Thursday, February 7, 2013

விஸ்வரூபம்


அற்புதம். மகா அற்புதம். பிரில்லியண்ட். ஒரு இந்தியனாக பெருமைப்பட வேண்டும். கமல் தமிழ் சினிமாவை எங்கேயோ கொண்டுசென்றிருக்கிறார். A Must Watch. அலாதியான அனுபவம். தமிழில் ஒரு ஆங்கிலப்படம். பார்த்தே ஆகக்கூடிய படம். உலக சினிமா. இப்படி ஒரு படத்தை பார்த்ததே இல்லை. சினிமாவின் உச்சகட்டம். உலக அன்பிற்கான படம். முஸ்லிம்களை பெருமைப்படுத்தும் படம்.....இவையெல்லாம் படம் தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டவுடன், வேற்று மாநிலங்களுக்குச் சென்று படத்தை பார்த்த, வெளிநாட்டில் பார்த்த, முதல் காட்சி பார்த்த பலப்பலரின் விஸ்வரூபப் பார்வைகள். சத்தியமாக இது எதற்குமே தகுதியற்றது, கமலின் விஸ்வரூபம். 

முதல்நாளே விமர்சனம் எழுதவேண்டாம். அது சினிமா என்னும் மிகப்பெரிய வியாபாரத்தை பாதிக்கக்கூடியது என்ற கருத்து அநேக நண்பர்களுடையது. ஒரு வகையில் இது உண்மையும் கூட. Word of Mouth என்பது இக்காலத்தில் Word on Net தான். வைரஸ் போலப் பரவி ஒரு படத்தின் வீச்சை அடித்துசாய்க்க வல்லது. ஆனால், நல்ல படங்களை மிக மிக வேகமாக பரப்பிச்செல்வதும் இதுபோன்ற இணைய விமர்சனங்கள்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அது வேறு தளம். இருக்கட்டும். விஸ்வரூபத்திற்கு வருவோம். கிளம்(ப்)பிய பரபரப்புகளின் மூலம் படம் வெளிவரும் முன்பே ஹிட்டாகி விட்டது. எனவே இதைப்பற்றி என்ன எழுதினாலும் வசூலுக்கு எந்த பங்கமும் வந்து விடாது.
சுருங்கச் சொல்வதானால் கமலஹாசனின் அமெரிக்கத் தொழுகைதான் விஸ்வரூபம். ஆம். இது ஒரு ஆங்கிலப்படம் என்று படத்தை பார்த்த அனைவரும் சொல்கின்றனர். என்னைக்கேட்டால் இது அதற்கும் மேல். ஒரு அமெரிக்கர் பார்த்தால் கூட, நம்ம இயக்குனர்களை விட அமெரிக்காவிற்கு அதிகமாக சொம்பு தூக்குவது யார்டா என்று கமலை வியந்து பார்ப்பார்கள். முதலிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன். படத்தை படமாக மட்டும் பாருங்கள். அதில் அரசியல் பார்க்காதீர்கள் என்று நீங்கள் சொன்னால், முதலில் அந்தப்படம் அரசியல் பேசியிருக்கக்கூடாது. அதுவும் மிகத்தவறான அரசியலை பேசியிருக்கவே கூடாது. உங்கள் ப்ரொஃபைல் பிக்சர்கள் எப்படி கமலின் கலைக்காகவும் கருத்துரிமைக்காகவும் ஆதரவு கோரியதோ, அதே கருத்துரிமை விமர்சிப்பவர்களுக்கும் உண்டு என்பதை மிகத் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். 

