Monday, February 4, 2013

கடல் - மூழ்கியது யார் ???நம்மிடையே உள்ள ஒரு மிகப்பெரிய நோய், Pre Determination தான். ஒரு விஷயத்தை, குறிப்பாக ஒரு படத்தை, அதை உணரும் முன்னரே, அதைப் பார்க்கும் முன்னரே அது குறித்த ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொண்டு பார்ப்பது. அதை விடக் கொடுமை, அந்த விஷயத்தை மட்டும் பார்க்காமல், அதை உருவாக்கியவர் யார், அவர் எவ்வளவு பெரிய ஆள், எவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறார், எவ்வளவு திறமையானவர் என்பதையெல்லாமல் மனதில் கொண்டு, அந்த படத்தை தாண்டி, படைப்பாளியை பற்றிய பிம்பத்தை மனதில் ஏற்றிக்கொண்டு படத்தை பார்ப்பது. ஒரு மிகப்பெரிய இயக்குனரின் சுமாரான படம் வானளாவ போற்றப்படுவதும், ஒரு அறிமுக இயக்குனரின் மிகச்சிறந்த படம் கண்டுகொள்ளாமல் பெட்டிக்குள் போவதும் இதனால்தான். இங்கே படம் என்பது படமாக மட்டும் பார்க்கப்படாமல், இயக்குநரின் பிம்பத்துடன் சேர்த்தே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பாலுமகேந்திராவின் சந்தியா ராகம் படத்திரையிடலின்போதே நான் கேட்டிருக்கிறேன். அந்த வகையில் இப்போது வந்திருக்கிறது மணி சார்இன் கடல்’.


படம் எப்படியிருக்கு என்றால், கேமிரா சூப்பரா இருக்கு, பாட்டுலாம் சான்ஸே இல்லை என்று விமர்சிக்கும் ரசிகர்கள் நிரம்பியது நம்முலகம். அந்த அழகியல் மோகத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு மணிரத்னம் படைத்த ஒரு அரைகுறைதான் ராவணன். அதையும் தாண்ட வேண்டும் என்ற வேட்கையுடன், இலக்கிய ஆசையும் சேர்ந்து, மணிரத்னம் மூழ்கியிருக்கும் படம்தான் கடல்தான். இலக்கியமும், திரைப்படமும் இணைவது ஆரோக்கியமானதுதான். ஆனால் இரண்டிற்குமான மொழிகள் வெவ்வேறு என்று உணர்ந்துகொண்டுதான் இணைய வேண்டும். இல்லையென்றால் எண்ணெய்யும தண்ணீரும் இணைந்ததுபோலத்தான் இருக்கும். இயக்குனர்கள் தற்காலத்தில் தங்களை விமர்சனங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, ஒரு Literary Gesture ஐ அடைய இலக்கியவாதிகளை பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகமே எனக்கு வந்துவிட்டது. படத்தின் கதை உட்பட புலப்படாத சில வஸ்துக்களை குறித்து பேசுவதில் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. சொல்லப்போனால் ஒரு படத்திற்கு கதையை விட, திரைக்கதையே நங்கூரம். ஆனால் அதில்லாமல்தான் நடுக்கடலில் மூழ்கியிருக்கிறார் மணி சார்.


மிக அழகான கேமிரா என்று ஒரு படம் பாராட்டப்படுகிறதென்றால், அதில் கேமிரா படத்தை விட்டு வெளியே துருத்திக்கொண்டு தெரிகிறது என்று அர்த்தம். காட்சிகளைவிட கேமிராதான் அதிகம் பார்வையாளனுக்கு பதிந்திருக்கிறது என்று அர்த்தம். இது யாருடைய தோல்வி என்று நீங்களே சிந்தித்து பாருங்கள். அடுத்து வசனங்கள். ஒரு படத்தின் வசனம் என்பது, அந்த பாத்திரங்கள் பேசுவதாக இருக்க வேண்டும். வசனகர்த்தாவின் அதிமேதாவித்தனத்தை காட்டுவதற்காக வசனங்கள் இடம்பெற்றால், அது கதாப்பாத்திரத்தின் தன்மையையே சிதைத்துவிடும். அந்த வசனங்கள் அழகாக இருக்கலாம், ஆழமாகவும் கூட இருக்கலாம். ஆனால் அது கதாப்பாத்திரத்தில் இருந்து விலகியிருக்கும் பட்சத்தில், பாத்திரம், வசனம் இரண்டுமே பொருந்தாப் பொருளாகிவிடும். ஜெயமோகனும் மணிரத்னமும் திரைக்கதை என்றும் ஜெயமோகன் கதை வசனம் என்றும் வருகிறது. ஜெயமோகனிடம் ஒரே ஒரு கேள்வி, இந்த கதையே ஒரு நாவலாகவோ, கதையாகவோ சொல்லப்பட்டிருந்தால், இறுதிக்காட்சியில் அப்படி ஒரு க்ளிஷே சண்டையும், அத்தனை ஆக்ரோஷமான கடலில் நடுவில் மூன்று பேர் மாறி மாறி பேசுவதும் இடம்பெற்றிருக்குமா? நிச்சயம் இருக்காது இல்லையா? அப்ப படம் பாக்குறவன் மட்டும் என்ன மடையனா? ஒருவேளை இதுதான் இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் உள்ள வடிவ வேறுபாடு என்று நீங்கள் சொன்னால் ஒரு மிகப்பெரும் கும்பிடு. சினிமாவை விட்டுவிடுங்கள்.


