓடுவார்கள். முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த அம்மாவின் கைபேசி நிச்சயம் மாற்று சினிமா அல்ல. இரண்டாவது, இப்போது ஜெயித்திருப்பது விஜய்யோ, முருகதாஸோ, மசாலாத்தனமோ அல்ல. இந்த தீபாவளிப் போட்டியில் ஜெயித்திருப்பது, சுவாரசியமான திரைக்கதைதான். அது தான் எல்லா படங்களுக்கும் அடிப்படை. அது இந்த படத்திலும் இருந்திருந்தால் நிச்சயம் இதுவும் ஓடியிருக்கும். துப்பாக்கியுடன், மொழி  அல்லது, எங்கேயும் எப்போதும் போன்ற ஒரு படமோ வந்திருந்தால் நிச்சயம் அதுவும் பெருவெற்றியடைந்திருக்கும். ரசிகன் எல்லா படத்தையும் பார்க்கவும், வெற்றியடையச் செய்யவும் தயாராகவே இருக்கிறான். இங்கு தோற்றிருப்பது, அம்மாவின் கைபேசியோ, மாற்று சினிமாவோ அல்லவே அல்ல. அசுவாரசியமான திரைக்கதைதான் தோற்றிருக்கிறது. தங்கர்பச்சானிடம் ஒரு முக்கியக் கேள்வி. ‘இந்த படத்தில் நான் நடிக்கனும்னு எனக்கென்ன தலையெழுத்தா சார்? என் மூஞ்சிய ஸ்கிரீன்ல பாக்க எனக்கே புடிக்கல. என் நடிப்ப பாக்க எனக்கே அசிங்கமா இருக்கு’ இது நான் கூறியது அல்ல. பத்திரிக்கையாளர் சந்திப்பில் தங்கர்பச்சானே கூறியது. உங்களுக்கே அசிங்கமாகத் தெரியும் ஒன்றை எங்கள் மேல் திணிப்பது என்ன நியாயம் தங்கர்பச்சான்? அடுத்து, இந்த கதையை பெரிய நடிகர்களிடம் சொன்னதாகவும் , அவர்கள் யாரும் நடிக்க மறுத்ததால்தான் தானே நடிப்பதாகவும் கூட தங்கர்பச்சான் சொல்லியிருக்கிறார். அது உண்மையோ பொய்யோ, அது ஒரு புறம் இருக்கட்டும். முதலில், இது போன்ற ஒரு வலுவில்லாத கதையை ஒரு பெரிய நடிகரிடம் சொன்னால் அவர் எப்படி சம்மதிப்பார்? நிச்சயம் எந்த ஒரு பெரிய நடிகரும் இது போன்ற ஒரு தொய்வான கதையில், இப்படியொரு குழப்பமான பாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள். அவர்கள் நடிப்பார்கள் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? அடுத்து அவர்கள் நடிக்காததால் தான் நான் நடித்தேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏன், அவர்கள் மறுத்தால் நீங்கள் தான் நடிக்க வேண்டுமா? வேறு இடைநிலை நடிகர்களே இல்லையா? அவர்கள் நிச்சயமாக நடித்திருப்பார்களே? எத்தனை அற்புதமான குணச்சித்திர நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை நடிக்க வைத்திருக்கலாமே? அப்படியே அவர்கள் வரவில்லையென்றாலும், ஒரு புதுமுகத்தை நடிக்க வைத்திருக்கலாமே? பல அனுபவ நடிகர்களை தூக்கி சாப்பிடும் புதுமுக நடிகர்கள் வந்தவண்ணம் உள்ளார்களே? இது அத்தனையையும் விட்டு விட்டு நீங்கள் நடித்ததன் காரணம் என்ன? நிச்சயம் கதைக்கு தேவை என்று பொய் சொல்லாதீர்கள். எனக்கு ஆர்வம், நான் நடித்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். உங்கள் நடிப்பு உங்களுக்கே பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்னது உண்மையாக இருந்திருந்தால் நிச்சயம் நீங்கள் நடித்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் எந்தவொரு நல்ல கலைஞனும், கதாப்பாத்திரத்திற்கு முழு உயிர்  வரும் வரை திருப்தியடைய மாட்டான். எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டான். நீங்கள் ஏன் செய்தீர்கள் ?

