Wednesday, November 5, 2014

மெட்ராஸ் & ஜீவா

ஒடுக்கியோர் குலப்பெருமையை மட்டுமே ஃபேண்டசைஸ் செய்து திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி அதில் சூழ்ந்துள்ள அரசியலை பேசி, சமூக அரசியலை வலியுறுத்திறது ‘மெட்ராஸ்’.
நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை சேர்ந்த ஒரு அமைப்பை, அதில் வேர் பரப்பியிருக்கும் சாதிவெறியை, அப்பட்டமாக தோலுரித்து கேள்வியெழுப்பும் தைரியமான படம் ‘ஜீவா’. அரசாங்க அமைப்பு ஒன்றை நோக்கி இத்தனை நேரடியாக வேறெந்த படமும் கேள்வியெழுப்பியதில்லை.
இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தது எத்தனை அழகான யதார்த்தம். இரண்டு படங்களுமே வணிக ரீதியாக வெற்றி பெற்றிருப்பது ஆரோக்கியமான ஒன்று. கேட்க வேண்டிய இடத்தில் இந்த படங்கள் எழுப்பும் கேள்விகள் ஒலிக்குமாயின் நிச்சயம் அது ஒரு பெரும் மாற்றத்திற்கான முதல் படியாக இருக்கும். இரு படங்களிலும் உங்களுக்கு பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் குறைகளும் இருக்கலாம். அத்தனையையும் படங்களை பார்த்துவிட்டு கேள்வியாக எழுப்புங்கள். விவாதத்தை தூண்டுங்கள். ஒரு பெரும் உரையாடல் நடக்கட்டும். என்னளவில், மெட்ராஸ் ஜீவா இரண்டு படங்களை பற்றி, அவை பேசும் அரசியலைப் பற்றி எழுப்பப்படும் எந்த ஒரு கேள்வியும், தொடரப்படும் எந்தவொரு விவாதமும், பேசப்படும் எந்தவொரு உரையாடலும், நிச்சயம் நாளைகளின் சினிமா சமூக அரசியலை வீரியமாக தைரியமாக பேசிடவே வழிவகுக்கும்.
அமைதியாக தேங்கியிருக்கும் ஓடையில் பேரமைதியுடனும் பெருவெறியுடனும் காத்திருக்கிறது முதலை. ஓடையில் ஏற்படும் சிறு சலனமும் முதலையை அப்புறப்படுத்தாவிட்டாலும், அசைத்துப் பார்க்கும். அந்த ஓடையில் எரியப்பட்ட இரு சிறு கற்கள் மெட்ராஸ் & ஜீவா.

ஒரு வருட வசந்தம் !!!

சென்ற ஆண்டின் இந்த நிமிடங்கள் தந்த பரவசமும் படபடப்புமே இன்னும் அடங்கவில்லை. இதே நாளில்தான் எங்கள் திருமணம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நண்பர்கள் சூழ மிக எளிமையாக பிரம்மாண்ட மகிழ்ச்சியோடு சாதி மறுத்து, சடங்கற்று வாழ்வில் இணைந்தோம். ஒரு வருடம் ஓடிவிட்டது. மறக்க முடியா நினைவுகளை சுமந்து சென்ற ஒரு வருடம். எண்ணற்ற சம்பவங்கள் நிறைந்த ஒரு வருடம். இன்னும் அவள் காதலுக்கு தகுதியானவனாக மாற முயன்றுகொண்டே இருக்கிறேன். வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. ஒரே குறையைத் தவிர வேறொன்றுமில்லை. அம்மா இருந்திருக்க வேண்டும். எல்லோரையும் விட இந்த நாளை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அம்மா தான். சென்ற ஆண்டே இந்த நாளில் கண்ணீரை துடைத்து துடைத்து சிரித்துக் கொண்டிருந்தது அம்மா தான். இந்த நாளில் அவள் இருந்திருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும். இன்னும் மனம் அந்த வெறுமையில் இருந்து மீளவில்லை. எப்போதும் எனை மீட்டு மடிதந்து, அரவணைத்து, கண்ணீர் துடைத்து, சிரிக்க வைத்து தூங்க வைப்பது என் அன்புதான். அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், சிரிப்பதற்கான ஒரு காரணத்தை தேடித் தேடி சிரிப்பதுதானே வாழ்க்கை. எப்போதும் போல் அப்பா, அண்ணன் உண்டு. என்றென்றும் நண்பர்கள் தோள் உண்டு. அம்மாவிற்கு பிறகு என்னை மொத்தமாய் தத்தெடுத்துக் கொண்ட நீங்கள் உண்டு.