ஆங்கிலப்படங்களுக்கே உரித்தான சில நடை உண்டு. காட்சியமைப்பில், திரைக்கதையில், வசனத்தில், ஷாட்களில் கூட. அந்த பாதையில் நடைபோட்டிருக்கிறது விஸ்வரூபம். ஆனால் ஹாலிவுட் நம்மை திரும்பிப் பார்க்கவேண்டுமென்றால், ஹாலிவுட்டின் இம்பாக்ட்டில் படம் எடுக்கக்கூடாது. மேக்கிங்கில் இதைவிட பில்லா (1) எனக்கு சுவாரசியமாகப் பட்டது. பிரம்மிப்பூட்டும் காட்சியமைப்புகள், காட்சிகளில் காணப்படும் நேர்த்தி, ஆச்சர்யப்படவைக்கும் ஒலியமைப்பு என பல ஆரோக்கியமான விஷயங்கள் விஸ்வரூபத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. ஆனால் தொழில்நுட்பம் மட்டுமே சினிமா அல்லவே. திரைக்கதையிலும் சில அழகான கோர்வைகள் தென்படும். ஆனால் திரைக்கதை என்பதே அடுத்தடுத்த காட்சிகளில் சுவாரசியமாக கதையை நகர்த்திச் செல்வதுதானே. சுவாரசியம் ஏற்படுத்தாத எந்தவொரு திரைக்கதையும் விழலுக்கிழைத்த நீராகத்தான் போய் முடியும்.
1996 இல் பாட்ஷா என்றொரு படம் வந்தது. அந்த பாதையில் அதற்கு முன்பே வேறு சில படங்களும் வந்திருந்தாலும், பாட்ஷா என்பதுதான் இங்கே ஒரு பெஞ்ச்மார்க். மிக அமைதியாக வாழ்ந்துவரும் நாயகன், யாரும் எதிர்பாரா வண்ணம் விஸ்வரூபமெடுப்பது ரசிகனைக் கதற வைக்கும். பாட்ஷாவிற்கு பின் பலப்பல படங்கள் இந்த முடிச்சை பிடித்துக்கொண்டு வந்திருக்கின்றன. அதே பாதையில்தான் விஸ்வரூபமும் பயணிக்கிறது. பல படங்களை ரெஃபர் செய்தும் எழுதும்  விமர்சகர்கள் இதை மட்டும் கண்டும்காணாமல் விட்டுவிட்ட ரகசியம் என்னவென்பது தெரியவில்லை. அந்த காட்சிதான் கமல் விஸ்வரூபம் எடுக்கும் காட்சி என்று வேறு சொல்கிறார்கள். சரி. பாட்ஷா படத்தில் ரஜினி அப்படி வாழ்வதற்கான காரணம் மிகப்பலமாக சொல்லப்பட்டிருக்கும். ஒரு சாதாரண வாழ்க்கை வாழ விரும்பி ஆட்டோக்காரராய் வாழ்வதென்பது அந்த கதாப்பாத்திரத்தின் தன்மைக்கும் உதவியிருக்கும். ஆனால், இங்கே முதல் 30 நிமிடங்கள் கமல் தோன்றும் அந்த பெண்மை கலந்த கதக் டான்சர் பாத்திரம் கதையில், திரைக்கதையில் எந்த இடத்தில் உதவுகிறது. திரைக்கதையில் தேவையில்லாமல் புகுத்தப்படும் எல்லாமே வீண்தான். அதில் கமலின் அற்புதமான நடிப்பு கலந்திருந்தாலும் கூட, அந்த விஸ்வரூபக்காட்சியில் கமல் அனைவரையும் அடித்து சாய்ப்பதற்கு ஏற்ப, ஒரு கான்ட்ராஸ்ட்டான இமேஜ் உள்ள ஒரு கேரக்டர் தேவைப்படுகிறது. அதற்காக மட்டுமே அந்த கதக் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி திரைக்கதையில் அதற்கான எந்தவித தேவையுமே இல்லையே. இது  நிச்சயம் நல்ல திரைக்கதை உத்தி அல்ல.
கமல் படத்தை ஆரம்பிக்கும்போதே இரண்டு பாகங்கள் எடுக்கவேண்டும் என்று முடிவுசெய்துதான் படத்தை ஆரம்பித்தாரா இல்லை, பாதியில் அந்த முடிவிற்கு வந்தாரா என்று தெரியவில்லை. முடிவில்லாத பல கேள்விகள் படம் முடிந்ததும் தொக்கி நிற்கின்றன. கமலை ஓமர் எப்படி புரிந்துகொள்கிறார், அங்கிருந்து கமல் எப்படி வெளியேறுகிறார் போன்ற பலப்பல கேள்விகள் நிற்கின்றன. அதெல்லாம் இரண்டாம் பார்ட்டில் தான் வருகிறது என்று அதையும் இறுதியில் காட்டுகிறார்கள். ஆனால் இரண்டு பார்ட்டையும் பார்த்தால்தான் ஒரு ரசிகனுக்கு ஒரு காட்சியின் முழுமை புரியுமென்றால் அது நியாயமா? படம் கிளப்பி விட்டிருந்த பரபரப்பில் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் படம் புத்திசாலித்தனமான படம் என்று சொல்ல கடமையே பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு கதை வருமில்லையா? தூரத்தில் ஒன்றும் இல்லாமல், அங்கே ஒரு மலை இருக்கிறது என்று கூறி, புத்திசாலிகளுக்கு மட்டும்தான் மலை தெரியும் என்று சொல்லிவிடுவர். உடனே அனைவரும் ‘ஆமா ஆமா...மலை தெரிகிறது. எவ்வளவு அழகாக இருக்கிறது....மரம்லாம் எவ்வளவு பெரிசா வளர்ந்திருக்கிறது’ என்று ஆளாளுக்கு பில்டப் செய்துகொண்டே இருப்பர். அதுபோல் விஸ்வரூபம் பிரில்லியண்ட் படம் என்று முடிவு செய்துவிட்டு படம் பார்த்தால் நிச்சயம் அப்படித்தான் இருக்கும். நான் புத்திசாலி என்று காட்டிக்கொள்வதற்கு, விஸ்வரூபம்தான் அளவுகோல் என்றால், நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். 


