Wednesday, November 5, 2014

குட்டிப்புலி என்னும் குள்ளநரி


‘சசிக்குமார் படம்னா நல்லா இருக்கும்பா. நம்பிப் பாக்கலாம்’. படம் ஆரம்பிக்கும் முன் என் பக்கத்து இருக்கைக்காரர் சிநேகமாய் உதிர்த்த வார்த்தைகள் இவை.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன்பு ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற அழகான படம் ஒன்று வந்தது. சில தேசிய விருதுகளையும் பெற்றது. அந்த படத்தின் கதையை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். பக்கத்து ஊருக்கு போய் உயிரை விடும் ஒரு தகப்பன், அவனில்லாமல் தனது பிள்ளையை வளர்க்கும் ஒரு கம்பீரமான பாசமான தாய். கருணையே வடிவான அந்த தாயே, இறுதியில் ஒருவனால் தன் மகனின் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று தெரியும்போது அவனை கொல்லத் துணிகிறாள். பெண்மையின் வீரத்தையும் கம்பீரத்தையும் மிக யதார்த்தமாக அழகியலோடு எடுக்கப்பட்ட இந்த படத்தின் கதையில் அப்படியே டஜன் டஜனாக மசாலா ஊற்றிக்கொள்ளுங்கள். கொஞ்சம் ஹீரோயிசம். நடுவே நடுவே எதெற்கெல்லாம் விசில் வருமோ அந்த அத்தனை விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு கலவை தயாரா? அதை எந்தவித திரைமொழியும் இல்லாமல், திரைக்கதையும் இல்லாமல், சுவாரசியமும் இல்லாமல், பழைய பாடல்கள் நாலைந்தை பேக்ரவுண்டாக போட்டு சும்மா ஒரு படம் எடுங்கள். அப்படத்தில் அம்மா என்று அழுத்தமான முத்திரை பதித்த சரண்யாவையும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். (காப்பி அடிக்கறதுதான் அடிக்கறீங்க, கேரக்டர மாத்தியாச்சும் காப்பி அடிக்கக் கூடாது?) அதை பெரிதாக வியாபாரப்படுத்தி விற்றுவிடுங்கள். அதிகபட்சமான தியேட்டர்களில் வெளியிட்டும் விடுங்கள். இதுதான் ‘குட்டிப்புலி’.
சினிமா ஒரு அறிவியல் கலை என்ற புரிதல் வந்தவுடன் நான் கற்றுக்கொண்ட முதல் விஷயம், வன் உணர்வுகள், மென் உணர்வுகள் பற்றித்தான். எந்த விஷயத்தையெல்லாம் கண்டால் நாம் உடனே உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோமோ, எதற்கெல்லாம் உடனே நம் மயிர் புல்லரிக்கிறதோ, எதற்கெல்லாம் நம் பல் உடனே நறநறக்கிறதோ, சுருக்கமாக எதுவெல்லாம் நம்மை உடனே உணர்வுக்கு ஆட்படுத்துகிறேதோ அவையெல்லாம் வன் உணர்வுகள். உதாரணமாக செக்ஸ், வன்முறை. எதுவெல்லாம் நம் மனத்தில் அமைதியாக ஆனால் ஆழமாக அமர்ந்து நம்மை ஒரு அற்புதமான மனோநிலைக்கு இட்டுச் செல்கிறதோ அதுவெல்லாம் மென் உணர்வுகள். உதாரணம் காதல், பாசம். மனித மனத்தில் 85 சதவிகிதம் வன் உணர்வுகள்தான் என்று உளவியல் சொல்கிறது. வன் உணர்வுகளை காட்டி நம்மை ஒரு சினிமா உடனே உசுப்பேத்தி விடலாம். ஒரு செக்ஸ் காட்சியோ அல்லது ஒரு கழுத்து வெட்டும் காட்சியோ காட்டப்பட்டால் உடனே நாம் அதனுள் இழுக்கப்பட்டு ‘ப்ப்ப்ப்பா’ என்போம். அது சுலபம். ஆனால் அது நல்ல சினிமா ஆகாது. மென் உணர்வுகளை காட்டி அதனுள் நம்மை இழுப்பது மிகக் கடினம். ஆனால் அதுதான் சிறந்த சினிமா. உலகெங்கும் வந்த மிகச்சிறந்த, இன்றளவும் போற்றப்பட்டும் படங்களை ஆய்வு செய்து பாருங்கள். நிச்சயம் அவை யாவும் மென்உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட படங்களாகத் தான் இருக்கும். அதனால்தான் அவை சிறந்த சினிமாக்கள் என்று போற்றப்படுகின்றன.