வேறென்ன சொல்ல. காதலைப் பற்றியும் அவளைப் பற்றியும் இந்த ஒரு வருடத்தைப் பற்றியும். மனம் நிறைந்து இருக்கிறது. அந்த முதல் நாளின் காதலும் க்ரேஸுமே இன்னும் எனக்குத் தீரவில்லை. மொத்த காதலையும் அள்ளி அள்ளி நனைக்க விரும்புகிறேன். இன்னும் வேண்டும் எனக்கு நாட்களும் நிமிடங்களும். அவள் குடும்பமும் எங்களை அரவணைக்கப் போகும் நாளுக்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறோம். காதல், காமம், கோபம், சாந்தம், சிரிப்பு, கண்ணீர், நிறை, குறை, இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கனவு, ஆசை, ஏக்கம் எதுவந்த போதும் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா...!!!
தோற்றங்கள் மாறிப்போகும் தோல்நிறம் மாறிப்போகும்
மாற்றங்கள் வந்துமீண்டும் மறுபடி மாறிப்போகும்
ஆற்றிலே வெள்ளம்வந்தால் அடையாளம் மாறிப்போகும்
போற்றிய காதல் மட்டும் புயலினும் மாறாதம்மா !!!

அம்மா - இறக்கத் தகுதியற்றவள்.




‘இன்னும் ஒரு தோசை போதும்’ என்று குரல் கொடுத்தபின் வரும் தோசை, முந்தைய தோசைகளைவிட தடிமனாக இருக்கிறதென்றால், தோசை சுடுவது அம்மாவாகத்தான் இருக்கும். ‘டயட்ல இருக்கேன்னு எத்தன தடவ சொல்றது’ என்று அம்மாவை வைதாலும், அம்மா ஊட்டி விடுகையில் அளவுச் சாப்பாடென்பது நிராசைதான்.
‘சாதம் வடிச்சுருக்கேன்டா… சாப்பிட்டுட்டு போ’ என்றவளிடம், ‘நான் ஆபிஸ்ல போய் டேஸ்ட்டான சாப்பாடு சாப்பிடப் போறேனே’ என்று எப்போதும்போல் கிண்டலடித்துவிட்டு கிளம்பிப் போய் மாலை வீடு வந்தேன். அதன்பின் அம்மா கையால் ஒரு பருக்கைகூட சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை. 'நெஞ்சு படபடன்னு அடிச்சுக்குதுடா. தொட்டுப் பாரேன்’ என்று அழத்தொடங்கினாள் அம்மா. வீட்டில் நான் மட்டும்தான் இருந்தேன். ‘அய்ய… இதுக்கேம்மா அழற. வா, ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு வரலாம்’. போனோம். திரும்ப அவள் வரவில்லை. மூன்று மருத்துவமனைகளுக்குச் சென்று காத்திருந்து, 'மருத்துவர் இல்லை, அனுமதி இல்லை' என்று சொல்லி, நான்காவதாய் ஒரு மருத்துவமனைக்குள் நுழையும்போது என் கையை மிகமிக இறுக்கமாய் பிடித்தபடி படியேறினாள் அம்மா. அந்த இளஞ்சூடு என் கருவறை வெம்மை. அதன்பின் அம்மாவின் கையை நான் தொடுகையில், அது சில்லிட்டு போயிருந்தது. அன்று இரவு என்னோடு சிரித்து பேசிய, தோளில் கைப்போட்டு பைக்கில் வந்த, இறுகக் கைப்பற்றி நடந்த என் அம்மாவை, அடுத்த நாள் மதியம் அஸ்தியாக்கி அதே இளஞ்சூட்டோடு கையில் கொடுக்கையில் சத்தியமாய் செத்துதான் போனேன்.

அம்மா ஒரு குழந்தை. வார்த்தைக்காக அல்ல. நிஜமாய் அவள் ஒரு குழந்தை. வீட்டுக்கு நான் வாங்கி வரும் சாக்லேட்டுகளை தின்றுவிட்டு, ‘நான் சாப்ட்டேனே’ என்று என்னைப் பார்த்து சிரிக்கும் குழந்தை. ‘கொஞ்சம் வேர்க்கடலை வாங்கிக் கொடுடா’ என்று அத்தனை வாஞ்சையாய் கேட்கும் குழந்தை. ‘நேத்து கடைல வாங்குன அந்த மாவு என்னமாய் பொங்குச்சு தெரியுமா’ என்று கண்சிமிட்டி ஆச்சர்யப்படும் குழந்தை. அம்மாவுக்கென்று தனியாக கனவு ஏதும் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், எங்களுக்காக வாழ்வதை மட்டுமே தன் கடமையாய் ஏற்றுக்கொண்டவள் என்று உறுதியாக கூற முடியும். காலை 4 மணிக்கு அப்பாவுக்கு காபி போட்டுத் தருவதில் தொடங்கி இரவு 11.30 மணிக்கு அண்ணனுக்கு தோசை ஊற்றித் தருவதில் முடியும் அவளின் ஒரு நாள். நடுவில் சீரியல், சமையல் புத்தகம், போன் பேச்சுகள், பல ஏக்கங்கள், கொஞ்சம் கண்ணீர்... இவ்வளவுதான் அம்மா. இப்போது எப்போதாவது அப்பாவுக்கு காபி போட எழும்போதோ, அல்லது வீட்டு வேலைகள் நெருக்கும்போதோ வரும் சலிப்பு, அம்மாவை நினைத்தால் பறந்தோடி விடுகிறது. எப்படி அம்மாக்களால் மட்டும் சுயநலமில்லாமல் வாழ முடிகிறது?