இறுதியாக ஒரு வேண்டுகோள். உங்களால் மீண்டும் ஒரு அழகி போன்ற படத்தை எடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. இது போன்ற படம்தான் எடுப்பீர்கள் என்றாலும் பரவாயில்லை. ஆனால், தயவுசெய்து, அதனை மாற்று சினிமா, நல்ல சினிமா, சமூகத்திற்கான சினிமா என்று மட்டும் முன்னிறுத்தாதீர்கள். அது மாற்று சினிமாவிற்கும், அதை நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகனுக்கும் நீங்கள் செய்யும் துரோகம். அம்மாவின் கைபேசி படத்திலேயே அதை செய்துவிட்டீர்கள். மாற்று சினிமாக்களை மாசுபடுத்துவது, துப்பாக்கி போன்ற வெகுசன மசாலா சினிமாக்கள் அல்ல, மாற்று சினிமா என்ற போர்வையில் வரும் அம்மாவின் கைபேசி போன்ற அரைகுறை படங்கள் தான். இனியேனும் மாற்று சினிமாவை விட்டு விடுங்கள்.  அது பிழைத்துப் போகட்டும்.

விமர்சக நண்பர்கள் சிலர், துப்பாக்கி போன்ற மசாலா படங்கள் தூக்கி நிறுத்தப்படக் கூடாது என்பதற்காகவாவது அம்மாவின் கைபேசி போன்ற படங்கள் ஓட வேண்டும் என்று அதனை ஆதரித்து எழுதியிருந்தார்கள். தயவுசெய்து அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள். ஏனென்றால் இன்று  துப்பாக்கி ஒரு மசாலா படமாகத் தான் முன்னிறுத்தப்பட்டது. ஓடுகிறது. இது ஓடுவதால் நாளை இதுபோன்ற பத்து மசாலா படங்கள் வரும் அவ்வளவுதான். ஆனால் அம்மாவின் கைபேசி மாற்று சினிமாவாக முன்னிறுத்தப்பட்டது. இதனை தூக்கிப்பிடித்து ரசிகனிடம் நீங்கள் கொடுத்து அவன் அதை நிராகரிக்கும் போது, நாளை நல்ல மாற்று சினிமாக்கள் ஒன்று கூட வராது. ஒன்றை கூட ரசிகன் ஆதரிக்க மாட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நல்ல சினிமாவை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு தப்பான படத்தை ஆதரித்து விடாதீர்கள். 


இடைவேளையை தமிழில் போட்டு, எல்லா கதாப்பாத்திரத்தையும் அழ வைத்து, கூழ் குடித்து, சாரை ஐயா என்றழைத்து, கிராமத்திற்கு சென்று எடுத்தால் மட்டும் அது தமிழ்ச் சமூகத்துக்கான நல்ல சினிமா என்று ஆகிவிடாது என்பதில் நாமும் சற்று தெளிவாவோம். ‘படம் முடிந்தவுடன் இரண்டு நிமிடங்கள் லைட்டை போட வேண்டாம் என்று எல்லா தியேட்டர்களுக்கும் நான் லெட்டர் எழுதப் போகிறேன்’ என்று தங்கர்பச்சான் சொல்லியிருந்தார். அப்படி செய்திருந்தால் மீண்டும் லைட்டை போடும் போது, எல்லாரும் எழுந்து ஓடியிருப்பார்கள், இல்லை தூங்கியிருப்பார்கள். - கு. ஜெயச்சந்திர ஹாஷ்மி