சசிக்குமார் தனது அத்தனை படங்களிலும் இந்த வன்உணர்வுகளைத் தூண்டித்தான் வெற்றி பெற்றுள்ளார். இத்தனை வருடங்களாக தமிழ் மசாலா சினிமாக்கள் சில ஏற்பாடுகளை செய்துவைத்திருக்கிறது. அதையெல்லாம் காட்டி காட்டி ரசிகனை கைத்தட்ட வைத்தது. அவனும் தட்டினான். காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், கழுத்தறுத்தல்கள், இப்படி பலப்பல. எதையெல்லாம் இந்த மசாலா சினிமாக்கள் செய்து வைத்ததோ, எதையெல்லாம் காட்டினால் ரசிகன் கைத்தட்டிப் போவானோ, அந்த அத்தனை விஷயங்களையும் திரைக்கதை பற்றியெல்லாம் யோசிக்காமல் போகிற போக்கில் சேர்த்துவிட்டுப் போகிறது குட்டிப்புலி. அத்தனை மசாலா டப்பாக்களில் இருந்தும் ஒவ்வொரு சிட்டிகை எடுத்து அப்படியே தூவி தூவி விட்டிருக்கிறார்கள். சிரிக்க சில காட்சிகள், ரைட்டு ஓவர், இப்போது சென்ட்டிமெண்ட். எப்படி? சசிக்குமார் வீட்டை விட்டு வெளிய வர்றாரு. எப்படி? அதெல்லாம் ஒரு மொக்க காரணம் சொல்லிக்கலாம். ம்ம். இப்ப லவ்வு. இப்ப பைட்டு. ரைட்டு படம் ஓவர். இடையில் சசிக்குமார் கம்பு சுற்றக் கற்றுகொண்டிருக்கிறார் போல. அதையும் ஒரு காட்சியாக வைத்து, அதனால்தான் வில்லன் என்ட்ரி ஆகிறார் என்று திரைக்கதையோடு ‘இணைத்தும்’ விட்டிருக்கிறார்கள். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரானை விட இப்படத்திற்கு அதிகமாக பாட்டு போட்டிருப்பது இளையராஜாதான் என்று நினைக்கிறேன். அத்தனை பழைய பாடல்கள் எரிச்சல் ஏற்றும் வகையில் திணிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மேல் இந்த படத்தை பற்றி விமர்சிக்க இதில் எதுவுமே இல்லை.