அம்மா எங்களுக்கானவள் மட்டுமல்ல. எங்களை சேர்ந்தவர்களுக்குமானவள். எங்கள் வீட்டுக்கு ஒருமுறை நீங்கள் வந்துவிட்டால் சாப்பாடு சாப்பிடாமல், ஒரு கப் காபியாவது குடிக்காமல் உங்களால் வெளியே போக முடியாது. அம்மா அனுப்பவே மாட்டாள். பல நேரங்களில், எதிர்பாராமல் நண்பர்கள் யாராவது வந்துவிட, தனக்கு வைத்திருந்த உணவை அவர்களுக்கு அளித்து, நேற்றைய பழைய சாதத்தோடு தனது இரவை முடித்திருக்கிறாள் அம்மா. ஒரே ஒருமுறை அம்மாவை நீங்கள் பார்த்து பேசிவிட்டால், இன்னொரு முறை எங்கள் வீட்டிற்கு நிச்சயம் நீங்கள் வருவீர்கள். அம்மாவை உங்களுக்கு அவ்வளவு பிடித்துப்போகும். இதுவரை வீட்டுக்கு நீங்கள் வந்திருக்கவில்லை என்றால், அந்த தேவதைப் பெண்ணை நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள்.

அம்மாவுக்கென்று பெரிதாக என்ன ஆசைகள் இருந்துவிட்டது? ஒரு தங்க நகை வாங்கணும். ஒரேயொரு பட்டுப் புடவை வேணும். அதிகபட்சமாக சொந்த வீட்டுல வாழணும். இவ்வளவுதான். அவள் ஒரு தங்கச் செயின் வைத்திருந்தாள்தான். சென்ற வருடம், நான் குறும்படம் எடுக்க ஏற்பாடுகள் செய்து, பணமில்லாமல் நின்றபோது, அந்த செயினை அடகு வைத்து எனக்கு பணம் கொடுத்தாள். இறக்கும் அன்று காலையில், ‘முதல்ல காசு சேத்து வெச்சு உனக்கொரு ஆட்டோமேடிக் வாஷிங்மெஷின் வாங்கணும்மா’ என்றபோது, அம்மா தயக்கத்தோடு கேட்டது ‘அப்படியே அந்த செயினை திருப்ப முடியாதோடா?’. இன்னும் அதை நான் மீட்கவில்லை. நிச்சயம் மீட்டுவிடுவேன். யார் கழுத்தில் போட?

உங்கள் அம்மாக்களுக்கும் நிச்சயம் ஒரு ஆசை இருக்கும். அது நிச்சயம் உங்கள் சம்பாத்யத்துக்கு உள்ளேதான் இருக்கும். நாம் சம்பாதிப்பதைத் தாண்டி ஆசைப்பட அம்மாக்களுக்குத் தெரியாது. அது என்னவென்று கேளுங்கள். துருவித் துருவிக் கேளுங்கள். இல்லை என்று மறுத்தாலும் இறுதியில் தயங்கித் தயங்கிச் சொல்வாள் அந்த சிறு ஆசையை. உடனே நிறைவேற்றிவிடுங்கள். பணம் வெளியில் புரட்டியாவது நிறைவேற்றிவிடுங்கள். உங்களுக்கு பணம் வரும் வேளைகளில் ஆசைகளை நிறைவேற்றி அழகு பார்க்க அம்மா இல்லாமல் போகலாம். அந்த வலி கொடுமையாய் இருக்கிறது.

பணமின்மை வருந்தச் செய்வது இதுபோன்ற சூழல்களில்தான். குற்றவுணர்ச்சியில் தவித்துக்கொண்டிருக்கிறோம், எல்லாவற்றையும் செய்த அம்மாவுக்கு எதுவும் செய்யவில்லையே என்று. நாளை காட்சிகள் மாறும்போதும், கனவுகள் பலிக்கும்போதும், உடனிருந்து கண்ணீர் மறைத்து சிரிக்க அம்மா இல்லையே என்ற நினைப்புதான் முதலில் வரும். ‘சினிமால டைரக்டராகப் போறேன். அதுவரைக்கும் பெரிசா பணம் எதுவும் வராது’ என்றபோது, ஒரு சிறிய முகச்சுழிப்புக்கூட இல்லாமல் தலையாட்டிவிட்டு கடைசி வரை ‘எப்படா படம் எடுப்ப? இப்ப நீ வேலை செய்யுற படத்துல உன் பேர் வரும்லடா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் அம்மா. இப்போது கத்த தோன்றுகிறது. ‘நான் உதவி இயக்குநராக பணியாற்றும் படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். முதல் முறையாக தியேட்டர் ஸ்கீரினில் என் பேர் வரும். வா. வந்து பாரு. பாத்துட்டு அழு’.

