Wednesday, November 5, 2014

ஜிகர்தண்டா !!!

சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் அது ஓடாது என்கிற அபத்தமான மூட நம்பிக்கை தமிழ் சினிமாவில் உள்ளது. அந்த மூட நம்பிக்கையை சிரிக்க சிரிக்க சுவாரசியமாக அடித்து நொறுக்கியிருக்கின்றது ஜிகர்தாண்டா.
ஒரு படத்தில் நாயகன், வில்லன், இசை இதுவெல்லாம் கொடுக்கும் ஒரு மாஸான ஃபீலைத் தாண்டி, படம் பார்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பேரின் மனதிலும் இயக்குனரே நாயகனாய் நிழலாடுவது மிக அரிதான ஒரு நிகழ்வு. அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது ஜிகர்தண்டா. கார்த்திக் சுப்புராஜின் திரைமொழி அவரது குறும்படங்களில் இருந்தே மிகவும் பிடிக்கும். அவருக்காகவும் அவரது சாதுர்யமான திரைக்கதையை எதிர்பார்த்து மட்டுமே படத்திற்கு சென்றேன். சிரிக்க சிரிக்க சுவாரசியமான சாதுர்யமான திரைக்கதையோடு பட்டாசாய் வெடித்திருக்கிறது படம். அதைத்தாண்டி சிம்ஹா என்னும் ஒரு கலைஞனையும் கண்டெடுத்திருக்கிறது ஜிகர்தண்டா.
இந்த படத்தை மாற்று சினிமா, மசாலா சினிமா என்றெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை என்றாலும், ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியாக வேண்டும். தற்கால தமிழ் சினிமா சூழலில், வந்துகொண்டிருக்கும் அத்தனை நாயக வழிபாட்டு மசாலா படங்களுக்கும் மத்தியில், உடனே ஒரு மாற்று சினிமா வந்துவிட முடியாது. முதலில் அதற்கு மாற்று சினிமாவை ரசிக்கும் சினிமா ரசனை வளர வேண்டும். அதற்கு முதல்படி, ஹீரோயிச படங்களில் நாயக பிம்பத்தை விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்களை மெதுவாக அதிலிருந்து திசைதிருப்பி, கதையையும் திரைக்கதையையும் ரசிக்க செய்ய வேண்டும். நாயகன் வந்தால், சும்மா ஏதாவது செய்தால் திரையரங்கில் கிடைக்கும் கத்தல் கூப்பாடுகளை, திரைக்கதையின் சுவாரசியங்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். அதுதான் மெல்ல மெல்ல ரசிகர்களின் ரசனையை மாற்றி, ஒருகட்டத்தில் திரைக்கதைதான் நாயகன் என்ற மனநிலைக்கு கொண்டு வரும். அப்போதுதான் திரைக்கதையை மட்டுமே நம்பும் நல்ல சினிமாக்கள் வர முடியும். அதை செய்திருக்கிறது ஜிகர்தண்டா. அந்த வகையில் இதுவொரு முக்கியமான படம்தான். பெரிய ரசிக வழிபாடு உள்ள நாயகர்கள் இல்லை. இன்ட்ரோ பில்டப், லோ ஆங்கிள் ஷாட் என்று எதுவும் இல்லை. ஆனாலும் திரைக்கதையின் ஒவ்வொரு சுவாரசியங்களுக்கும் திரையரங்கு கைத்தட்டல்களில் அதிர்கிறது. ஒரு நல்ல கதையை எடுத்துக்கொண்டு அதை சுவாரசியமான திரைக்கதையால் கட்டியமைத்தால், அதிலேயே திரைக்கதையோடு இயைந்த யதார்த்தமான பல ஹீரோயிசக் காட்சிகள் வரும். நிஜத்தில் அதுதான் ரசிகனை பலமடங்கு கத்த வைக்கும். புல்லரிக்க வைக்கும். க்ளேடியேட்டர் போன்ற படங்கள் இதற்கு உதாரணம். கதையோடு கலந்த ஹீரோயிசம். அந்த ஹீரோயிசத்தை பயன்படுத்தினாலே போதும். வெற்று ஹீரோயிச பில்டப்புகளை காட்டிலும் அது பன்மடங்கு அதிகமான கரகோஷங்களை பெற்றுத் தரும். இந்த படத்தில் சேதுவை பாத்ரூமில் ஒருவன் கொல்ல வரும்போது நடக்கும் காட்சியும், இறுதியில் கார்த்திக் ஒரு சினிமா ஹீரோவிடம் பேசும்போது நடக்கும் காட்சியையும் கூட அதற்கான சிறிய உதாரணங்களாக சொல்லலாம்.