பழைய எம்.ஜி.ஆர் படங்களில் சில விஷயங்கள் கட்டமைக்கப்படும். நல்லவர், அன்பானவர், கருணையானவர், குடிக்கமாட்டார், யாருக்கும் உதவி செய்வார், நம்பிக்கையானவர் இப்படி பல. ஒரு கதாப்பாத்திரமாக மனதில் ஒட்டாமல், எம்.ஜி.ஆர் என்ற பிம்பமே எல்லா படங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கும். அது அவரது சமூக வாழ்க்கைக்கு எந்தளவிற்கு உதவியது என்பது அனைவர்க்கும் தெரியும். அதன் பிறகு தனிமனித கட்டமைப்பு அந்தளவிற்கு இல்லாமல் கதாப்பாத்திர கட்டமைப்பே பிரதானமாய் நின்றது. உதாரணம், ரஜினி. ஆனால் மீண்டும் தனிமனித பாத்திரக் கட்டமைப்பை ஆரம்பித்து வைத்திருக்கிறார் சசிக்குமார். அவரது அத்தனை படங்களையும் பாருங்கள். கோபமானவர், நட்புக்கு உயிரையும் கொடுப்பவர், நல்லவர், பெண்கள் மேல் அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவர், யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவர், தைரியமானவர் என்று பலப்பல. எப்படி பாலாவின் கதாப்பாத்திரங்கள் அத்தனையும் ஒரே சாயலான பாத்திரத்தன்மையை கொண்டிருப்பது விமர்சிக்கப்படுகிறதோ, அதைவிட ஆபத்தானது, சசிக்குமார் ஏற்கும் அத்தனை கதாப்பாத்திரங்களும் ஒரேவிதமான சோ கால்டு நாயகத்தன்மையோடு இருப்பது. எல்லாமே யதேச்சைதான் என்று சினிமாவே பார்த்திராத ஒருவனிடம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசி நியாயப்படுத்தி விடலாம்.
இவை அனைத்தையும் விட முக்கியமான, ஆபத்தான விஷயம், சாதி அரசியல். தமிழ்நாட்டில் சாதி எவ்வளவு வேரான விஷயம் என்று நம் அனைவர்க்கும் தெரியும். எந்த ஒரு துறையிலும் சாதி எவ்வளவு வேரூன்றி இருக்கிறது என்பதும் தெரியும். குறிப்பாக சினிமாவும் அரசியலும் கைகோர்த்திருக்கிற ஒரு சூழலில், அங்கே சாதி எனப்படுவது எத்தகைய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். தென் தமிழகங்களில் இன்றும் தங்கள் சாதி சார்ந்த நாயகர்களைத்தான் ‘தலைவர்களாக’ வழிப்படுகிறார்கள். ‘போற்றிப் பாடடி பெண்ணே’ யும் ‘சந்திரனே சூரியனே’ வும் இன்றும் ஆதிக்க சாதியினரின் அத்தனை விழாக்களையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரையிலும் அவர்களது ஓட்டு அந்தந்த நாயகர்களுக்குத்தான். இதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். ஒரு அரசியல் சர்வே எடுக்க சென்றபோது, அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கும் சரத்குமாருக்கும் ரொம்ப தூரம். ஆனாலும் சரத்குமாருக்குத்தான் ஓட்டு என்றனர். ஏன் என்றபோது ‘என்ன தம்பி பண்றது, அவர்தான நம்மாளு’ என்றனர். இதுதான் தமிழ்நாடு. சாதியை பயன்படுத்துவது எத்தகைய பயன்களை நமக்குத் தருகிறது. அதையே அடிப்படையாக வைத்து அரசியலில் களம் கண்டவர்களும் உண்டு. இத்தகைய வீரியமுள்ள சாதி அரசியலை, ஒரு சமூகத்தின் ஆகச்சிறந்த சேர்ப்பிப்பு ஊடகமான சினிமாவில் பயன்படுத்துவது