அம்மா அதை பார்ப்பாள். ஆம். அம்மாவின் கண்களை தானம் செய்திருக்கிறோம். எங்காவது இருந்து அந்த கண்கள் எங்கள் படத்தைப் பார்க்கும். என் பெயரை பார்க்கும். நாளை என் சினிமாவில் நான் ஜெயித்து, எனக்கான மேடைகளில் நிற்கும்போது, அத்தனை விருதுகளையும் அங்கீகாரங்களையும் மொத்தமாக அம்மாவுக்கு சமர்ப்பிக்கும்போது, உலகின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு அந்த இரண்டு கண்களும் என்னைப் பார்க்கும்தானே? அப்படிப் பார்க்கும்போது, அந்த கண்கள் கலங்கும்தானே?

- கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி 

[விகடன்.காமில் வெளியான பதிவு
http://news.vikatan.com/article.php?module=news&aid=33889]

அப்பா 61 !!!




இன்று அப்பாவிற்கு பிறந்தநாள். போன வருடம் அப்பாவிற்கு 60 வது பிறந்தநாள். அம்மாவின் ஆசைப்படி அனைவரையும் கூட்டி, இருவருக்கும் அறுபதாம் திருமணம் கொண்டாடினோம். எனக்குத் தெரிந்து அம்மா மிகவும் விரும்பிக் கேட்ட, மிகவும் பார்த்து பார்த்து செய்த நிகழ்வு அதுதான். அத்தனை சந்தோஷமாய் இருந்தாள். இன்றும் அம்மா இருந்திருக்க வேண்டும்.

அப்பா மேல் அம்மா வைத்திருந்த அளவு கடந்த அன்பும் மரியாதையையுமே அப்பா சம்பாதித்த ஒரே பெருஞ்சொத்து என்பேன். அப்பாவைப் பற்றித்தான் எழுத வந்தேன். அம்மாவை தவிர்த்து அப்பாவை எழுதவே முடியவில்லை. அம்மாவை தவிர்த்து நாங்கள் யாருமே இல்லை. எத்தனை அன்பையும் வெளிப்படையாய் காட்டத் தெரியாது அப்பாவிற்கு. பணத்தாள்கள் கொட்டும் பல வாய்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் தவிர்த்து எப்போதும் ‘தீக்கதிருக்காக’ இருப்பதே எங்களுக்கான பெருமை. கசக்கிப் போடும் நெருக்கடிகள் தொடர்ந்து வந்தாலும், பணத்திற்காக இம்மியளவும் கொண்ட கொள்கை தவறாது நேர்பாதையில் செல்லும் அப்பாவின் வாழ்க்கைதான் எங்களுக்கான பாடம். சொல்லப்போனால் அதுதான் அப்பா. உருவத்தில் மட்டுமல்லாது உள்ளத்திலும் அப்பாவைப் போல் இருக்க வேண்டுமென்றே ஒவ்வொரு நாளும் நெஞ்சில் நினைத்து உறுதியோடு கடக்கிறேன். வாழ்ந்தும் காட்டுவேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. சென்ற வருடப் பிறந்தநாளுக்கு உங்களுக்கும் அம்மாவிற்கும் நாங்கள் கொடுத்த பரிசு பின்சுவற்றில் இருக்கிறது. அம்மா வெட்கத்தோடு சிரித்துக் கொண்டிருக்கிறாள் !!!

Friday, November 16, 2012

துப்பாக்கி - மாற்றியமைக்கப்படும் மாஸ் ஃபார்முலா



படம் சூப்பர் ஹிட் என்று இந்நேரம் தெரிந்திருக்கும். இவ்வருடத்தின் மிகப்பெரிய வசூல்வாரியாகவும் இருக்கக்கூடும். இத்தருணத்தில் இப்படத்தின் விமர்சனத்தை மட்டுமே எழுதத் தோன்றவில்லை. இதன் மூலம் கொஞ்சம் மசாலா சினிமாவையும் அலசலாம் என்று நினைக்கிறேன். 





90 களில் வந்த ரஜினி படங்களில் சில பொதுவான அம்சங்கள் இருக்கும். ரஜினிக்கே ஏற்ற மாஸ் அயிட்டங்கள் இருக்கும். ரசிகர்களைக் கதறச் செய்யும் சில சீன்கள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் திரைக்கதையோடு பிணைக்கப்பட்டிருக்கும். துண்டாக தெரியாமல் மிகக் கவனமாக கதையோடு முடிந்தவரையில் ஒட்டவைக்கப்பட்டு, ஒரு கோர்வையாக, ஆனால் ரஜினிக்கேற்ற சில தீனிகளும் தூவப்பட்டு வந்திருக்கும். அந்தப் படங்கள் அனைத்தும் அந்தந்த வருடங்களின் ப்ளாக்பஸ்டர்களாக மாறியது. உதாரணம், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை. ரஜினிக்கு அடுத்த தலைமுறையில் உருவான மாஸ் ஹீரோக்கள் விஜய்யும் அஜீத்தும். ஏதோ ஒரு காரணத்துக்காக முதல் காட்சிக்கு சும்மா கைதட்டிக்கொண்டே, விசிலடிக்க வேண்டும் என்று பாக்ஸ் ஆபிஸ் முன்னால் விடிகாலையில் க்யூ கட்டும் ரசிகனுக்கு இவர்கள் இருவரும் கிடைத்தார்கள். அந்த கைத்தட்டல்களையும், விசில்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஆனால் ரஜினி படங்கள் விசிலடிக்கப்பட்டதற்கான காரணங்களை இந்த இருவரின் படங்களும் ரசிகனுக்கு தந்ததா என்றால் நிச்சயம் இல்லை. ஆனாலும் ரசிகன் விசுவாசமாக கைத்தட்டிக் கொண்டு தான் இருந்தான். 








