Wednesday, November 5, 2014

ஆதலால் காதல் செய்வீர்


காதல் என்ற பெயரில் இதுபோன்ற செயல்கள் நடப்பதே இல்லையா? இதுபோன்ற உடல்சார்ந்த துடிப்புகள் காதல் என்ற பெயரில் அரங்கேறுவதேயில்லையா? என்று கேட்டால் நிச்சயம் இதுபோன்றும் நடக்கத்தான் செய்கின்றன. காதலில் மட்டுமல்ல, உலகின் அத்தனை உறவுமுறைகளிலும், இதுபோன்ற பிறழ்நடைமுறைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதனால் அந்த உறவுமுறையே தறவானது ஆகிவிடுமா என்ன? எப்படியெல்லாம் காதல் வரக்கூடாதோ அப்படியெல்லாம் இப்படத்தில் காதல் வருகிறது. என்னவெல்லாம் நடக்கக் கூடாதா அதெல்லாம் இங்கே நடக்கிறது. எதுவெல்லாம் காதலில் இருக்கக் கூடாதோ அதுவெல்லாம் இங்கு இருக்கிறது. இதுபோன்ற காதல் விளையாட்டுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் காதலின் அத்தனை நெகடிவ் விஷயங்களையும் காட்டிவிட்டு, ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்று பெயர் வைப்பது எத்தனை சூழ்ச்சிகரமானது? கிட்டத்தட்ட ஒரு நயவஞ்சகமான தலைப்புதானே இது. ‘பாருங்கடா...காதல்ன்ற பேர்ல இப்படித்தான்டா நடக்குது...போங்கடா...நீங்களும் காதல் செய்யுங்கடா’ என்று ஊர் கொழுத்திகள் காலங்காலமாக சொல்லிக்கொண்டு வரும் வெற்றுப்புலம்பல்களின் திரைவடிவம்தான் இந்தப்படம்.
இந்த ஊர்கொழுத்தி கும்பல் இத்தனை நாட்கள் நூறு மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் கத்தி கத்தி ஏற்றிய நஞ்சை ஒன்னே முக்கால் நேரத்திலேயே இந்தப்படம் ஏற்றிவிடுகிறது. அதுதான் சினிமா என்னும் கலையின் பலம். காதலை பற்றி தவறாக பேசியவுடனேயே கண்மூடித்தனமாக முறுக்கிக்கொண்டுவர நானொன்றும் மூடன் இல்லை. முன்னரே சொன்னதுபோல் இதுபோன்ற செயல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒரு படைப்பாளி எந்த பக்கம் நின்றுகொண்டு தன் படைப்பை வழங்குகிறான் என்பதுதான் அதிமுக்கியம். அப்படம் அந்த பிரச்சினை சார்ந்து பார்ப்பவர்கள் மனத்தில் எத்தகைய உணர்வுகளை ஏற்றுகிறது என்பது மிகமுக்கியம். தர்மபுரி கலவரத்தை நீங்கள் படமாக்குவது பெரிதல்ல. எந்த பக்கத்திலிருந்து நீங்கள் அதை படமாக்குகிறீர்கள் என்பதில்தான் உங்கள் படைப்பு நேர்மை பொதிந்திருக்கிறது. வனயுத்தம் ஒரு உண்மையான கதையின் படம்தான். ஆனால் அது அரசாங்கத்தின் பக்கம் மட்டுமே நின்று வீரப்பனை சினிமாவிற்கான வில்லனாக்கிப்போன ஒரு நேர்மையற்ற படமாகியது. இதுபோன்ற காமத்தை பதிவு செய்வது தவறல்ல. ஆனால் இது காதல் அல்ல, உடல்வேட்கைதான், அந்த தவறிலிருந்து விளையும் கிளைகள்தான் மிச்ச பிரச்சினைகள், காதல் என்பது வேறு என்ற நிலையில் இருந்து அணுகியிருந்தால்தான் இப்படம் சரியான படமாக வந்திருக்கும். அதுபோன்ற ஒரு வசனம் கூட படத்தில் இல்லை. ஆனால், இப்படத்தில் காட்டப்படுவதுதான் காதல், இதுதான் இப்போதைய காதல், இப்படித்தான் இளைஞர்கள் காதலிக்கிறார்கள் என்ற நிலையிலிருந்துதான் இப்படம் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இப்படம் படைப்புநேர்மையற்ற படம் என்று கூறுகிறேன். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிறார்கள். எந்தளவிற்கு காதலை போற்றுகிறோமா அதே அளவிற்கு இதுபோன்ற காமவிளையாட்டுக்களை கண்டிப்பதும் வேண்டும். ஆனால் இது காதல் இல்லை, காதல் என்ற பெயரில் நடத்தப்படும் விளையாட்டு என்ற புரிதலோடு தான் கண்டிக்கப்பட வேண்டும்.
இப்படத்தில் காட்டப்பட்டிருப்பதன் பெயர் காதல் அல்ல. காதலுக்கு அடுத்த நிலையே உடலுறவுதான் என்ற பிற்போக்குத்தனமா கருத்துள்ளவர்கள் தூக்கிக்கொண்டாடப்போகும் படம் இது. இது காதலே இல்லை. எனவே இதில் வரும் செயல்களை காதலோடு தொடர்புபடுத்திப் பேசவேண்டிய அவசியமும் இல்லை. ஆழமான அழகான காதல் உங்களுள் என்னவெல்லாம் செய்யும் என்பதை ஒருவர் சொல்லி அடுத்தவர் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் நீங்கள் அந்த காதலில் திளைத்திருந்தால், எதிரில் வரும் முகம் தெரியாத மனிதனை நோக்கி ஒரு சிநேகப் புன்னகை படரவிட முடியும். இது முற்றிலும் உண்மை. இதுதான் காதல். சாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்தையும் தகர்த்து ஒற்றை இறகாய் மனம் வருடும் காதல்.
ஆதலால் காதல் செய்வீர்...உலகத்தீரே !!!

No comments:

Post a Comment