எத்தனை ஆபத்தானது? அதுவும் அதன் கயமை பற்றி பேசாமல் வலிமை பற்றி பேசுவது? ராமதாஸ், குரு போன்றோர் ஆயிரம் மேடைகளில் பேசி கொண்டுவரக்கூடிய ஒரு விளைவை, ஒரே ஒரு, ஒரே ஒரு, சரியாக எடுக்கப்பட்ட சினிமா செய்துவிடும். அதுதான் சினிமா. சுந்தரபாண்டியன் படத்தில் செய்யப்பட்டதும் இதுதான். பருத்திவீரனில் செய்யப்பட்டதும் இதுதான். குட்டிப்புலியில் செய்யப்பட்டிருப்பதும் இதுதான் (நல்லவேளை இது சரியாக எடுக்கப்பட்ட படமல்ல). ஆதிக்க சாதியை சார்ந்த நாயகனின் அத்தனை வலிமைகளையும், பெரும் குணாதிசயங்களையும், அத்தனை பெருமைகளையும் புட்டு புட்டு கூறுவது அந்த நாயகனுக்கு மட்டும் பொருந்தும் என்று நீங்கள் கருதினால் மன்னிக்கவும், அதை பார்க்குத் அத்தனை ஆதிக்க சாதியினருக்கும் அந்த பெருமிதம், வெறி மெல்ல மெல்ல அவர்களுக்கே தெரியாமல் ஏற்றப்பட்டுக்கொண்டே தான் இருக்கும். இருக்கிறது. இதையும், சசிக்குமாரின் படங்களில் மெல்ல மெல்ல கட்டமைக்கப்படும் நாயகத்தன்மையையும் இணைத்துப்பாருங்கள். நான் சொல்வது எவ்வளவு ஆபத்தானது என்று தெரியும். ‘சசிக்குமார்’ என்ற பிம்பம் மட்டும் படங்களின் மூலம் கட்டமைக்கப்படும்போது, ஒரு படத்தில் அந்த பிம்பம் சாதி சார்ந்த பிம்பமாக இணைத்து ஏற்றப்படும்போது, அந்த அத்தனை நாயக பிம்பங்களும் சாதிய பிம்பத்தோடு சேர்த்துத்தான் பார்க்கப்படும். இது நிச்சயம். கைத்தட்டல் என்ற அப்போதைய வெற்றிக்காக எப்படி இந்த மசாலாக்கள் எல்லாம் தூவப்படுகிறதோ அதே போல், பல நாள் இருப்பிற்காக இந்த சாதிய மசாலாவும் தூவப்படுகிறது. உஷார்ர்ர்ர்ர்ர்...
ஏன் இதுபோன்ற நெகடிவ் விஷயங்களை எழுதுறீங்க? முதல்ல சினிமாவ பத்தி ஏன் எழுதுறீங்க? விளைவுகள் வருங்காலத்துல வருமே? படம் நல்லா இல்லனு சொல்றதுக்கு நீ யாரு? உனக்கேன்யா இந்த வேலை? என நிறைய பேர், நெருங்கிய நண்பர்கள் கூட தொடர்ந்து கேட்பதால் இனி சினிமா விமர்சனம் எழுத வேண்டாம் என்றே நினைத்திருந்தேன். அதற்கு ஒரு முக்கிய காரணம், இங்கே ஜெயித்தவன் கூற்றே கேள்வியின்றி ஏற்கப்படும். ஜெயித்துவிட்டே பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தப்படத்தை பார்த்ததும் நிச்சயம் எழுதியே தீர வேண்டும் என்று தோன்றியது. காரணம்...நல்ல விதை போட்டு சரியாக உழுதால் மட்டும் ஒரு நிலம் செழிக்காது. அவ்வப்போது களைகளையும் பிடுங்க வேண்டும். இது நான் நேசிக்கும் நிலம். நான் காதலிக்கும் நிலம். நான் உயிராய் நினைக்கும் நிலம். அதில் களையை எப்படி அனுமதிக்க முடியும்? உங்கள் நிலத்தில் நீங்கள் களைகளை வளரவிடுவீர்களா? இனி களையென்று நான் கண்டதை மட்டும் என்னால் முடிந்தவரை பிடுங்கிப் பார்க்கிறேன்.
பி.கு. படம் முடிந்தவுடன் என் பக்கத்து இருக்கைக்காரரை ‘அண்ணே படம் முடிஞ்சுடுச்சு’ என்று மூன்று முறை உலுக்கியவுடன்தான் எழுந்தார் !!!

No comments:

Post a Comment