ஆனால் இவர்கள் தலைமுறையில் ஒரு ஆபத்தான ஃபார்முலா உருவாகியது. அது, விஜய்யும் அஜீத்தும் திரையில் வந்தாலே போதும், படம் ஓடி விடும் என்று இவர்களே ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இவர்களை ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்கவும் ஒரு நல்ல திரைக்கதை (கில்லி, போக்கிரி, தீனா, பில்லா) தேவைப்பட்டது என்பதை இவர்கள் போகப் போக மறந்து போனார்கள். தங்களை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு பலபல குப்பைகளை ரசிகனின் தலையில் கொட்டிக் கொண்டே வந்தனர். அவனும் எல்லாவற்றையும் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனாக தாங்கிக் கொண்டு கைதட்டிக் கொண்டே வந்தான். இவர்கள் வழியில், வித்தியாசமாய் நடித்து தனியிடம் பிடித்து வந்த விக்ரமும் சூர்யாவும் பின் கார்த்தியும் கூட மாஸ் நாயகர்கள் ஆகும் ஆசையில் சில சுவாரசியமான படங்களுக்கு பிறகு (தில், தூள், சிங்கம், அயன்) நாயகனை முன்னிறுத்தும் குப்பைகளை அள்ளித் தெளித்தனர் (கந்தசாமி, ராஜபாட்டை, ஆதவன், மாற்றான், சகுனி). பாவம் ரசிகன் எத்தனை நாள் தான் விசுவாசமாய் கைதட்டிக் கொண்டே இருப்பான். சோர்ந்தான். இருப்பினும் கைதட்டுவதை விடவில்லை. ஆனால் சற்று மந்தமாகத் தட்டினான். அவ்வளவுதான். இந்த சினிமாக்களின் அடிநாதமான வசூலை அதுவே ஆட்டிப்பார்த்தது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் மசாலாப் படங்கள் தலைகுப்புறப் படுத்துப் போனது. இதை வைத்தாவது இவர்கள் திருந்தியிருக்கலாம். ஆனால் இவர்கள் மாற்றியது, படத்தின் லொக்கேஷன்களையும், தொழில்நுட்பங்களையும் பட்ஜெட்டையும் தானே தவிர, கதையையோ திரைக்கதையையோ அல்ல. இது போன்று தொட்டுத் தொடர்ந்து வந்த இந்த பாரம்பரியத்தைத் தான் உடைத்திருக்கிறது துப்பாக்கி. 



ஆம், என்னளவில் விஜய்க்கும் அஜீத்திற்கும் இருக்கும் ரசிகர் பலம் அளப்பரியது. அதற்கேற்ற ஒரு படத்தைக் கூட இவர்கள் கொடுக்கவில்லை என்பேன். ஒவ்வோர் சுமாரான படங்களுக்கும் ரசிகன் தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டு இதுதான் எங்க தலைவர் மாஸ் என்று இதுவரை மார்தட்டி வந்தான். ஆனால் முதல் முறை, விஜய் தன் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் தீனி போட்டிருக்கிறார் என்று கூறலாம். நிறைய காட்சிகளில் விஜய்க்காக மட்டும் அல்லாமல் காட்சிகளுக்காக ரசிகர்கள் தியேட்டரில் கூப்பாடு போடுகிறார்கள். இதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்தது. இனியும் நாயகர்களை மட்டும் வைத்து படங்களை எடுத்துவிட முடியாது என்பது உணரப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கும், காட்சி அமைப்பிற்கும் நல்ல முக்கியத்துவம் கொடுத்து, அதில் நாசூக்காக ஹீரோயிச வேலைப்பாடுகள் செய்து, ரசிகர்களுக்கு பரிமாறப்பட்டிருக்கிறது. அவர்கள் வயிறார உண்கிறார்கள். அதற்கென இந்தப் படத்தில் குறைகளே இல்லையா எனலாம். நிறைய இருக்கின்றது. படு வழக்கமான க்ளைமேக்ஸ், முஸ்லிம்களை தீவிராதிகளாகவே காட்டும் சிறுபிள்ளைத்தனம், தேவையே அற்ற பாடல்கள் என பலப்பல. இனியும் ரசிகர்களுக்காகத் தான் பாடல் வைத்தேன் என்று இயக்குநர்கள் பூ சுற்ற முடியாது. தேவையற்ற பாடல்களின் போது, முதல் நாள் முதல் காட்சிகளிலேயே சிகரெட்டுகள் பற்ற வைக்கப்படுகின்றன. 