இதுபோன்ற ஒரு க்ளைமேக்சை வைக்க கமலுக்கு எப்படித்தான் மனது வந்ததென்று தெரியவில்லை. பல படங்களில் ஆரம்பக்காட்சிகளாக வந்த ஒரு காட்சியை வைத்துவிட்டு, உடனே படத்தையும் முடித்துவிட்டு, மோசமாக செய்யப்பட்ட விசுவல் எஃபெக்டில் ப்ளு மேட்டில் நடந்துவந்து, படம் தொடரும் என்று வேறு சொல்லிச்செல்கிறார். அதையும் தாங்க தமிழ் ரசிகன் காத்துதான் கிடப்பான். 


ஒருவர் உங்களை பலமாக அறைகிறார். நீங்களும் கோபத்தில் திருப்பி அறைகிறீர்கள். உங்கள் பாதையும் சரியானது அல்ல. ஆனால் அவரும் நிச்சயம் நல்லவரல்ல. ஆனால், அவர் அறைந்ததில் கோபப்பட்டு  நீங்கள் அறைகிறீர்கள் இல்லையா, அந்த நொடியில் இருந்து கேமிராவை ஆன் செய்துவிட்டு, நீங்கள் அடிப்பதுபோல் காட்டி, அதை அவர் தடுப்பதுபோல் காட்டி, போகிற போக்கில் பர்ஸ்ட்டு அவர்தான் அடித்தார் என்று அடித்தவரைப் பற்றியும் ஒருவார்த்தை சொல்லிவிட்டுப் போனால் எப்படியிருக்கும். சினிமா என்பது காட்சி ஊடகம் என்பதை ஆயிரம் முறை சொல்லிவிட்டீர்கள். அப்படியானால் உங்கள் காட்சியை பார்க்கும் பார்வையாளர் யாரை வில்லனாக எண்ணுவார்? முதலில் அடித்தவரையா, அல்லது முதலில் அடித்ததாக கேமிரா காட்டியவரையா? முதலில் கேமிரா யார் அடிப்பதை காட்டுகிறதோ அவரைத்தானே வில்லனாக எண்ணுவார்கள் பார்வையாளர்கள்? போகிற போக்கில் நீங்கள் சொல்லிப்போகும் ஒருவரி வசனத்தைவிட, நிமிடத்துக்கு நிமிடம் காட்டப்படும் காட்சிகள்தானே மனதில் நிற்கும்? அதுதானே சினிமாவின் தாக்கம். அதைத்தான் அட்சரசுத்தமாக செய்திருக்கிறது விஸ்வரூபம். இதற்கு பேர் என்ன? 