படத்தின் மைய இழை, வதந்திகளில் சொல்லப்பட்ட ‘தி டர்ட்டி கார்னிவல்’ படத்தை ஒத்தே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சினிமா படமெடுக்க கேங்ஸ்டர்களை பற்றி தெரிந்துகொள்ள வரும் ஒருவன் அவர்கள் வாழ்வை அப்படியே எடுத்துவிட, அதனால் அவர்களுக்கு சிக்கல்கள் வர, அவர்கள் இவன்மேல் கோபப்பட, இறுதியில் அவர்களுக்கும் இவனுக்கும் என்ன ஆனது என்பதே டர்ட்டி கார்னிவல் படம். அதே முடிச்சை வேறு திசையில் இருந்து அணுகி, பல மாற்றங்கள் செய்து, அங்கே சீரியசாக முடியும் ஒவ்வொரு விஷயத்தையும் காமெடியாகவே கொண்டு சென்றிருக்கிறது ஜிகர்தண்டா. கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை பார்த்திருக்கிறாரா, பார்த்து அதில் தட்டிய பொறியா ஜிகர்தண்டா என்று தெரியவில்லை. டர்ட்டி கார்னிவல் படத்தின் இன்ஸ்பிரேஷன் போலத்தான் எனக்குப் பட்டது. காப்பியடிப்பதுதான் தவறு, இன்ஸ்பிரேஷன்கள் தவறே இல்லை. அதை திரையில் போட்டிருந்தால் இன்னும் நலம். இன்ஸ்பிரேஷன்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் அப்பட்டமான காப்பிகளுக்கு மத்தியில், இது ஒரு TRUE EXAMPLE OF AN INSPIRATION ஆக இருந்திருக்கும். ஆனால், ஒரு படத்திலிருந்து இன்ஸ்பையர் ஆகி ஒரு படம் எடுக்கையில், எடுக்கும் படம் முந்தையதை விட சுவாரசியமாக இருப்பதுதான் அந்த ஒரிஜினலுக்கு செய்யும் ஆகச்சிறந்த மரியாதையாக இருக்கும். அதை செவ்வனே செய்திருக்கிறது ஜிகர்தண்டா. நிச்சயம், டர்ட்டி கார்னிவலை விட சுவாரசியமாகவும், தரமாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அதன் மூலம், டர்ட்டி கார்னிவலின் திரைக்கதை முடிச்சுதான் என்பதுதான் கொஞ்சம் உறுத்தலாக படுகின்றது. இது, இத்தனை சுவாரசியமான, தரமான, முக்கியமான படம் முழுக்க முழுக்க நம் இயக்குனரின் BRAINCHILD ஆக இருந்திருக்கலாமே என்ற சிறிய ஆதங்கத்தினால் வருவதேயன்றி வேறில்லை.
மாற்றுக்கருத்துக்களும் இருக்கிறது இப்படத்தில். காதல் எபிசோட், ஆரம்பகட்ட திரைக்கதை, இடைவேளையில் சில காட்சிகள், இறுதிக்கட்டத்தில் சில காட்சிகள் என பல இடங்களில் நிறைய செயற்கைத்தனம் நிறைந்திருந்தது. அதைத்தாண்டி, நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்ப நேர்த்தி, திரைமொழி, காட்சியமைப்பு என்று அத்தனையிலும் தேர்ந்த கலைத்திறனுடன் வந்திருக்கும் படம் இது. படத்தின் மேல் உங்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பினும், தயவுசெய்து தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டு அதைப் பற்றி விவாதியுங்கள். இதுபோல் அவ்வப்போது வரும் நல்ல படங்களையும் திருட்டி டிவிடியை போட்டு புதைத்துவிடாதீர்கள். வணிக சினிமா வரையறைக்கும் எல்லைகளுக்குள் இருந்துகொண்டு அதில் புதுமைகளும், ஆல்டர்னேட் சினிமாக்களும் செய்வதோ செய்ய முற்படுவதோ கிட்டத்தட்ட ஒரு மேஜிக்தான். அந்த தந்திரம் கார்த்திக் சுப்புராஜுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கைவந்துகொண்டே இருக்கிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக பரிணாமித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜின் வளர்ச்சியும் வெற்றியும், ஏனோ தெரியவில்லை, அளப்பரிய சந்தோஷத்தையும், மிகப்பெரிய நம்பிக்கையையும் அளிக்கின்றது. வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்புராஜ். இது ஒரு இயக்குனரின் படம் !!!

No comments:

Post a Comment