ஆனாலும் இப்படம் இக்குறைகளை மறக்கடிக்கக் காரணம் நிச்சயம் ஹீரோயிசம் தாண்டிய திரைக்கதை அம்சங்கள் தான். மாஸ் படங்களுக்கு யாரும் இங்கே எதிரிகள் கிடையாது. அலசிப் பார்த்தால் ஜேம்ஸ்பாண்ட் படங்களே மாஸ் படங்கள் தான். ஆனால் அது இங்கே தனி மனிதத் துதியாகவும், ஹீரோ வந்தா, நின்னா, நடந்தா போதும் என்றும் அர்த்தப்பட்டு வந்தது. அந்நிலைமையைத் தான் துப்பாக்கி சுட்டிருக்கிறது எனக் கருதுகிறேன். சரியான திரைக்கதையில் சரியான மாஸ் ஃபார்முலா என்று பலப்பல வருடங்களுக்கு பிறகு முழுக்க வேறு வகை ஸ்டைலில் 90 களின் ரஜினி வகைப் படமாக வந்துள்ளது. இனி மாஸ் படங்களும் கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டால் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறது. வெகு வெகு நாட்களுக்குப் பிறகு, ஏன் வருடங்களுக்குப் பிறகு ஒரு ப்யூர் மாஸ் கமெர்ஷியல் படம், நாயகனுக்காக மட்டும் அல்லாமல், வேறு பல திரை நுணுக்கங்களுக்காகவும் மெகா வெற்றியை ருசிக்கப் போகிறது. சுருக்கமாக சொல்லப் போனால், துப்பாக்கி வைத்த குறியை ஆல்மோஸ்ட் சுட்டே விட்டது. நான், துப்பாக்கி படம் தமிழ் சினிமா உலகின் ஃபார்முலாவையே புரட்டிப் போட்டு விட்டது என்று கூசாமல் சொல்லவில்லை. ஆனால் ஒரு நல்ல மாற்றத்திற்கான துவக்கப்புள்ளியை இப்படம் இட்டிருக்கிறது என்று தைரியமாகக் கூறுகிறேன். 



என்னடா ஒரு மசாலா படத்திற்கு போய் இவ்வளவு பெரிய விமர்சனமா என்ற ஒரு கேள்வி எழலாம். நன்றாக கவனித்தால் நான் இப்படத்தை பற்றி இங்கே எழுதியிருப்பது மிகக் குறைவு. ஒட்டுமொத்த மசாலா படங்களின் நிலையையும், அதன் இலக்கணங்கள் மாற்றியமைக்கப்படுவதையும் தான் எழுதியிருக்கிறேன் என்பது, ஆழ்ந்து படிப்பவர்களுக்குப் புரியும் என நம்புகிறேன்.

Tuesday, November 6, 2012

ராயல் சல்யூட் !!!


மதுரையில் ஏற்பட்ட ஓர் அனுபவம். கொளுத்தும் வெயில். நானும் இரு நண்பர்களும், மதிய உணவு முடித்துவிட்டு, ஒரு கடையில் டீ, குளிர்பானம் (பொவண்டோ !) குடித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு வயதான பெரியவர், எண்பது வயதைத் தாண்டியிருப்பார், தள்ளாடியபடி அருகில் வந்தார். கைகளில் பர்ஸ்களும், செயற்கை மாலைகளும் வைத்திருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் சென்று வேண்டுமா என்று கேட்டு விற்றுக்கொண்டிருந்தார். இறுதியில் எங்கள் அருகேயும் வந்து ‘வேணுமா’ என்று கேட்டார். அந்த பொருட்கள் எங்களுக்கு தேவையில்லாததால், வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். உச்சி வெயிலில் அவர் தள்ளாடியபடி சென்றதைப் பார்த்து, பரிதாபப்பட்ட நண்பர், அவரை அழைத்து, ‘ஏதாவது சாப்படறீங்களா, டீ சொல்லட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில், ‘அதெல்லாம் வேண்டாம். இதுல ஏதாவது வாங்கிக்கோங்க. நானே வாங்கி சாப்பிட்டுக்கறேன்’ . 




ஒரு கணம், ஆடிப்போன நண்பர், செயற்கை மாலைகளை வாங்கி அதற்கான பணத்தைக் கொடுத்தார். அவரும், பணத்தை வாங்கிவிட்டு, தள்ளாடியபடி அடுத்தவரிடம் அந்த பணத்தை விற்பதற்கு தள்ளாடியபடி சென்றார்.

ஒரு நொடியில், பளாரென்று அடித்த பதில் அவருடையது. எங்களின் பரிதாபத்தை ஒரே வார்த்தையில் துடைத்துச் சென்றார். ‘நீங்க என்னடா என்ன பார்த்து பரிதாபப்படுறது. எனக்கு ஓசில லாம் ஒன்னும் வேணாம். ஏதாவது பொருள் வாங்கிக்க. நானே உழைச்சு சம்பாதிச்சு சாப்டுக்கறேன்’ என்றது அவரது பதில். என்ன ஒரு சுயமரியாதை, உழைக்கும் வெறி. அவரது வயதில் இந்த அளவிற்கு ஒரு தன்னம்பிக்கையும் உழைப்பும் எனக்கு வருமா என்று தெரியவில்லை. வரவேண்டும் என்று என்னையே நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன். நாம் இந்நேரம் எங்காவது அமர்ந்து கொண்டு இந்த பதிவை டைப் செய்து கொண்டு, படித்துக்கொண்டு இருக்கும் இந்நேரத்திலும், நிச்சயம் அந்த உழைப்பாளி மதுரைத் தெருக்களில் ஏதேனும் பொருள்களை விற்று உழைத்துக்கொண்டுதான் இருப்பார். இவரைப் பார்த்தாவது, உக்காந்தே ஓ.பி அடிக்கற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருந்தணும். இந்த உழைப்பாளிக்கு லைக் போடும் உங்கள் அனைவர் சார்பிலும் ஒரு ராயல் சல்யூட் அடித்துக் கொள்கிறேன் !!!

Sunday, April 1, 2012

சண்டே ஸ்பெஷல்

ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக விடிகிறது.

தினம் நைட்ஷிஃப்ட் பார்க்கும் நண்பன், ‘அப்பாடா கிட்டத்தட்ட ரெண்டு நாள் ரெஸ்ட்தான்டா’ என்று படுக்கையை விரிக்கிறான். அதிகாலை முதல் பின்னிரவு வரை ஓயாமல் உழைக்கும் மக்கள் அருகில் ஒரு குவார்ட்டருடன் இன்னும் எழுந்திரிக்க மனம் வராமல் ப்ளாட்பாரங்களில் படுத்திருக்கிறார்கள். கடற்கரைகளில் ஒரு ஓரங்களில் கார்கள் பார்க் செய்யப்பட்டிருக்க மறு ஓரத்தில் தொப்பைகளை குறைக்க ஒரு கும்பல் ஓடியாடியபடி இருக்கிறது. அவ்வளவு காலையிலும் பழங்கள், பழரசங்கள் என வியாபாரம் சூடு பிடித்தபடி இருக்கிறது. ஒரு பெரும் ஜனநெரிசலுக்கு ரங்கநாதன் தெருக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. மீனவர்களின் படகுகள் கடல்பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒரு வார மந்தமான வருமானத்தை ஒரே நாளில் எடுத்துவிட தயாராகிக் கொண்டு இருக்கிறார் முடிவெட்டும் அண்ணன். அப்பாக்களை முழுமையாக கவனிப்பதற்கே அம்மாக்களின் ஞாயிறுகள் செல்கின்றன. கிரிக்கெட் மைதானங்களிலும் திரையரங்குகளிலும் அண்ணன்களின் ஞாயிறுகள் கழிகின்றன.

குழந்தைகளின் ஞாயிறுகள் இன்னும் சிறப்பானவை. ஒரு வாரம் அடைந்து கிடந்த ஒரு அறையை விட்டு வெளியே வந்த ஒரு பறவையின் சிலிர்ப்போடே அவர்களின் ஞாயிறுகள் கழிகின்றன. பள்ளிகளின் ரீங்காரம் , மணிகள், மதிய லஞ்ச் டைம் வாசம் , சின்ன சின்ன விளையாட்டுகளை ஞாயிறுகள் அவர்களுக்கு மறுத்தாலும், பாண்டி, வீடியோ கேம், கோலி, படங்கள், அம்மாவின் திட்டு, அக்காக்களின் சண்டைகள், ஊர் சுற்றுவதாய் நினைத்துக் கொண்டு, இரண்டு மூன்று தெருக்கள் அலைவது என வேறு சில சின்ன சின்ன பரவசங்களை ஞாயிறுகள் அவர்களுக்கு தந்தபடியே இருக்கின்றது.

சில ஞாயிறுகள் வித்தியாசமாய் விடிவதுண்டு. மரணத்தின் மடியில் விடிந்த ஞாயிறுகளும் இருக்கின்றன. நண்பனின் மரணம் ஒன்று நிகழ்ந்த ஞாயிறின் வெப்பம் இன்றும் தகித்துக்கொண்டே இருக்கின்றது. சில ஞாயிறுகள் ப்ளாட்பாரங்களில் விடிந்திருக்கின்றது. சனிக்கிழமை இரவு நைட் ஷோ முடிந்து நண்பனின் வீட்டு ஓனர் கெடுபிடியால், ‘இருக்குறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு தமிழ்நாடு’, என்று டயலாக் விட்டுக்கொண்டு திருவான்மியூர் ப்ளாட்பாரங்களில் படுத்த ஞாபகம் அலாதியானது. அங்கு வழக்கமாக படுப்பவர்களின் பார்வைகள் ஆயிரம் அர்த்தங்களுடன் எங்களை மேய்ந்தது. நம் இடத்தை பறித்து விட்டார்கள் என்ற கோபமா, இல்லை, ‘இன்னிக்கு மட்டுந்தான் இருப்பானுங்களா இல்ல டெய்லி வந்து டேரா போட்ருவாங்களா’ என்ற சந்தேகமா என்று தெரியவில்லை. ஆனால் அது அருமையாயிருந்தது.