அமெரிக்காவின் அத்தனை அயோக்கியத்தனங்களின் போதும், கேமிராவை கருப்புத்துணி போட்டு மூடி வைத்துவிட்டு, அதற்கு படத்தில் காட்டப்படும் ஜிகாதிக்கள் கோபப்பட்டு மூக்கு சிவக்கும்போதே, ‘அதோ அதோ மூக்கு சிவக்குது பார். கேமிராவை ஆன் பண்ணு’ என்று  தொழில் ‘தர்மத்துடன்’ படமெடுத்திருக்கிறார் கமல். ஒரு விஷயத்தை படத்தில் காட்டினால் அதன் முழு அரசியலையும் காட்ட வேண்டும். இல்லையென்றால் காட்டவே கூடாது. குறிப்பாக ஒரு சாராரைப் பற்றி மட்டும் காட்டவே கூடாது. இத்தனைக்கு கமல் அத்தனை அரசியல் அறியாமையில் இருப்பவரும் அல்ல. தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்பவே முடியாதுதான். இது எப்படி முஸ்லிம்களை அவமதிக்காமல் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. முக்கியமாக இதைச் சொல்ல வேண்டியது முஸ்லிம்கள்தானே. அவர்கள் மதம் சார்ந்து, அதை உட்படுத்தி ஒரு தீவிரவாத செயல் காட்டப்படுகின்றது என்றால் அதன் முழு தாக்கத்தையும் அவர்களால் மட்டும்தான் உணர முடியும். நமக்கு அந்த காட்சி தரும் பொதுப்புத்தி மட்டும்தான் வந்துசேரும். படத்தை பார்த்து அனைவரும் இது முஸ்லிம்களை அவமதிக்காது என்று சொல்வது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. சில முஸ்லிம் நண்பர்களுமே கூட அதைச் சொல்லியிருந்தனர். நுண்ணரசியலை கமர்ஷியலாக்குவதில் வல்லவர் கமல். அதன் மூலம் பார்வையாளனை தன்வயப்படுத்தி, அவன் தலையாட்டிக்கொண்ருக்கும்போதே, தான் கூற நினைத்ததை கூறிவிடுவது உலகில் எல்லா மூலைகளில் இருக்கும், முதலாளித்துவ ஆதரவு நிபுணர்களின் தந்திரம். அதன் தமிழக கலைப்பிரதிநியாகத்தான் கமல் செயல்பட்டிருக்கிறார். அந்த விஷயத்தில் அவர் உலக நாயகன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 


படத்தில் வரும் முஸ்லிம்கள் அனைவரும், எல்லா கொலைகளையும், பயங்கரவாதத்தையும் செய்வதற்கு முன் அல்லாவின் பெயரை சொல்லிவிட்டுதான் ஆரம்பிக்கிறார்கள். அல்லாவிற்காகத்தான் இந்த சண்டை என்றும் கூறுகிறார்கள். குர்ஆன் படித்துக்கொண்டே கூட கொலை செய்கிறார்கள். ஒரு தீவிரவாத செயல்களுக்கு முன் தொழுதுகொண்டுதான் அதை செய்கிறார்கள். சரி சரி,  உண்மையில் தீவிரவாத செயல்களை செய்பவர்கள் அப்படியெல்லாம் செய்யத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால், அருமை, கமல் மகா வெற்றி பெற்றுவிட்டார். சரியான காரண காரியம் சொல்லப்படாமல், முஸ்லிம்களின் கோபத்தையும், அதன் வீச்சையும், அதனால் ஏற்படும் இழப்புகளையும், கொலை, அழித்தல்கள், வெடிகுண்டுவெடிப்பு இதை மட்டுமே காட்டும்போது, கமர்ஷியல் படங்களின் ரசிகனுக்கு, அது முஸ்லிம் பயங்கரவாதமாகத் தான் போய் சேருமே தவிர, ஜிகாதிகளின் எதிர்வினையாக போய் சேரவே சேராது. இந்த வரிகளில் இருக்கும் அரசியல் மிகப்பெரியது. அமெரிக்க தந்திரத்தின் மிகப்பெரிய வெற்றிதான் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்னும் வார்த்தையே. சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட ஒருவர் செய்த ஒரு தவறை, அந்த சாதியை குறிப்பிட்டு ‘குறிப்பிட்ட சாதிய பயங்கரவாதம்’ என்று சொல்வது எப்படியிருக்குமோ அதுபோலத்தான் இதுவும். ஊடகங்கள் போல் நானும் சுற்றிவளைக்க விரும்பவில்லை. நேரடியாக வருகிறேன். ஒரு தலித் மனிதர், ஒரு so called உயர்சாதி மனிதரை அடித்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு காரணம், அந்த உயர்சாதி மனிதர் அந்த தலித் மீது ஏவிய அடக்குமுறை. சரியா. அதற்கு அந்த தலித்தின் கோபம் மிகச்சரிதான். ஆனால் அதை தவறான வழியில் வெளிப்படுத்திவிடுகிறார். உதாரணத்திற்கு, அந்த உயர்சாதி மனிதரின் வீட்டில் உள்ள பெண்களை இழிவாக பேசி விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். உடனே, இந்த மேல்சாதி கும்பல்களும், ஊடகங்களும் எப்படி கைகோர்த்துக்கொண்டு, ‘தலித்துகளின் பெண்கள் மீதான கொடுமை’ என்று அதை பிரகடனப்படுத்துமோ அதைப்போன்றதுதான் இது. 

இங்கே தவறு செய்தது ஒரு மனிதர். அந்த சாதியல்ல. ஆனால் முத்திரை குத்தப்படுவது ஒட்டுமொத்த சாதிக்கு. அதே தான் அமெரிக்காவினால் இஸலாமியர்களுக்கெதிராக செய்யப்படுகிறது. இதன் அடித்தளமாக இருக்கும் அமெரிக்க பயங்கரவாதம்  வசதியாக மறைக்கப்பட்டு விடுகிறது. இதற்கு உலகெங்கும் அமெரிக்க அடிவருடிகள் தங்கள் தங்கள் துறைகளில் அடித்தளம் இட்டு தந்தபடி இருக்கின்றனர். அமெரிக்க சினிமாக்கள், மிக முக்கியமாக, அமெரிக்க வணிக சினிமாக்கள் இதைத்தான் அழகாக செய்தபடி இருக்கின்றன. அந்த விதத்தில், இது தமிழில் ஒரு ஹாலிவுட் படம் என்று நான் ஒத்துக்கொள்கிறேன். 