மணிரத்னத்திற்கு என்னாச்சு???’. இப்படி ஒரு கதையை, திரைக்கதையை எழுத்தாகப் பார்த்தபின்னும் அதை படமாக்க கிளம்புகிறார் என்றால்,அது அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலா,இல்லை நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலா என்று தெரியவில்லை. இரண்டும் வீணாகியிருக்கிறது. அத்தனை நல்ல பாடல்களை கெடுத்த பாவத்தை வேறு கட்டிக்கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்து மணிரத்னம் கதை சொல்லி, இந்த இடத்துல பாட்டு வருது என்று சொல்லும்போதே, ‘இங்க எதுக்கு சார் தேவையில்லாம பாட்டு?’ என்று உதவி இயக்குநர்களோ, ஏன் ரகுமானே கூட கேட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி கேட்க முடியுமா? அவர்தான் மணி சார்ஆயிற்றே. அப்படி சம்பந்தமில்லா இடங்களில், பின்னணியில் மெலிதாக வரப்போகும் பாடல்களை அவ்வளவு அழகாக போட்டுக்கொடுத்தது ரகுமானின் தப்புதான். இசையோடு படத்தை பார்க்கவே இப்படி இருக்கிறதே, இதில் இசை இல்லாத வெர்ஷனை பார்த்த ரகுமான் எவ்ளோ ஃபீல் பண்ணிருப்பாரு???

முக்கியமான விஷயம். பெண் உடல். அதுவும் நாயகிக்கு 15 வயதுதான் என்கிறார்கள். படத்திலும் அதுபோலத்தான் வருகிறார். ஆனால் சில காட்சிகளில், அத்தனை அபத்தமான, கீழ்த்தரமான சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட ஆடைகள். அதுவும் அந்த கதாப்பாத்திரம் அணியும் கிறித்துவ உடையாகவே அந்த கவர்ச்சி உடைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது எத்தனை பெரிய அபத்தம்? Perverted Thought. நான் பார்த்து எந்த கிறித்துவ பெண்களும் இதுபோன்ற உடைகளை ஒருநாளும் அணிந்ததில்லை. மணிரத்னத்தின் காமக்கதைகளில் வேண்டுமானால் அப்படி அணிந்து அவர்கள் குதித்தபடி வரலாம். இப்படி காட்டி வியாபாரம் செய்வதற்கு பெயர் சினிமா அல்ல....வேறு....

நாயகன் இந்த கதைக்கு எவ்வாறு பொருந்துகிறார்? கார்த்திக் மகனென்றால் பொருந்தி விடுவாரா? அதுவும் சிறுவயதில் கருப்பாக இருந்துவிட்டு, பதின் வயதில் சிவப்பாக மாறிய ஒரு மனிதனைக் கூட நான் பார்த்ததில்லை. இத்தனை பெரிய மரியாதை பீடத்தில் இருக்கும் மணிரத்னம், ஒரு நிஜ மீனவனையே நடிக்க வைக்க முடியாதா? ஏன், நிஜ தொழிலாளர்கள் பேக்ரவுண்ட் ஆர்ட்டிஸ்ட்களாகத்தான் வர வேண்டுமா? அதே கேரக்டரில் டூயட் பாட, சில்வர் ஸ்பூன் வார்ப்புகள் தான் வர வேண்டுமா? அழகாக இருக்கும் இடங்கள், படத்திற்கு ஒருபோதும் உதவாது. இயல்புத்தன்மையோடு இருக்கும் இடங்கள்தான், அவை அழுக்காக இருந்தாலும் கூட, படத்தை தாங்கிப்பிடிக்கும். இதை இவர்கள் என்றுதான் புரிந்துகொள்வார்களோ???

இறுதிக்காட்சிக்கு முன், நாயகி அர்ஜூனைப் பார்த்து, ‘ப்பாஎன்பார். அப்போது மொத்த தியேட்டரே ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஎன்றது. அந்த நொடி உணர்த்தியது, பெரிய பெரிய கொம்பர்களின் வெற்றுப் படைப்புகளின் வீழ்ச்சியையும், திறமையோடு வரும் புதுரத்தங்களின் வெற்றியையும். தமிழ் சினிமாவும் மாறிக்கொண்டு வருகிறது மணி சார்.


கடல் குறித்த என் முந்தைய பதிவில், ‘இது மணி சார் படம்,மணி சார் படம். இன்னொரு வாட்டி பாருங்கஎன்றும், தனி சாட்டிலும் பலர் கூறியிருந்தனர். இதைப் படிக்கும் நண்பர்களும், நான் முதலில் கூறியதைப் போல, மணிரத்னம் என்னும் பிம்பத்தை மனதில் கொண்டு படத்தை பார்த்துவிட்டு, மணி சார் படம்னா நல்லாத்தான் இருக்கும் என்ற முன்முடிவோடு படத்தை கண்டுவிட்டு, நீங்க என்ன விமர்சனம் எழுதியிருக்கீங்க, போய் இன்னொருவாட்டி படத்தை பாருங்க எனலாம். அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு கேள்விதான் என்னிடம் உண்டு.

இதே படத்தை மணி சார்இல்லாமல், ஒரு புது இயக்குநர் எடுத்திருந்தால், நீங்கள் பாராட்டுவீர்களா ?அந்த இயக்குனர் தமிழ் சினிமாவில் அடுத்த படத்தை அவ்வளவு எளிதில் எடுத்துவிட முடியுமா ??’


- கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

2 comments: