Wednesday, November 5, 2014

கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்

சமீபத்தில் பார்த்த படங்களில் மிக அலாதியாக ஈர்த்தது இந்த படம். ஜிகர்தண்டா போன்ற படங்கள் மிகவும் பிடித்திருந்தாலும் கூட, அவையும் ஒருவகையான ஹீரோயிக் தனங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. ஒரு வித்தியாசம், அவற்றை பெரிய ஹீரோக்களின் கீழே அடகு வைக்காமல், கதையின் நாயகர்களை வைத்து புத்திசாலித்தனமான திரைக்கதையால் நகர்த்திச் சென்றது. ஆனால் இந்த படத்தில், கதாநாயகர்கள் ஏன், கதாநாயகத் தன்மை கூட இல்லை. கதாப்பாத்திரங்கள் செய்யும் வன்முறைகளின் போது தெறிக்கும் இசை இல்லை. ட்விஸ்ட் என்ற பெயரில் செயற்கைத்தனமான திருப்பங்கள் இல்லை. பிரம்மாண்டம் என்ற பெயரில் பணத்தை வீணாக்கவில்லை. தேவையற்ற மசாலாக்கள் இல்லை. தலைப்பிலேயே சொல்லிவிடுவதைப் போல பெரிதாக கதை கூட இல்லை. ஆனாலும் அந்த வஸ்துவிற்கு நேர்மையாய், முழுக்க முழுக்க மிக சுவாரசியமான திரைக்கதையால், புத்திசாலித்தனமான வசனங்களால், புதுமையான சிந்தனையால், அட்டகாசமான காட்சிக்கோர்வைகளால், ஒரு கொண்டாட்டமான திரை அனுபவத்தை தருகிறது இந்த படம்.
ஒரு இயக்குனராக பார்த்திபனை எனக்கு மிகவும் பிடிக்கும். சில படங்களில் அவர் சொல்ல யத்தனித்தது சரியாக சொல்லப்படவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் அதை தவிர்த்து சொல்ல வந்ததை தற்போதைய ரசனைக்கு ஏற்ப, அந்த ரசனையையும், அந்த சினிமாவையும் கிண்டல் செய்தே நேர்த்தியாக தந்திருக்கிறார். இன்ட்யூஷனை வைத்து திரைக்கதை அமைத்த விதம், கதை சொல்லும் விதம் என டைட்டில் கார்டுகள் முதல் என்ட் கார்டு வரை படம் முழுக்க சிதறியிருக்கிறது பார்த்திபனின் ரசனைமிக்க டச். ‘ஹவுஸ்ஃபுல்’ போன்ற தரமான திரைப்படத்தை எடுத்து விட்டு வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட பார்த்திபன் போன்ற இயக்குனர்களுக்கு, தமிழ் ரசிகர்கள் செய்யும் கைம்மாறு, இந்த படத்தை ஹவுஸ்ஃபுல் ஆக்குவது தான். கதை இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்கும் குப்பைகளை விட, கதை இல்லை என்று சொல்லிவிட்டு வந்திருக்கும் இந்த படம் ஆயிரம் மடங்கு தகுதியானது.
தமிழில் நல்ல சினிமாக்கள் வருவதற்கான பாதையில் இன்னொரு புதிய பாதை இது. சினிமாவைப் பற்றி படம் எடுத்தால் ஓடாது என்ற அந்த அசட்டு மூடநம்பிக்கையை சமீபத்தில் தகர்த்த இரண்டாவது படமாக இது இருக்கும் என நம்புகிறேன். இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பெரிய ஹீரோக்கள் நடித்து வரும் படம் குப்பை என்று தெரிந்தாலும் கூட, அதை தான் பார்த்து உறுதிப்படுத்துக் கொள்ள துடிக்கும் அந்த மனநிலை தான் அதுபோன்ற படங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம். இது போன்ற படங்கள் நன்றாக இருக்கிறது என்று கூவிக்கூவி பேசினாலும், அப்புறம் பாத்துக்கலாம் என்று தவறவிடுவதுதான் இதுபோன்ற முயற்சிகளுக்கு நாம் செய்யும் துரோகம். நல்லதோ கெட்டதோ, நாம் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று மாஸ் மசாலா படங்களுக்கு கொடுக்கும் அந்த சலுகையை இந்த படத்திற்கு கொடுங்கள். நிச்சயம் இந்த படம் உங்களை ஏமாற்றாது.

No comments:

Post a Comment