இதில் அமெரிக்க படைகள் குழந்தைகளையும் பெண்களையும் தொடாது என்று ஒரு ஜிகாதி மூலமே சொல்லப்படும் பொய் பிரச்சாரம் வேறு. வரலாறுகள் சிரிக்கும் இதைக்கேட்டு. படம் முழுவதும் முஸ்லிம்கள் (படத்தின் வெளிப்பாடு இதுதான்) தவறு செய்துகொண்டே இருக்கின்றனர். அதை அமெரிக்க போலீசுடன் கமல் சேர்ந்து கண்டுபிடிக்கிறார். ஆக இப்போது யார் ஹீரோ? கமலும் அமெரிக்காவும் இல்லையா? யார் வில்லன்? சிந்தியுங்கள்? இதில் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு அடிக்கடி  உள்ளாகும் பாவமான ஊராகவும் அமெரிக்க காட்டப்பட்டு இருக்கிறது. க்ளைமேக்சில் கமல் அமெரிக்காவை காப்பாற்றுவதும் முஸ்லிம்கள் வைத்திருக்கும் வெடிகுண்டிலிருந்துதான். எப்படி  பார்ப்பனர்கள் பாவமான, அமைதியான, வன்முறைகளுக்கு பலியாகும் அப்பாவிகளாக இங்கே நுணுக்கமாக சித்தரிக்கப்படுகிறார்களோ, அதே போன்ற ஒரு அயோக்கியத்தனம்தான் இது. இதே அமெரிக்கா, அந்த முஸ்லிம்களின் நாட்டில், சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக எத்தனை வெடிகுண்டுகள் வைத்திருக்கின்றது என்பதை சொல்லும் தைரியம் கமலுக்கு இருக்குமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. ஜிகாதிகளின் தாக்குதல் மட்டும்தானே ஆரம்பத்தில் இருந்து, இறுதிவரை காட்டப்படுகிறது. கூடவே அமெரிக்காவின் கவசமும், கமலின் தடுக்கும் உத்திகளும். ஆனால் ஒரு இடத்திலாவது ஜிகாதிகளின் கோபத்திற்கான காரணம் அலசப்பட்டிருக்க வேண்டுமா வேண்டாமா? இரண்டையும் சொல்லிவிட்டு பார்வையாளனை முடிவுசெய்யச்சொல், யார் நல்லவன் யார் கெட்டவன் என்று. ஒன்றை கமுக்கமாக மறைத்துவைத்துக்கொண்டு ஒருசார்பான ஒரு காட்சியை காட்டிவிட்டு, ரசிகனுக்கு ஒரு முடிவை மட்டும் தருவதற்கு பெயர் நல்ல படமா? I support kamal's right to Art என்று  கூப்பாடு போட்ட நண்பர்கள், அந்த ஆர்ட் செய்திருக்கும் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்களா?

இந்த அனைத்து முஸ்லிம் விரோதங்களுக்கும் பரிகாரமாக, கமலும் படத்தில் முஸ்லிம்தானே, தொழுகையெல்லாம் கூட செய்கிறாரா என்பதை மட்டும் வைத்து வாதாடினீர்கள் என்றால், மறுபடியும் சொல்கிறேன், கமல் அங்கே வெற்றி பெற்றுவிட்டார். முஸ்லிமாக நடித்து, குண்டுவெடிப்புகளின்போது ஆங்காங்கே கண்ணீர் விட்டால் மட்டுமே முஸ்லிம் விரோதங்களை மறைத்துவிட முடியும் என்று கமல் நினைத்தால், உங்களையும் நினைக்க வைத்தால், ஒரு படத்தில் அமெரிக்க பயங்கரவாதங்களை தோலுரித்துக் காட்டிவிட்டு, அமெரிக்க வம்சாவெளியில் வந்த இந்தியராக ஒரு படத்தில் நடிக்க முடியுமா? முடியாது என்ன....அமெரிக்காக்காரன்  சான்ஸ் கொடுக்க மாட்டான்ல. சூப்பர்.


இதெல்லாம் சினிமாப்பா என்று சொல்பவர்களுக்கு ஒன்றே ஒன்று கேட்கிறேன். அமெரிக்கா முஸ்லிம்களின் நாடுகளில் நடத்திய கொடூரங்களை தட்டிக்கேட்கும்,  ஆப்கன் அரசோடு சேர்ந்து அமெரிக்க சதியை முறியடிக்கும் பாத்திரத்தில் நடிக்கும் ‘தில்’ கமலுக்கு இருக்கிறதா? உலக நாயகன் என்றால் உலகம் அத்தனைக்கும்தானே நாயகன். அமெரிக்காவிற்கு மட்டுமா?