சனிக்கிழமை ராத்திரி முதல் ஞாயிறு வரை டாஸ்மாக்குகளுக்கு ஓவர்டைம். நேற்று சரக்கடிக்க அழைத்த நண்பன், ‘சீக்கிரம் வாடா, சைட் டிஷ் காலியாயிடும்’ என்றபோது தான் வாரஇறுதிகளின் மகத்துவத்தை உணர முடிந்தது. ஒரு வாரம் போனில் பேசியபடியே இருந்தாலும், பார்த்து கட்டியணைத்து, வெட்டிப்பேச்சு பேசி, நட்பு வளர்ப்பதும் ஞாயிறுதான்.

வாரநாட்களில் மூச்சு விட இடமளிக்காத ரயில்பெட்டிகளும் பேருந்துகளும் நின்று நிதானமாக காற்று வாங்கிக் கொண்டிருக்கும். டி.விக்களின் டி.ஆர்.பிக்கள் அதிகரிக்கும் நாள் ஞாயிறு. அதே போல் தியேட்டர்களும். ஞாயிறு ரசிகர்கள்தான் இன்னும் பற்பல தியேட்டர்களை மூடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். நமக்கு ஞாயிறு என்றால் ஒருவித கொண்டாட்டம், குதூகலம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.


கோயில்களில், சொந்தங்களின் இல்லங்களில், கட்சி, இலக்கிய கூட்டங்களில், பேஸ்புக்கில், கான்ஃபரன்ஸ் அறைகளில், டியூஷன் சென்டர்களில், பின் வீட்டு முற்றங்களில், எடிட்டிங் அறைகளில், கையில் பேனாவுடன் நியூஸ் ஸ்பாட்களில், வண்டிக்கு பைனான்ஸ செய்யும் சேட்டின் வீட்டு வாசலில், டிராஃபிக் சிக்னல்களில் (இன்று டிராஃபிக் போலீசுக்கு கொண்டாட்டமான நாள்), ஃபோம் மெத்தைகளில், தாய் மடிகளில், கடற்கரை மணலில், காதலியின் கரங்களில், தந்தையின் கைப்பிடியில், 11 மணி உண்ணும் காலை உணவுகளில்,  தூரத்து மாமாவின் பார்வைகளில், நண்பர்களின் தோள்களில், காலண்டர் ராசிகளில் ...............

இப்படி ஒவ்வோர் ஞாயிறும் ஒரு சேதியை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. ஒரு வாரகால உழைப்பிற்கான இளைப்பாறுதலாகவும் அடுத்த வாரத்திற்கு தயாராவதற்கான முன்னேற்பாடகவும் நம் ஞாயிறுகள் இருக்கின்றன.

சிலரின் ஞாயிறுகள் கோல்ஃப் க்ளப்பிலும், பீச் ரிசார்ட்டிலும் விடிகின்றன. போதைதான் குறிக்கோள் என்றாலும், அது கிடைப்பது மானிட்டரிலா இல்லை ஸ்காட்ச்சிலா என்பதுதான் இச்சமூகத்தில் ஒரு மனிதனில் ஸோ கால்ட் ஸேடேடஸை தீர்மானிக்கிறது.

சில மனிதர்களுக்கு ஞாயிறுகள் எந்த வித்தியாசமும் இன்றி கடந்துபோகின்றன. ஞாயிறுகளிலும் சில கைகள் செருப்பு தைத்தபடியேதான் இருக்கின்றன. மலம் அள்ளியபடியே தான் இருக்கின்றன. பிச்சை எடுத்தபடியேதான் இருக்கின்றன.ஜெயில் கம்பிகளை எண்ணியபடியே இருக்கின்றன. கூட்டமும் வரவேற்பும் குறைந்தாலும் பறை அடித்தபடி, கூத்தாடியபடியே இருக்கின்றன.  சில கால்கள் பணம் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றன. சில உடல்கள் தம்மை விற்றபடியே இருக்கின்றன. வாழ்க்கை விடுமுறை விடாது அவர்களை அடித்துக்கொண்டே இருக்கின்றது. அவர்களுக்கான ஞாயிறு எப்போது வரும் என்று தெரியவில்லை.

இந்த ஞாயிறு முட்டாள்கள் தினமாக விடிந்திருக்கின்றது. சில நேரங்களில், முட்டாளாக இருப்பது எவ்வளவு சுகம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இருந்தாலும் ஞாயிறு நமக்கு தரும் அனுபவம் பரவசம் நிறைந்தது. அற்புதமானது. ரசிக்கத்தக்கது. வார நாட்களில் நாம் விடுப்பு எடுத்தால் கூட அவை ஞாயிறுகளின் அருகில் கூட வரமுடியாது. இதுவரை எத்தனை ஞாயிறுகளை கடந்திருப்போம், என்னென்ன செய்திருப்போம் என்று யோசித்து பார்க்கிறேன். எண்ணங்கள் வந்து கொட்டியபடியே இருந்தாலும், சென்ற ஞாயிறில் என்ன செய்தேன் என்பதுகூட தெளிவாக நினைவில் இல்லை.

ம்ஹ்ம்...இனிப்புக் கடைக்குள் நுழைந்து இதில் எந்த ஸ்வீட் இனிக்கும் என்றால் என்ன சொல்வது ???