சரி. அதை விடுவோம். கமல் இந்தியன் உளவுத்துறை அதிகாரிதானே. அவர் ஏன் ஆப்கன் சென்று அமெரிக்காவிற்கு எதிரான சதியை முறியடிக்க அத்தனை மெனக்கிடுகிறார். அவர்தான் உலக நாயகன் ஆச்சே. அதனாலா? படத்தில் அந்த ஆப்கன் குண்டு இந்தியாவிற்கும் வரும் என்ற வார்த்தை வருகிறதே அதனாலா? அது கமலுக்கு எப்படித்தெரியும்? இந்த செயலுக்கு உண்மையான காரணம் படத்தில் நடித்திருக்கும் கமலின் தேடலா அல்லது நிஜத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கமலின் தேடலா? உண்மையான காரணம் இந்தியாவிற்கும் குண்டு வந்துவிடும் என்ற முன்னெச்சரிக்கை அமெரிக்கா வரைக்கும் சென்றதா அல்லது, ஆஸ்கர், ஹாலிவுட் உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்காவில் இருப்பது காரணமா? எப்படி ஜேம்ஸ்பாண்ட் முதலாளிகள் வெறுக்கும் கம்யூனிஸ்ட் நாடுகளை எதிரியாக்கி, அங்கே போய் சண்டை போட்டு போராடி உலகைக் காப்பாற்றினாரோ, அதேபோல்தான் கமல் அமெரிக்கா எதிரியாக நினைக்கும் ‘இஸ்லாம் பயங்கரவாதத்திற்கு’ எதிராக ஆப்கனுக்கே சென்று அமெரிக்காவை காப்பாற்றியிருக்கிறார். அமெரிக்காவுக்காக இப்போதே உழைக்கத் துவங்கிவிட்டாரா கமல்? 


விஸ்வரூபம் முழுக்க அமெரிக்கா, ஆப்கன் முஸ்லிம்கள் என்று நடக்கும் கதைதானே? நம்மூர் முஸ்லிம்களுக்கு என்னப்பா வந்துச்சு என்று கேட்பவர்களுக்காகவே வரப்போகிறது விஸ்வரூபம் பார்ட் டூ. இந்தியாவிலாமே. ஆனால் இத்தனை பிரச்சினைகளுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஏதும் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் அந்த படமும் பாதிக்குமேல் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். எனக்கு எல்லா மனிதர்களும் ஒன்று என்று கூறும் உலக நாயகனுக்கு ஆப்கன் முஸ்லிம்மாக இருந்தால் என்ன, அமைந்தகரை முஸ்லிமாக இருந்தால் என்ன? நமக்கு அமெரிக்காதான முக்கியம். கமலின் இந்த அயராக உழைப்பிற்கு அங்கீகாரம் நிச்சயம் வரும். பாருங்கள். 

மனதில் பட்டதைச் சொல்கிறேன். திட்டமிட்டபடி ஜனவரி 25 ஆம் தேதி இந்தப் படம் வந்திருந்தால், நிச்சயம் ஒரு வாரத்தில் பெட்டிக்குள் சுருண்டிருக்கும். கமலும் போட்ட பணத்தை இழந்து வேறு வழியில்லாமல் அமெரிக்காவை போற்றிப் பாடத்தான் போயிருக்க வேண்டும். ஆனால் படத்தில் தங்களை மிக இழிவாக சித்தரிக்கும் கமலுக்கு, இஸ்லாமிய அமைப்புகள் தெரிந்தோ தெரியாமலோ, ‘தியாகி, உண்மைக் கலைஞன், உண்மைக்கு குரல் கொடுப்பவன், ஜனநாயகப் போராளி’ என பலப்பல பட்டங்களையும், கமல் நீண்ட நீண்ட நாட்களாக பார்க்காதிருந்த, அளப்பரியாத ரசிகர் கூட்டத்தையும், வசூலையும் வாரி அளித்திருக்கின்றனர். இதற்கும் சேர்த்துதான் கமல் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 


தொழில்நுட்பம், காட்சிப்படுத்தல் நேர்த்தி, கதை சொல்லும் உத்தி, காட்சியமைப்பு போன்ற அனைத்திலும் இப்படம் எப்படி ஹாலிவுட் பாணியை ஒத்திருக்கிறதோ, அதேபோல், இஸ்லாமிய எதிர்ப்பிலும், ஏகாதிபத்திய ஆதரவிலும் கூட, இப்படம் ஹாலிவுட் படங்களை ஒத்து, மிஞ்சியே இருக்கின்றது. 


இத்தனை இருந்தாலும் நான் முன்பே சொன்னதுபோல், இப்படம் வெளிவருவதற்கு முன்பே படம் வெற்றி பெற்றுவிட்டது. என் வீட்டில் முதல் நாள் முதல் காட்சி எப்படியாவது பார்த்துவிடுவது நான் மட்டுமே. அண்ணன் படங்களை முதல் வாரத்தில் பார்ப்பான். அப்பாவும் அம்மாவும் பார்ப்பது மிக மிக அரிது. ஆனால் விஸ்வரூபத்தை நான், அண்ணன், அப்பா அம்மா அனைவரும் வேறு வேறு தியேட்டர்களில், வேறுவேறு நேரங்களில் முதல் நாளே பார்த்துவிட்டோம். நான் அறிந்த பல வீடுகளிலும் இதுதான் நிலைமை. எப்போதும் மூடி வைத்து பில்டப் ஏற்றப்படும் உள்ளங்கையைத் திறந்து பார்க்க  நமக்கு ஆர்வம் இருந்துகொண்டேதானே இருக்கும். திறந்தபின்தான் உள்ளே ஒன்றுமில்லை என்பது தெரியும். ஆனால் எல்லாரும் நானும் திறந்துபார்க்க வேண்டும் என்றுதான் விரும்புவோம். அதுதான் விஸ்வரூபம். 

மொத்தத்தில் அமெரிக்கர்களை ரட்சகர்களாக காட்டி, இஸ்லாமியர்களை  வில்லன்களாகக் காட்டும் கமலின் ‘அமெரிக்கத் தொழுகையாக’ இந்த விஸ்வரூபம் தான் நினைத்ததை கச்சிதமாக சாதித்திருக்கிறது. வசூல்ரீதியாகவும் கமலுக்கு லாபம்தான், அமெரிக்க சல்யூட்டிலும் லாபம்தான்.  வணிக ரீதியாக பார்த்தாலும் இப்படம் வெற்றிதான். ஆனால், அதற்குக் காரணம் பரபரப்புகளும் பிரச்சினைகளும்தானே தவிர, விஸ்வரூபம் அல்ல. இது நல்ல படம் இல்ல என்று நான் சொல்லவில்லை. நல்லபடமாக இருந்திருக்கலாம் என்றுதான் சொல்கிறேன். மற்றபடி படத்தின் படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இசை, நடிப்பு போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள தமிழ் இதழ்களை பார்த்துக்கொள்ளுங்கள். 


இப்படிக்கு, மகாநதி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அன்பே சிவம் etc etc....கமல்களில் மிகத் தீவிரமான ரசிகன். - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி. 

5 comments:

 1. Oatha unna kudiyae seekaram naan ponama pappennu ninaikuren:) paathu irunthuko machi:)

  ReplyDelete
 2. Dude.....Unakku vimarsanam ezhuthura thaguthiyae kidaiyaathu....Padatha patri vimarsanam kudu...kamala patri vimarsanam seiya ethukku unna pada vimarsagara kaattikira?

  Mothala poi...vimarsanam ezhutha kathukko...apparama podalaam Blogu!!!
  (Ithu ennoda karuthu suthandhiram) -

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா...காண்டுல எழுதியிருக்கீங்க போல...ஒன்னே ஒன்னு நல்லா புரிஞ்சுக்கங்க. நான் கமல பத்தி விமர்சனம் பண்ணல. இந்த படத்துல கமல் பண்ணிருக்கற விஷயங்கள பத்திதான் விமர்சனம் பண்ணேன் சரியா? எனக்கு விமர்சனம் எழுதற தகுதி இருக்கா இல்லையானுலாம் எனக்கு கவலை இல்ல. இது என் பார்வை அவ்ளோதான். ரைட். ரெண்டாவது இதுதான் படத்தோட விமர்சனம். இத கமல் மீதான விமர்சனமா எடுத்துகிட்ட உனக்கு கமெண்ட் செய்யவே தகுதி இல்லை. போய்ட்டு கோலி விளையாடு போ...

   Delete
 3. Nice review... Jai.! thank fully first time.. i am reading the original review of vsvarpm.!

  keep writing.. ! :)

  naanum.. padam. pathu..nodahvan thane.!

  blood.. same blood..! :)

  ReplyDelete